அம்பேத்கரின் வாழ்வும் பணியும் - முழுமையில் இருந்து எனது புரிதல்

1. அம்பேத்கர் பிறந்த/வாழ்ந்த சமூக வாழ்நிலை, சாதிய படிநிலையாக கட்டமைக்கப்பட்ட, அதற்கு வெளியே தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைக் கொண்டது.

2. அந்த வாழ்நிலையில் மதம் (இந்து மதம் அல்லது பார்ப்பனிய மதம்) என்பது மனிதர்களுக்கிடையே சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கவில்லை. மாறாக, அது மனிதர்களை படிநிலை குழுக்களாக பிரித்து சுரண்டும் அமைப்பு முறையைக் கொண்டிருக்கிறது.

3. இது கொள்கையளவில் எல்லா மனிதர்களுக்கும் இடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் கிறிஸ்தவம் (ஐரோப்பா), இஸ்லாம் (மேற்கு ஆசியா), பவுத்தம் (கிழக்கு ஆசியா) போன்ற மதங்களில் இருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது.

4. இந்தியாவில் சாதியக் கட்டமைப்பும் அதைத் தாங்கிப் பிடிக்கும் இந்து மதமும் சமூக வர்க்கங்களுக்கு (வருணங்கள்) இடையேயான உறவுகளை வரையறுக்கின்றன. அவை சுரண்டலுக்கான மிக உறுதியான, மிக நுணுக்கமான கட்டமைப்பை உருவாக்கி, பராமரித்து, வளர்த்து வந்திருக்கின்றன.

5. இந்த சுரண்டல் கட்டமைப்புக்கு எதிராக, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் தமது கொள்கையாகக் கொண்ட பவுத்த, சமண மதங்களும் பிற்காலத்தில் இசுலாமும் மோதி ஒழிந்து போகின்றன அல்லது சாதியக் கட்டமைப்போடு இணைந்து விடுகின்றன.

6. இந்தியாவுக்குள் ஐரோப்பியர்கள் மூலமாக, குறிப்பாக ஆங்கிலேயர்கள் மூலமாக முதலாளித்துவ உறவுகள் புகுத்தப்பட்டது இந்த சுரண்டல் உறவுகளில் உடைப்பை ஏற்படுத்துகின்றது. இந்து மதமும் சாதியக் கட்டமைப்பும் கேள்விக்குள்ளாகின்றன. ஜோதி ராவ் பூலே, ராமலிங்க வள்ளலார், நாராயண குரு போன்ற மகத்தான சமூகப் புரட்சியாளர்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்து மதத்தையும் சாதியக் கட்டமைப்பையும் எதிர்த்து போர் பிரகடனம் தொடுக்கின்றனர்.

7. அண்ணல் அம்பேத்கர் இந்த சமூகப் புறநிலையை அதன் சாராம்சத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டவர். இந்தியாவில் வேறு எந்த வர்க்கத்தையும் விடவும் இந்தச் சுரண்டல் கட்டமைப்பின் செயல்பாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ளும் இடத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தச் சுரண்டல் அமைப்பைத் தூக்கி எறிந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையிலான ஜனநாயக சமூகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவை தனது கல்வியின் மூலமாகவும், ஆய்வுகள் மூலமாகவும் வந்தடைந்தவர்.

8. சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்க பணியாற்ற வேண்டும், அதற்காக அறிவுத்துறை பணியையும் அரசியல் களப்பணியையும், அமைப்பாக்கும் பணியையும் ஒத்திசைவுடன் இணைத்து செயல்பட வேண்டும் விடாப்பிடியான பொறுப்புணர்வுடன் அதற்கான கடும் உழைப்பைச் செலுத்தியவர்.

9. இந்தியாவில் சாதிகள் பற்றி, இந்திய ரூபாய் பற்றிய சிக்கல் பற்றி, சூத்திரர்கள் பற்றி, தீண்டப்படாதவர்கள் பற்றி, பாகிஸ்தான் பிரிவினை பற்றி இந்திய அறிவுத்துறை வரலாற்றிலேயே முதல் முதலில் ஆய்வு செய்தவர். இவற்றில் சில ஆய்வுகள் (இந்திய ரூபாய் பற்றி, தீண்டப்படாதவர்கள் பற்றி) அவருக்குப் பின்னர் வளர்த்தெடுக்கப்படக் கூட இல்லை. பிற சிக்கல்கள் (சாதிகள், பாகிஸ்தான் பிரிவினை, சூத்திரர்கள்) பற்றி வரலாற்று, சமூகவியல் ஆய்வுகள் அறிவுத்துறையினரால் செய்யப்பட்டுள்ளன.

10. அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளின்படி இந்தியாவின் சாதிய கட்டமைப்பை உடைத்தெறியாமல் ஜனநாயகத்தை நோக்கிய சமூக மாற்றம் சாத்தியமில்லை. இந்தியாவில் பொதுவுடைமைக்கான முற்படு தேவையாக இருப்பது இதுவே. ஆனால், சாதியக் கட்டமைப்புக்கு அரணாக இருக்கும் இந்து மதம் மக்கள்மீது செலுத்தும் கருத்தியல் செல்வாக்கு உற்பத்தி முறைகள் மாறினாலும் சாதியக் கட்டமைப்பை மறுவார்ப்பு செய்து நீடிக்க வைக்கிறது. எனவே, இந்தியாவில் ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் இந்து மதத்தின் கொள்கைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும்

11. அம்பேத்கரின் ஆய்வின்படி இந்து மதத்தின் கருத்தியல் செல்வாக்கை எதிர்த்த அறிவுத்துறை போராட்டத்தை இந்த சுரண்டல் கட்டமைப்பில் இருந்து ஆதாயம் பெறும், அறிவுத்துறையை தமது ஏகபோகமாக வைத்திருந்த பார்ப்பன வருணத்தினர் செய்யவில்லை, அவர்களது பொருளாயத நலன்கள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன.

12. இந்தச் சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக இருப்பது தீண்டப்படாதவர்கள் என்ற வகுப்பினரும், சூத்திரர்கள் என்று வரையறுக்கப்பட்ட வகுப்பினரும். இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையேயான மோதலைக் கொண்டு பார்ப்பன, சத்திரிய, வைசிய வகுப்பினர் அவர்கள் மீதான தமது சுரண்டல் உறவை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். எனவே, தீண்டப்படாத மக்களின் சமூக ஆற்றலை கட்டவிழ்த்து விட்டு (அவர்களை தீண்டாமையில் இருந்து விடுவித்து) சூத்திரர்களை கொடூரமாக ஒடுக்கி சுரண்டும் இந்து மதக் கட்டமைப்பை எதிர்த்த போராட்டத்தில் சூத்திரர்களை இணைத்துக் கொண்டு ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க வேண்டும்.

13. இதற்கு இந்து மதத்தின் கருத்தியல் செல்வாக்கை நேரடியாக எதிர்த்து சவால் விட வேண்டும், போராட வேண்டும். இந்தச் சுரண்டல் அமைப்பின் உண்மை முகத்தை சூத்திர சாதியினருக்கு உணர்த்த வேண்டும். தீண்டப்படாதவர்களை இந்த கருத்தியல் ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பதற்கான திசையில் பயணிக்க வேண்டும்.

14. எனவே, தீண்டப்படாதவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது அவர்களது சமூக விடுதலைக்கான முன்தேவையாக இருக்கிறது. ஆனால், மத மாற்றம் என்பது நீண்ட கால மனமாற்றத்தைக் கோருவது (கம்யூனிஸ்ட் இயக்க மொழியில் - பண்பாட்டு புரட்சி). எனவே, அதற்கான பரப்புரை பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இருக்கும் இந்து மதக் கட்டமைப்பை அம்பலப்படுத்துவதும் அதற்கு மாற்றான ஜனநாயகக் கட்டமைப்பை முன்வைப்பதும் அந்தப் பரப்புரையில் உள்ளடங்க வேண்டும்.

15. நிறுவன மயமாக்கப்பட்ட பிற மதங்கள் (கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம்) சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்தாலும் சுரண்டலை ஒழிப்பதை முன்வைக்கவில்லை. புத்தரின் போதனைகள் சுரண்டலை (துக்கத்தை) ஒழிப்பதை முதல் நோக்கமாக வைக்கின்றன. எனவே, இந்து மதத்தில் இருந்து புத்த சங்கத்துக்கு மாறுவது இந்தியாவில் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக அமைகிறது.

எனவே, அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளும் களப் போராட்டங்களும் அரசியல் சட்டப் போராட்டங்களும் மதம் பற்றிய மதிப்பீடுகளும் திட்டங்களும், இந்து மத கருத்தியலையும் சட்டங்களையும் எதிர்த்துத் தாக்கி பலவீனப்படுத்துவதையும், அதற்கு மாற்றான ஜனநாயக நிறுவனங்களை (நவயான பவுத்தம் உள்ளிட்டு) வளர்த்தெடுப்பதும் என அமைகின்றன.

எனவே, அண்ணல் அம்பேத்கரின் கோட்பாடுகளும் செயல்பாடுகளும் இந்தியாவில் பொதுவுடைமை சமூகத்துக்கும் அதற்கு மாறிச் செல்லும் கட்டமான சோசிச சமூகத்துக்கும் முன்தேவையான ஜனநாயகப் புரட்சிக்கான இன்றியமையாத ஆயுதங்களாக நமக்கு உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்