வேலைகள் - God Building?
டிசம்பர் மாதம், அதாவது புதிய ஆண்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் புதிய ஓர் அணுகுமுறையைத் தொடங்க வேண்டியுள்ளது. எப்படி 10 ஆண்டுகளுக்கு முன்னர் புற உலகைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சின் மூலதனம் நூலைப் படிக்க, பின்பற்ற, கற்க, ஆய்வு செய்யத் தொடங்கினேனோ அது இன்றுவரை தொடர்கிறதோ அதுபோல அகஉலகைப் புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலை அது போலவே படிக்க, பின்பற்ற, கற்க ஆய்வு செய்யத் தொடங்க வேண்டும்.
புற உலகைப் பற்றி நமது அனுபவவாத புரிதல்கள் ஒருபுறமிருக்க, உண்மையான நிலைமை என்பதை கோட்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்கிறோம். மனிதரின் உணர்வுநிலை புறநிலையால் தீர்மானிக்கப்படுகிறது, புறநிலை உணர்வுநிலையால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது மார்க்சின் ஃபயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் முதன்மையானது. அதே நேரம், அவர் புறநிலை மீது மனித உணர்வுள்ள செயல்பாட்டின் முதன்மையை அதே ஆய்வுரைகளில் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அகநிலையை பேணி வளர்ப்பது, மனதை பண்படுத்துவது (cultivation of mind) என்பது மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு எதிரானது இல்லை. மார்க்சும் எங்கெல்சும் ஐரோப்பாவின் முன்னேறிய பண்பாட்டுப் பின்புலத்தில் அகநிலையை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டு புறநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் மீது முழு கவனம் செலுத்தினர். ஐரோப்பிய அகநிலை கிறித்தவ அகநிலை, அது தன்னுள்ளேயே தனிநபரை மையமாகக் கொண்ட தன்னுள்ளேயே மூழ்கிக் கிடந்திருக்கலாம்.
ரசியாவில் கிட்டத்தட்ட நான் இப்போது முன்வைத்து வரும் God Buildingக்கு எதிராக லெனின் கடுமையாக எழுதியுள்ளார். பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற நூலில் லூனச்சார்ஸ்கியின் கடவுளைக் கட்டமைக்கும் முயற்சிக்கு எதிராக சாடியுள்ளார். அது தொழிலாளி வர்க்கத் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து விடும், தொழிலாளர்களை சீர்திருத்தவாதத்துக்குள் மூழ்கடித்து விடும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புரட்சிக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்திலும் சரி, இன்றுவரை சீனாவிலும் சரி இந்த God Building பற்றி பெரிதாகப் பேசவில்லை. சீனாவில் கன்ஃபூசியஸ் அறநெறிகளை வலியுறுத்துகிறார்கள். சீனப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள். அது ஒரு வகையில் God Building வகைப்பட்டதுதான்.
இது தொடர்பாக மார்க்சின் ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள், புனிதக் குடும்ப், ஜெர்மானிய கருத்தியல் ஆகிய நூல்களை வாசிக்க வேண்டும். லெனினின் பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற நூலை மீண்டும் வாசிக்க வேண்டும்.
இதற்கிடையில் சுமத்தப்படும் வேலைகள்.
முதலில் அம்பேத்கர் ஆக்கங்கள்
1. இந்து மதத்தின் புதிர்கள் - இதன் மூன்றாவது தொகுதியை மட்டும் படித்து சரிபார்க்க வேண்டும்.
2.
பௌத்தம்
-
இதில்
மூன்றாவது,
நான்காவது
தொகுதிகளைப் படிக்க வேண்டும்.
3.
காந்தியம்
-
இந்தத்
தலைப்பை இன்னும் தொடங்கவேயில்லை.
4. சாதியம் இரண்டு தொகுதிகளை பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
5. இதன் பிறகு முஸ்லிம்கள், மாநிலங்கள், சட்டம், வட்டமேசை மாநாடு என்று போக வேண்டியுள்ளது.
இரண்டாவதாக, புதிய மார்க்சிய நூல்கள்.
1. நாட்டுப்புற ஏழை மக்களுக்கு - இதற்கு திருத்தங்கள் போட்டு அனுப்பியிருக்கிறார். இன்றைக்கு அதைச் சேர்த்து கொடுத்து விடலாம்.
2. மூலதனம் 1, 2, 3 - முடித்து இறுதி செய்யக் கொடுத்து விட்டேன். இவற்றை அச்செடுத்துக் கொடுத்தால் படித்து சரிபார்க்க வேண்டும்.
3. மூலதனம் 4, 5, 6 – இனிமேல்தான் சரிபார்த்துத் தொகுக்க வேண்டும். இது பிப்ரவரியில்தான் தொடங்கும் என்று தெரிகிறது.
எப்படியானாலும், இந்தத் துறைக்கு தினமும் 3 மணி நேரம் ஒதுக்க வேண்டும். காலை 8 மணி முதல் 11 மணி வரை என்று திட்டமிட்டுக் கொள்ளலாம். அப்படியானால், 8 மணிக்கு அலுவலகம் போய் விட வேண்டும்.
இரண்டரை மணி நேரம் என்று வரையறுத்துக் கொண்டால், 8.30 முதல் 11, 11 முதல் 1.30 என்று வந்து விடும்.
மூன்றாவதாக, மூலதனம் நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும். நூலை வெளியிடுவதற்குத் தயாரிக்க வேண்டும்.
இதற்கு மதிய உணவுக்குப் பிந்தைய நேரத்தை ஒதுக்கலாம். 2 மணி முதல் 5 மணி வரை இந்த வேலையைச் செய்யலாம்.
திங்கள், செவ்வாய், புதன், வியாழன் நான்கு நாட்களிலும் 5.30 முதல் 7.30 வரை உள்ள நேரத்துக்குத் திட்டமிட வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் மேலே சொன்ன மூன்று வேலைகளில் எது அழுத்திக் கொண்டிருக்கிறதோ அதற்கு செலவிடலாம்.
வெள்ளி, சனி இரண்டு நாட்களிலும் 5.30 முதல் 9.30 வரை உள்ள நேரத்துக்கும் இவ்வாறே திட்டமிடலாம். மொத்தம் 4மணி நேரங்கள். அல்லது முதலில் சொன்ன மனதைப் பண்படுத்துவது பற்றி அம்பேத்கர், மார்க்ஸ், லெனின் படிப்பதற்குத் திட்டமிடலாம்.
வீட்டிலிருந்து 8 மணிக்குக் கிளம்ப வேண்டும், காலை உணவை முடித்து விட்டு 8.30க்கு அலுவலகம் போய் விடலாம்.
காலை 5 மணிக்கு எழுந்து விட்டால், காலைக் கடன்கள், திட்டமிடல், செலவுக் கணக்கு, அதிகாலை வாசிப்பு, நாட்குறிப்பு முடிப்பதற்கு ஏழரை மணி ஆகி விடும். அதன் பிறகு துணி துவைத்து, குளித்து புறப்படுவதற்குத்தான் நேர்ம இருக்கும்.
கடவுளைக் கட்டமைத்தல் என்ற கருத்தாக்கத்தை லெனின் தகர்த்து நிராகரித்திருக்கலாம். சோவியத் ஒன்றியத்தின் பலவீனங்களில் அதுவும் ஒன்றா? சீனாவின் பலவீனமான புள்ளி அங்கு இருக்கிறதா? (Achilles Heal). அல்லது இது இந்தியாவுக்கு மட்டும் தேவைப்படும் ஒன்றா?
அரசு உலர்ந்து உதிர்ந்த பிறகு மக்களை ஒழுங்குபடுத்துவது எதுவாக இருக்கும்? கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோழர்களுக்கிடையேயான உறவை எது தீர்மானிக்கிறது? கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மத்தியில் உளவியல் சிக்கல்கள் ஏன் பொதுமக்கள் மத்தியில் இருப்பதை விட அதிக விகிதத்தில் உள்ளது?
இந்தக் கேள்விகளை எழுப்பினேன்.
ஒன்று நமக்கும் செய்யும் வேலைக்கும் இடையிலான உறவு. இங்கு சிக்கலான வேலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றைச் செய்து முடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தின்கீழ் வேலை செய்ய வேண்டும். சமூகக் கட்டாயத்தின்கீழ் வேலை செய்ய வேண்டும். அதுதான் சமூக மனிதர்களாக, கம்யூனிஸ்டுகளாக வளர்வதற்கு நமக்கு உதவும்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடைமுறை மிகவும் தொளதொளப்பாக, அதிகாரமறுப்புவாத பிரிவினரை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரமறுப்புவாத குட்டிமுதலாளித்துவப் பிரிவினரையே கொண்டுள்ளது. இதிலிருந்து கட்டுக் கோப்பான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைக்க வேண்டியுள்ளது.
சீனாவிலும் ரசியாவிலும் அத்தகைய அணுகுமுறை தேவைப்பட்டது. அதிகாரமறுப்புவாதியாக, ஒழுங்கின்மையில் முழுகிப் போயிருந்தவர் புறச் சூழலாலேயே செய்ய வேண்டிய வேலைகளை நோக்கிச் செலுத்தப்படுகிறார். அவ்வாறு செலுத்தப்படாதவர்கள் வழிப்பாதையில் விழுந்து ஒதுக்கப்பட்டு விடுகின்றனர். இங்கு தொளதொளப்பாக இருந்தாலும் வாழ்க்கையை ஓட்டிச் செல்வதற்கான புறச் சூழல்கள் உள்ளன. முதலாளித்துவ ஜனநாயகம், மக்களைச் சார்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து பொறுப்பற்ற தன் விருப்பத்தின்கீழ் மட்டும் வேலை செய்யும் ஊழியர்களின் படைகளை உருவாக்கி வைத்துள்ளன.
இதே நிலைமை வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒவ்வொருவரும் தன்னை ஒரு cog in the wheel ஆக மாற்றிக் கொள்வது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அத்தகைய பிணைப்பு இல்லாமல் போகிறது. லெனின், ஒவ்வொருவரும் தன்னை cog in the wheel ஆக மாற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுத்து வைக்கிறார், செயல்படுத்துகிறார். அதுதான் அவரது பத்திரிகையை பரப்புரையாளனாகவும் கிளர்ச்சியாளனாகவும் அமைப்பாளனாகவும் பயன்படுத்தும் திட்டம்.
இந்தியாவில் அப்படி அமைப்பாக்கும் அணுகுமுறை ஏதாவது இருந்திருக்கிறதா? நேரடியாக, முதலாளித்துவ ஜனநாயக விதிகள் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது, அதனுடன் லெனின் உருவாக்கிய வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று கட்சிகள் கட்டப்படுகின்றன. எனவே, அமைப்புத் துறை மிக மிக முதன்மையானதாகவே இருக்கிறது. கோட்பாட்டுச் சிக்கல்தான் முதன்மையானது என்ற நிலைப்பாடு எங்கு போனது?
கோட்பாட்டை வளர்த்தெடுப்பது அல்லது கருத்தியலின் முன்னேற்றம்தான் அத்தகைய அமைப்புத் துறை தேவையை அடையாளம் காண முடியும். கோட்பாடு என்பது உடனடி, நேரடி புறநிலையைப் பற்றிய ஆழமான புரிதல், அதைத்தான் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியும் செய்திருந்தன. நமக்கு நமது உடனடி சமூகம் பற்றிய புரிதல் எங்கிருக்கிறது?
தொல் திருமாவளவன் நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறார். அவரும் அவரது கட்சியும் மிக ஆழமான சவால்களை எதிர் கொண்டுள்ளனர். நேற்று ராஜ்தீப் சர்தேசாய் பேசும் போது, ராகுல் காந்தி கருத்தியலாளராகவும் செயல்பாட்டாளராகவும் உள்ளார், அமைப்பைக் கட்டியமைப்பதற்கான bandwidth அவரிடம் இல்லை என்றார். மோடிக்கு ஒரு அமித் ஷாவைப் போல காங்கிரசில் ஒரு அமைப்புத் துறை தலைமை இல்லை என்றார்.
இது மிக மிக முதன்மையானதாகப்பட்டது. கருத்தியலும் செயல்பாடும் முதலில் இருக்க அதைத் தொடர்ந்து அவற்றோடு இயைந்த அமைப்புத் துறை கட்டியெழுப்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மிக மிக முதன்மையானவை. அதை ராஜ்தீப் சர்தேசாய் தெளிவாக முன்வைத்தார். அமைப்புத் துறை என்றாலே சுடுபால் பூனை போல விலகி ஓடிக் கொண்டிருப்பதற்குக் காரணம் அது பற்றிய கோட்பாட்டுப் புரிதல் இல்லாததுதான். எனவே, அதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு, கருத்தியல் தளத்தில் மூழ்கி விடுகிறோம். அது அறிவுப் பணியின் அபாயம்தான். இதிலிருந்து வெளியில் வர வேண்டும்.
புத்தரும் அவரது தம்மமும், materialism and empirio criticism, the holy family, the german ideology, மாவோவின் எழுத்துகள் என்று இதனைப் பேணி வளர்க்க வேண்டும். ஓராண்டுக்குள், இதில் தெளிவு ஏற்பட்டு விடும் என்று எதி்ர்பார்க்கலாம்.
அமெரிக்கா தலைமையிலான நியோகான்கள் காலில் கஞ்சி ஊற்றிக் கொண்டது போல அல்லது தோசைக்கல்லில் எறும்புகளைப் போல பதறத் தொடங்கியுள்ளார்கள். தென் கொரியாவில் இராணுவ ஆட்சியை சுமத்த முயற்சி, ஜார்ஜியாவில் தேர்தலுக்கு எதிராக வண்ணப் புரட்சி முயற்சி, சிரியாவில் ஆசாதுக்கு எதிரான அடிப்படைவாதப் படைகளுக்கு பச்சை விளக்கு காட்டியது இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது. பிரான்சில் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது, உக்ரைனில் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.
ஜோ பைடன் அரசிடமிருந்து அதிகாரம் கைமாறி டிரம்ப் கைக்குப் போவதற்கு முன்னால், துரித வேகத்தில் இந்த இரண்டு மாதங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்க இராணுவ தொழில்துறை கட்டமைப்பு. இன்னும் பல வெடிகுண்டுகளை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே, பாகிஸ்தானில், வங்க தேசத்தில், இலங்கையில் என்று அடுத்தடுத்த சீட்டுக் கட்டுகளை சரித்து விட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக