சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

 சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம் (மூலதனம் முதல் பாகம், ஜெர்மன் முதல் பதிப்புக்கு முன்னுரை, பக்கம் 26)

1. இன்றைக்கு அமெரிக்காவின் கண்களில் விரல் விட்டி ஆட்டிக் கொண்டிருக்கிறது, சீனா. 140 கோடி மக்களுக்கும் உணவும், உடையும், கல்வியும், மருத்துவமும் உத்தரவாதம் செய்வதில் தொடங்கி, நவீன தொழில்நுட்பங்கள் சிலவற்றில் (சூரிய மின்சக்தி, 5G/6G தொலைதொடர்பு தொழில்நுட்பம், மைக்ரோசில்லுகள், விண்வெளி பயணம்) அமெரிக்காவுக்கு ஈடுகொடுத்து விஞ்சியிருக்கிறது.

சீனா இதை எப்படி சாதித்தது? 30 ஆண்டுகளுக்கு முன்னர், சீனப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில்) இருந்தன. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் புதிய தாராளவாத முதலாளித்துவத்தின் கிடுக்குப்பிடியில் இருந்தன.

இந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? அது இந்த 30 ஆண்டுகளின் கதை மட்டுமா அல்லது அதற்கு முந்தைய 40 ஆண்டுகளும் (1945-க்குப் பிறகு) சீனாவின் வெற்றிக் கதையில் தாக்கம் செலுத்தினவா? இதில் சீனாவின் சோசலிச கூறுகளின் (கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தின்) பாத்திரம் என்ன? அன்னிய மூலதனம் நாட்டுக்குள் பாய்ந்ததன் விளைவுகள் என்ன?

2. முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை தவிர்க்கவியலாத முறையில் முந்தைய பொருளுற்பத்தி முறைகள் தனது பிம்பத்தில் மாற்றியமைத்திடுகிறது. அதாவது, இயற்கை பொருளாதாரத்தை சரக்கு உற்பத்தி பொருளாதாரமும் சரக்கு உற்பத்தியை முதலாளித்துவ சரக்கு உற்பத்தியாகவும் மாற்றியமைக்கிறது.

ஆனால், முதலாளித்துவப் பொருளுற்பத்திமுறை குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் தன் சிதைவுக்கான பொருளாயதக் காரணிகளைத் தோற்றுவிக்கிறது.

"முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக்குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுதலிப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுதலிப்பின் மறுதலிப்பு. இது உற்பத்தியாளருக்கு தனியுடைமையை மீண்டும் ஏற்படுத்தித் தருவதன்று; முதலாளித்துவ சகாப்தத்தால் வரப்பெற்ற கூட்டு-வேலையின் அடிப்படையிலும், நிலமும் உற்பத்திச் சாதனங்களும் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பதன் அடிப்படையிலுமான தனியாள் உடைமையை அவருக்கு அளிப்பது ஆகும்.

"தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவத் தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கனவே நடைமுறையில் சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட முதலாளித்துவத் தனியுடைமையை சமூகப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிட முடியாத அளவுக்கு நீண்ட நெடிய நிகழ்முறையாகும்; வன்முறை மலிந்த, கடினமான நிகழ்முறையாகும்; இது இயற்கைதான். முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமையைப் பறிப்பதாகும். இரண்டாவது பெருந்திரள் உடைமையாளம் ஒரு சிலரின் உடைமையைப் பறிப்பதாகும்" (மூலதனம் முதல் பாகம், அத்தியாயம் 32, முதலாளித்துவத் திரட்டலின் வரலாற்று வழிப் போக்கு, பக்கம் 1027).

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் வளர்ச்சியின் உச்சகட்டத்தில் அது ஏகாதிபத்தியங்களை தோற்றுவிக்கிறது. அதன்பிறகு, பின்தங்கிய (காலனிய-அரைக்காலனிய) நாடுகளில் முதலாளித்துவரீதியிலான வளர்ச்சி தொழிலாளி வர்க்கக் கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பிறகுதான் நடக்கிறது.

3. 1949-ல் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை தூக்கி எறிந்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டியது. நிலத்தை நாட்டுடைமையாக்கி (கிராமங்களில் கூட்டுடைமையாக்கி), தொழில்துறையை அரசுடைமையாக்கி, அதைத் தொடர்ந்து மாபெரும் பண்பாட்டுப் புரட்சியையும் நடத்தி முடித்தது சீனா.

அதன் பிறகு, தோழர் மாவோவின் மறைவுக்குப் பிறகு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் திரிபுவாதப் பாதையைப் பின்பற்றி முதலாளித்துவ நாடாக மாறி விட்டது என்று மார்க்சிய லெனினிய மாவோயிச இயக்கங்களும், இல்லை இல்லை சீனா சோசலிசத்தை இலக்காகக் கொண்ட பாதையையே பின்பற்றி வருகிறது என்று பிற கம்யூனிஸ்ட் கட்சிகளும் என மாபெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

1980-களுக்குப் பிறகு சீனாவில் தனியார் மூலதனம் செயல்படுவது பெருமளவு அனுமதிக்கப்பட்டது, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் சீனத் தொழிலாளர்களை கொடும் சுரண்டலுக்கு உட்படுத்தின. ஆனால், நிலத்தில் தனியுடைமை இன்மையும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியதிகாரமும், பொருளாதாரத்தின் உச்சமையங்களான வங்கி/நிதித்துறை, கனரக தொழில்கள் ஆகியவற்றில் அரசுத் துறை நிறுவனங்களின் ஆதிக்கமும் தொடர்கின்றன.

மூலதனம் செயல்படுவதாலேயே முதலாளித்துவ நாடு, மூலதனத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதாலேயே ஏகாதிபத்திய நாடு என்ற குறுக்கல்வாதத்தில் விழுவதோ, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியதிகாரம் இருப்பதாலேயே சோசலிச நாடு என்ற கற்பனாவாதத்தில் விழுவதோ தவறாகி விடும். இந்த இருகூறுகளுக்கும் இடையேயான உறவு என்ன, எந்தக் கூறு ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது என்பதுதான் தீர்மானகரமான காரணி.

4. சீனா, 1970-களில் மாபெரும் பண்பாட்டுப் புரட்சிக்குப் பின்னர் தொழில்நுட்பரீதியிலும் உற்பத்தியை சமூகமயமாக்குவதிலும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. சர்வதேச அளவில் சோவியத் ஒன்றியத்துடனான நட்புறவு துண்டிக்கப்பட்டு பொருளாதாரரீதியிலும், அரசியல்ரீதியிலும் இராணுவரீதியிலும் தனிமைப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீனப் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவது, உலக நாடுகளுடன் வர்த்தக, பண்பாட்டு உறவாடல் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்வது, அதே நேரம் சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான இன்றியமையாத முன்நிபந்தனையான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியதிகாரத்தைப் பாதுகாத்து வைப்பதும் என்ற உத்தியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன அரசு எடுத்தது.

1970-ல் தொடங்கி 1991 வரை சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்வதாகவும், 1990-க்குப் பிறகு அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகாமல் மேற்கத்திய நாடுகளுடன் பொருளாதார, தொழில்நுட்ப உறவுகளை வளர்த்துக் கொள்வதாகவும், 2008-க்குப் பிறகு தனது பிராந்திய (கிழக்கு, தென்கிழக்கு ஆசியா) உறவுகளில் வலுவான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், 2016-க்குப் பிறகு உலக அளவில் அமெரிக்காவுக்கு எதிராகவும் மாற்றாகவும் தனது அரசியல் பொருளாதார செல்வாக்கை பரப்புவதாகவும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலுத்தி இருந்தது.

இந்தச் செயலுத்தியின் மூலமாக, கடந்த 50 ஆண்டுகளில் சீனா, அமெரிக்காவுக்கு சவால் விடும் விதமாக பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்துள்ளது. அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் தன்னை தற்காத்துக் கொள்ள தயாரித்துக் கொண்டுள்ளது என்று இந்நூல் வாதிடுகிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெகுமக்களும் சீனாவின் கடந்த 75 ஆண்டுகால அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு நமது நாட்டிலும் 140 கோடி மக்களுக்கும் உணவும் கல்வியும் மருத்துவமும் உறுதி செய்து, தொழில்நுட்பரீதியாக முன்னேறிய நாடாக மாறுவதற்கான பாதையில் பயணிக்க வேண்டும். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தொழிலாளர், விவசாயிகள் (சிறு உற்பத்தியாளர்) ஆட்சியும், மாபெரும் பண்பாட்டுப் புரட்சியும் (சாதி ஒழிப்பு, மதவாத ஒழிப்பு, தேசிய இனங்களின் உரிமை) அவசியமாகும்.

5. சீனாவின் இந்த வியத்தகு எழுச்சியைத் தொடர்ந்து மேற்கத்திய ஆளும் நிறுவனங்களும், சிங்கப்பூர் போன்ற சீன பாரம்பரியம் கொண்ட தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் அறிஞர்களும் இது தொடர்பான ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர்.

a. The Long Game - China’s Grand Strategy to Displace American Order என்ற நூலை எழுதிய RUSH DOSHI அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை சிந்தனைக் குழாமான புரூக்கிங்ஸ் கழகத்தைச் (Brooking) சேர்ந்தவர் (இப்போது அமெரிக்க அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்).

1989 முதல் 1991 வரை நடந்த, மும்மை நிகழ்வுகள் என அவர் அழைக்கும் தியனான்மென் சதுக்க நிகழ்வு, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, ஈராக் போர் இவற்றைத் தொடர்ந்து சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி Hiding Capabilities and Biding Time (திறன்களை மறைத்தலும், காலத்துக்காக காத்திருத்தலும்) என்ற முழக்கத்தின்கீழ் அமெரிக்காவின் அதிகாரத்தை மழுங்கடிக்கும் (blunting) செயலுத்தியை பின்பற்றியது

2008-ம் ஆண்டில் உலகளாவிய நிதித்துறை நெருக்கடியின் அதிர்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா பலவீனமடைந்து விட்டதாக மதிப்பிட்ட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, கட்டியமைக்கும் உத்தியை (building) பின்பற்ற ஆரம்பித்தது. Actively Accomplish Something (முனைப்பாக சிலவற்றை சாதித்தல்) என்ற முழக்கத்தின் கீழ் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்த ஆரம்பித்தது.

இந்த மழுங்கடித்தல், கட்டியமைத்தல் உத்திகளின் மூலம் சீனா ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை மட்டுப்படுத்தி, பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்துக்கான அடித்தளத்தை உருவாக்கியது.

2016-க்குப் பிறகு நடந்த இன்னொரு மும்மை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு (பிரெக்சிட், டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆனது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மேற்கத்திய எதிர்வினையின் சொதப்பல்) சீனா விரிவாக்க உத்தியைப் பின்பற்ற ஆரம்பித்தது. Great Changes Unseen in a Century (நூறு ஆண்டுகளில் கண்டிராத மகத்தான மாற்றங்கள்) என்ற முழக்கத்தின் கீழ் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு சவால் விடும் பணியை தொடங்கியது.

b. இந்தியாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, 2021-ம் ஆண்டில்,  China - a new social-Imperialist Power! It is integral to the World Capitalist-Imperialist System (சீனா - ஒரு புதிய சமூக-ஏகாதிபத்திய சக்தி! அது உலக முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்புடன் ஒருங்கிணைந்தது) என்ற தலைப்பில் தனது ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணமும் இது போன்ற பல்வேறு கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது, 2014-ம் ஆண்டு என்.பி.டர்னர் முதலானோர் வெளியிட்ட Is China an Imperialist Country? - Considerations and Evidence என்ற ஆவணம்.

இந்த ஆவணம் லெனினின் ஏகாதிபத்தியம் என்ற கருத்தாக்கத்தை இன்றைய நிலைமைக்குப் பொருத்துவது எப்படி என்ற கேள்வியுடன் தொடங்கி, China as an integral part of the world capitalist-imperialist system என்று முடிவு செய்கிறது. மாவோயிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் துணைத்தலைப்பு இந்த ஆவணத்தின் 4-வது அத்தியாயத்தின் இதே தலைப்பு என்பதை குறித்துக் கொள்ளவும்.

சீனாவில் அன்னிய முதலீடுகள் செய்யப்படுவது அது ஏகாதிபத்திய நாடாக இருப்பதில் இருந்து தடை செய்யவில்லை என்று வாதிட்டு, சீனப் பொருளாதாரத்தின் அளவு அதில் ஏகபோக நிதித்துறை மூலதனத்தின் பாத்திரம், சீனாவின் விரிவாக்கமும் துணைநிலை ஏகாதிபத்தியத்தன்மையும் என்று மூலதன ஏற்றுமதி, இராணுவ விரிவாக்கம், அமெரிக்காவை எதிர்த்து நிற்பதற்கான நிறுவனங்களை கட்டியமைப்பது ஆகியவற்றை விளக்கி, இது சீனாவை ஏகாதிபத்திய சக்தியாக ஆக்குகிறது என்று முடிவு செய்கிறது.

எனவே, மாவோயிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து நிலைப்பாடுகளையும் இந்த ஆவணத்தை பரிசீலிப்பதன் மூலம் விமர்சன பகுப்பாய்வு செய்யலாம்.

சைதை



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்