வகைபிரித்தல் - மூலதனம், இந்திய சமூகம்

உற்பத்தியில் முன்னீடு செய்யப்படும் மூலதனத்தை, அதாவது திறனுடை மூலதனத்தை

·         நிலை மூலதனம், சுழல் மூலதனம் என்றும்

·         மாறா மூலதனம், மாறும் மூலதனம் என்றும்

மார்க்ஸ் வகைபிரிக்கிறார்.

நிலை மூலதனம், சூழல் மூலதனம் என்ற வகைப்பிரிவுகளை ஆதாம் ஸ்மித்தே உருவாக்கியிருந்தார். ஆனால், அவற்றைப் பல இடங்களில் குழப்பியிருந்தால். மார்க்ஸ் அவற்றை துல்லியமாக மதிப்பின் அடிப்படையில் வரையறுத்தார். மதிப்பு எவ்வாறு உற்பத்திப் பொருளில் சேர்க்கப்பட்டு சுற்றியோடுகிறது என்ற அடிப்படையில் இந்த வகைப் பிரிப்பு அமைந்துள்ளது.

இயந்திரங்கள், கட்டிடங்கள், பிற கருவிகள் போன்ற பல உற்பத்தி நிகழ்வுகளுக்கு நீடிக்கக் கூடியவற்றின் மதிப்பு உற்பத்தி நிகழ்முறையில் முழுமையாக உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுவதில்லை. அவற்றின் மதிப்பு, அவை தேய்மானத்தின் மூலம் இழக்கும் அளவில் சன்னம் சன்னமாக உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுகிறது. இவற்றின் வாழ்நாள் முடிந்த பிறகே, உற்பத்திப் பொருளை விற்றுக் கிடைத்த பணத்தில் தேய்மான நிதியமாக சேமிக்கப்பட்டதில் இருந்து அவற்றை மாற்றீடு செய்ய வேண்டியுள்ளது. இவற்றின் மதிப்பில் ஒரு பகுதி நிலைத்து நிற்பதால் இவற்றுக்காக முன்னீடு செய்யப்பட்ட மூலதன மதிப்பு நிலை மூலதனம் என்று வரையறுக்கப்படுகிறது.

கச்சாப் பொருட்கள், துணைப் பொருட்கள் போன்றவற்றின் மதிப்பு உற்பத்திப் பொருளுக்கு முழுமையாகக் கடத்தப்படுகிறது. உற்பத்திப் பொருளை விற்றுப் பணமாக்கியதும் இவற்றை மறுபடியும் சந்தையில் வாங்கி அடுத்த உற்பத்தி நிகழ்முறையில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. உழைப்புச் சக்திக்குக் கொடுக்கப்படும் விலை, எனவே அதன் மதிப்பு, உற்பத்திப் பொருளில் தொழிலாளியின் உயிருள்ள உழைப்பு புதிதாகச் சேர்க்கும் மதிப்பால் மறுவுற்பத்தியாகிறது. அதுவும் உற்பத்திப் பொருளை விற்கும் போது ஈடேற்றம் பெற்று மீண்டும் உழைப்புச் சக்தியை வாங்குவதற்கு சந்தையில் பயன்படுகிறது.

எனவே, கச்சாப் பொருட்கள், துணைப் பொருட்கள், உழைப்புச் சக்தி போன்றவற்றுக்கு முன்னீடு செய்த மூலதன மதிப்பு ஒரே புரள்வில் பணமாக மாறி, அடுத்த உற்பத்தி நிகழ்முறைக்கு புதிதாக சந்தையில் வாங்க வேண்டியிருக்கின்றன. அவை சுழல் மூலதனம் என்று அழைக்கப்படுகின்றன.

மதிப்பின் தற்பெருக்கம் என்ற கோணத்தில் மூலதனத்தை வகைப்படுத்தும் போது, கூலிக்காக முன்னீடு செய்யப்படும் மூலதன மதிப்பு உற்பத்தி நிகழ்முறையில் தன் மதிப்பை விட அதிக மதிப்பைப் படைப்பதால் மாறும் மூலதனம் (v) என்றும். இயந்திரங்கள், கட்டிடங்கள், கச்சாப் பொருட்கள், துணைப் பொருட்கள் ஆகியவற்றுக்கான மூலதன மதிப்பு உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுவதால் மாறா மூலதனம் (c) என்றும் அழைக்கப்படுகிறது. மாறா மூலதனம், மாறும் மூலதனம் என்ற இந்த வகைப்படுத்தல் அரசியல் பொருளாதாரத்தின் தெள்ளிய அறிவுக்கு அடித்தளமாக அமைகிறது.

உபரி-மதிப்புக்கும் (s) மாறும் மூலதனத்துக்கும் (v) உள்ள விகிதம் (s/v) உபரி-மதிப்பு வீதம் (s') என்று அழைக்கப்படுகிறது. மாறா மூலதனத்துக்கும் (c) மாறும் மூலதனத்துக்கும் (v) இடையேயான விகிதம் (c/v) மூலதனத்தின் அங்கக இயைபு என்று வரையறுக்கப்படுகிறது. மாறும் மூலதனத்துக்கும் (v) மொத்த மூலதனத்துக்கும் (C) இடையிலான விகிதம் (v/C), உபரி-மதிப்பு வீதத்துக்கும் (s') இலாப வீதத்துக்கும் (p') இடையிலான உறவை பகுத்தாராய பயன்படுகிறது.

இந்த இரட்டை வகைப்பிரித்தலில், கூலிக்காக முன்னீடு செய்யப்படும் மூலதன மதிப்பு – நிலை மூலதனம்-சுழல் மூலதனம் என்ற வகைப்பிரிப்பில், மாறா மூலதனத்தின் சுழலும் பகுதியான கச்சாப் பொருட்கள், துணைப் பொருட்கள் இவற்றுடன் சேர்ந்து சுழல் மூலதனமாக வகைப்படுத்தப்படுகிறது. அதே நேரம், மாறா மூலதனம்-மாறும் மூலதனம் என்ற வகைப்பிரிப்பில், கச்சாப் பொருட்கள் துணைப் பொருட்கள் போன்றவை கட்டிடங்கள் இயந்திரங்கள் இவற்றுடன் சேர்த்து மாறா மூலதனம் என்று வரையறுக்கப்படுகின்றன.

மாறும் மூலதனம் என்ற மூலாதாரமான வகையினம், மாறா மூலதனம்-மாறும் மூலதனம் என்ற வகைப்பிரிப்பில் மாறும் மூலதனம் என்று தனியாக இனங்காட்டப்படுகிறது. அதே நேரம் நிலை மூலதனம்-சுழல் மூலதனம் என்ற வகைப்பிரிப்பில் கச்சாப் பொருட்கள், துணைப்பொருட்கள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அதே போல, கச்சாப் பொருட்கள் துணைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு முன்னீடு செய்யும் மூலதன மதிப்பு நிலை மூலதனம்-சுழல் மூலதனம் என்ற வகைப்பிரிப்பில் கூலிக்காக முன்னீடு செய்யப்படும் மூலதன மதிப்புடன் சேர்க்கப்படுகின்றது. மாறா மூலதனம்-மாறும் மூலதனம் என்ற வகைப்பிரிப்பில் இயந்திர சாதனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுடன் சேர்க்கப்படுகின்றது.

அதே போலத்தான் நால் வருண முறையும்.

பார்ப்பனர்கள்-பார்ப்பனர் அல்லாதவர்கள் என்ற வகைப்பிரிப்பில் சூத்திரர்கள் தீண்டப்படாதவர்களுடன் சேர்க்கப்படுகின்றனர். அதே நேரம் நால்வருணத்தினர்-வருணமற்றவர்கள் என்ற வகைப்பிரிப்பில் சூத்திரர்கள் பிற வருணங்களுடன் சேர்க்கப்படுகின்றனர். தீண்டப்படாதவர்கள் தனித்து வகைப்படுத்தப்படுகின்றனர்.

எப்படி, மாறும் மூலதனம் அரசியல் பொருளாதாரத்தின் தெள்ளிய அறிவுக்கு அச்சாணியாக உள்ளதோ அதைப் போல தீண்டப்படாதவர்கள், தீண்டப்படுபவர்கள் என்ற வகைப்பிரிப்பு இந்திய சமூகம் பற்றிய தெள்ளிய அறிவுக்கு அச்சாணியாக உள்ளது.

தீண்டப்படாதவர்கள் எப்படி இந்திய சமூகக் கட்டமைப்பின் உபரி உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளனர் என்பது மையமானது.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்