இந்தியாவில் சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சிக்கான அண்ணல் அம்பேத்கரின் கோட்பாடு:

இந்துச் சமூகம்:

1. இந்து சமூகம் படிநிலை ஏற்றத்தாழ்வு (graded inequality) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்களிலும் தீண்டப்படாதவர்கள் என்ற பிரிவிலும் நூற்றுக்கணக்கான சாதிகள் படிநிலை வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

2. ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து உண்ண தடை, ஒரே இடத்தில் சேர்ந்து வாழத் தடை, சாதிக்கு வெளியே திருமண உறவிற்குத் தடை விதிக்கும் அகமண முறை ஆகிய சமூக வழக்கங்களைப் பின்பற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு சாதியும் தனக்கென உணவுமுறை, வழிபாட்டுச் சடங்குகள், உறவுமுறைகள் என ஒரு தனிக் குடியரசாக அமைந்துள்ளது.

3. இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு கட்டமைப்பின் உச்சத்தில் உள்ள பார்ப்பனர்கள் சூத்திர சாதிகள் மற்றும் தீண்டப்படாதவர்களாக செய்யப்பட்ட பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி செல்வச் செழிப்பிலும், சமூக அந்தஸ்துடனும் வாழ்கின்றனர். சத்திரியர், வைசியர் இரு பிரிவினரும் பார்ப்பனருக்கு அடுத்தடுத்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பார்ப்பன சாஸ்திரங்களின்படி குற்றவியல் தண்டனைத் தொகுப்பில் கூட பார்ப்பனருக்கு தனியுரிமைகள், சூத்திரர்கள் மீது கடுமை என்று வருண பாகுபாடு காட்டப்படுகிறது.

4. (இந்தியப் பொருளாதாரம் சாதியக் கட்டமைப்பின் படி ஒழுங்கமைக்கப்பட்ட கிராம சமுதாயங்களாக அமைந்திருந்தது. நவீன காலத்திலும் இந்தக் கட்டமைப்பின் சாராம்சத்தில் மாற்றம் ஏற்படவில்லை. அதில் சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் சுரண்டப்படுபவர்களாகவும், முதல் மூன்று வருணத்தினர் சுரண்டுபவர்களாகவும் அமைந்துள்ளனர்.)

5. இந்து சாஸ்திரங்களின்படி சூத்திர சாதியினர் இந்த மூன்று வருணத்தினருக்கும் சேவை செய்வதற்காகவே பணிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொத்து வைத்திருக்கும் உரிமை இல்லை, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து கொள்ளும் உரிமை பார்ப்பனருக்கு உள்ளது.

6. இந்து சாஸ்திரங்களின்படி தீண்டப்படாதவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மக்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை. நடைமுறையில் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு என்று பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

7. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு வரை கல்வி அறிவும் அறிவுத்துறை செயல்பாடும் பார்ப்பனர்களின் முற்றுரிமையாக இருந்தன. மற்ற சாதியினர் தத்தமது சாதிக்குரிய தொழில் தொடர்பான திறனை வளர்க்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தனர்.

8. இத்தகைய படிநிலை ஏற்றத்தாழ்வு அடிப்படையில் அமைந்த சமூகக் கட்டமைப்பின் பொறியமைவு, வரலாற்றில் அதன் தோற்றுவாய், அதன் பரிணாம வளர்ச்சி இவை குறித்து ஆய்வு செய்வதில் பார்ப்பன அறிவுத்துறையினர் அக்கறை காட்டவில்லை. ஏனெனில், அத்தகைய ஆய்வு அவர்களது சமூக மேலாதிக்கத்துக்கும் தனியுரிமைகளுக்கும் பொருளாதார நலன்களுக்கும் (அதாவது, அவர்களது வர்க்க நலனுக்கு) பாதகமாக போய் விடும்.

9. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு கல்வியறிவு பெற்று அறிவுத்துறை செயல்பாட்டில் இறங்கிய சிலர் இந்து மதத்தின் தத்துவங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் உண்மை முகத்தை அம்பலப்படுத்தினால், பார்ப்பனர்கள் அவர்கள் மீது பாம்பாகச் சீறி அவர்களை மதிப்பிழக்கச் செய்ய (discredit) அனைத்தையும் செய்கின்றனர்.

10. சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதியும் தனது குழுவுக்குள் உறவுகளை வரம்பிட்டுக் கொள்வதில் உள்ள குறுகிய நலன்களோடு கூடவே, ஒவ்வொரு குழுவும் தனக்கு மேலே உள்ள குழுவிற்கு கீழ்ப்பட்டு நடக்க வேண்டியிருந்தாலும் தமக்குக் கீழே உள்ள குழுக்களின் மீது ஆதிக்கம் செலுத்த முடிவதை எண்ணி மன நிறைவடைகின்றன, அதன் பொருளாயத ஆதாயங்களை ஈட்டுகின்றன.

11. மேலும், அகமண முறையும் பார்ப்பனர்களின் மேன்மையும் கடவுளால் விதிக்கப்பட்டவை என்று இந்துக்கள் நம்புகின்றனர். இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் என்ற நூற்றுக் கணக்கான கதைகள் மூலமாகவும், சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனர்கள் நடத்தி வைக்கும் சடங்குகள் வழிபாடுகள் மூலமாகவும் இந்த நம்பிக்கை தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு நடைமுறையில் உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்து சமூகமும் ஜனநாயகமும்:

12. எனவே, இந்து சமூகக் கட்டமைப்பு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு இணக்கம் காண முடியாமல் முரண்பட்டு நிற்கிறது.

13. இந்தியாவின் பண்டைய வரலாறு, படிநிலை ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்துக்கும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட பவுத்தத்துக்கும் இடையே அரசமதமாக ஆவதற்கான போராட்டமாக இருந்தது. மவுரிய பேரரசில் கோலோச்சிய பவுத்தம் படிநிலை ஏற்றத்தாழ்வை நிராகரித்தது. பார்ப்பனியம் சூத்திரர்கள் என்று ஒதுக்கி வைத்துச் சுரண்டிய பிரிவினருக்கும் அனைத்துப் பிரிவினரைச் சேர்ந்த பெண்களுக்கும் சம உரிமைகளை வழங்கியது. பார்ப்பனர்கள் எல்லோரையும் போல உழைத்து வாழும்படி செய்தது.

14. இதை எதிர்த்து நடந்த கலகத்தின் மூலமாக புஷ்யமித்திர சுங்கன் கடைசி மவுரிய மன்னனைக் கொலை செய்து பார்ப்பன ஆட்சியை மீண்டும் நிலைநாட்டினான். பவுத்தத்தின் மீதும் கடும் தாக்குதல் தொடுத்து ஒடுக்கினான், அரசு ஆதரவு இன்றி பவுத்தம் நலியத் தொடங்கியது.

15. அதைத் தொடர்ந்து சூத்திரர்களையும் பெண்களையும் கடுமையாக ஒடுக்கி இழிவுபடுத்தி வைக்கும் மனு ஸ்மிருதி இயற்றப்பட்டது. அது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கடவுள் வழங்கியதாக பிரகடனப்படுத்தியது. வருண முறையை மூடுண்ட வர்க்கமான சாதிய முறையாக மாற்றி நடைமுறைப்படுத்தியது. இது குப்தப் பேரரசின் போது உச்சநிலை அடைந்தது.

16. இஸ்லாமியர்கள் படையெடுப்பின் போது பவுத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டு, விகாரங்கள்  இடிக்கப்பட்டு பவுத்தம் இந்தியாவில் இருந்து துடைத்தழிக்கப்பட்ட போது பார்ப்பன மதம் அரசர்களின் ஆதரவோடும் பார்ப்பன குடும்பங்களின் வேதம் ஓதும் வழக்கத்தின் மூலமும் பாதுகாக்கப்பட்டது. இஸ்லாமிய மன்னர்கள் பார்ப்பன மதத்தை அழித்தொழிக்கும் பணியை முடித்து வைக்கவில்லை. பார்ப்பனியம் மீண்டும் தழைத்து வளர்ந்தது. எனவே, வாள்முனையில் பரப்பப்பட்ட இஸ்லாமும் பார்ப்பன படிநிலை ஏற்றத்தாழ்வைக் கொண்ட இந்து மதத்தை முற்றிலும் அழிக்க முடியவில்லை.

17. (ஆட்சி செய்யும் மன்னர்கள் மாறினாலும் இந்தியாவின் உற்பத்தி முறை, சாதிய அடிப்படையிலான கிராம சமுதாயங்களையே அலகாகக் கொண்டிருந்தது. அங்கு சமூகரீதியிலான சொத்துடைமையும், சமூகரீதியிலான அடிமைத்தனமும், சமூகரீதியிலான பணணையடிமைத்தனமும், சமூகரீதியிலான சுரண்டலும் நீடித்தன).

18. ஆங்கிலேயர் ஆட்சியில் மேற்கத்திய கல்வி முறையும், மேற்கத்திய சட்டங்களும் இந்தியாவுக்குள் வரம்புக்குட்பட்ட அளவில் நுழைந்தன. அதைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் மட்டுமின்றி சூத்திர சாதியினரும் தீண்டப்படாத சாதிகளில் ஒரு சில பிரிவினரும் இராணுவ வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்புகளைப் பெற்றனர்.

19. ஆங்கிலேயர் ஆட்சி இந்திய கிராமங்களின் பொருளாதார தற்சார்பு அடித்தளத்தை அழித்து நவீன உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. ஆனால், நவீன முதலாளித்துவ உறவுகள் சாதியக் குழுக்களின் வட்டங்களை உடைத்து ஒருபடித்தான இந்து சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாத அளவுக்கு பார்ப்பனியத்தின் சமூக ஆதிக்கம் வலுவாக இருந்தது.

20. படிநிலை ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான நால்வருண கட்டமைப்பை எதிர்த்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய (முதலாளித்துவ) கட்டமைப்புகளையும் சட்டங்களையும் உருவாக்கப் போராடியதன் விளைவாக உருவானவையே நவீன கல்வி முறையும், அனைவருக்கும் பொதுவான குற்றவியல் சட்டத் தொகுப்பும், இறுதியில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்.

21. அரசியல் அரங்கில் ஜனநாயக உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டாலும் சமூகத் துறையிலும் மதத் துறையிலும் படிநிலை ஏற்றத்தாழ்வு என்ற கட்டமைப்பு வலுவாகத் தொடர்கிறது. இப்போது, அது அரசியல் அரங்கிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, வலுவிழந்து வரும் தனது சமூக ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி:

22. இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, சாதி அழித்தொழிக்கப்பட வேண்டும். சாதிகளை அழிப்பதற்கு அகமணமுறையை ஒழிப்பது முன்நிபந்தனையாக உள்ளது. ஆனால், அகமணமுறை சாதியக் குழுக்களின் (குறிப்பாக பார்ப்பனர்களின்) குறுகிய பொருளாயத நலன்களாலும், இந்து மத சாஸ்திரங்கள் மற்றும் புனித நூல்களின் மீது கொண்ட நம்பிக்கைகளாலும் பாதுகாக்கப்படுகிறது. இந்து சமூகத்தின் முன்னேற்றத்தைப் பின்னுக்கு இழுக்கிறது.

23. எனவே, சாதியை ஒழிக்க இந்து மதத்தின் புனித நூல்கள் மீதான நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் (அதாவது இந்து மதத்தைத் தகர்க்க வேண்டும்). படிநிலை ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்துக்கு மாற்றாக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முதலாளித்துவ சமூகத்துக்கு முன்தேவையான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நவயான பவுத்தத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்.

24. மதச் சடங்குகளில் பார்ப்பனர்களின் முற்றுரிமையை ஒழிப்பது, புரோகிதர் வேலையில் தகுதித் தேர்வு மூலம் அனைத்து சாதியினரையும் நியமிப்பது, கோயில்களின் நிர்வாகத்தை அரசு ஏற்பது போன்ற நடவடிக்கைள் மூலம் நடைமுறையில் இந்துக்கள் மீது பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்தையும் செல்வாக்கையும் ஒழித்துக் கட்டுவது.

25. இந்தப் புரட்சியில்  சூத்திர உழைக்கும் மக்கள் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களுடன்  இணைந்து (பகுஜன் மக்களாக), தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டமைத்து முன்னணி சக்தியாக செயல்பட வேண்டும்.

26. சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவை ஆகும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்