அம்பேத்கரும் சோசலிசமும் - இளம் கம்யூனிஸ்ட் கழகம்

 1. அறிவியல் சோசலிசம் என்பது YCLஇன் இலக்கு. YCLஇன் திட்டத்தில், சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சிக்கான திட்டமும் மூலதனத்தைத் தூக்கி எறிந்து சோசலிசத்தை நிறுவுவதற்கான திட்டமும் இணைந்தவை. அவற்றில் முதல் கட்டத்தில் சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி முன்னிலை வகிக்கிறது, சோசலிசத்துக்கான போராட்டம் அதோடு இயைந்து அதற்கு சேவை செய்கிறது. ஏனென்றால், சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி சோசலிசத்துக்கான முன்தேவை (prerequisite of socialism - communism).

இது அண்ணல் அம்பேத்கரின் இந்திய ஜனநாயகப் புரட்சிக்கான கோட்பாடு என்று நான் எழுதி வைத்த உருவரையில் 26வது கூறாக இடம் பெறுகிறது. "சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவை ஆகும்."

2. தேபிபிரசாத்தின் கட்டுரையும் இந்திய தத்துவம் பற்றிய அவரது பிற ஆய்வு நூல்களும், புரட்சிகர அரசியலில் புறநிலைக்கும் அகநிலைக்கும் இடையேயான உறவையும், இந்தியாவில் இந்து மதக் கருத்துக்கள் செலுத்தும் எதிர்ப்புரட்சிகர தாக்கத்தையும் தெளிவுபடுத்துகின்றன.

"ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை [மார்க்ஸ் வரை] இருந்து வந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்தின் உரிய பிரதானமான குறைபாடு இதுதான் : பொருள் [gegenstand] எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருள் [Object] அல்லது சிந்திப்பு [Anschaung] என்னும் வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதப் புலனுணர்வுள்ள நடவடிக்கை என்றும் நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை, அகநிலையாகக் கொள்ளப்படவில்லை." 

என்ற மார்க்சின் ஆய்வுரையை கவனமாகப் பரிசீலியுங்கள். இது புறநிலைக்கும் அகநிலைக்கும் உடையேயான இயக்கவியல் உறவை விளக்குகிறது. (ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள், தேர்வு நூல்கள் தொகுதி 1 பக்கம் 7).

அகநிலையின் (மனிதப் புலனுணர்வு) செயல்பாட்டை (நடவடிக்கை) புறக்கணிக்கும் பொருள்முதல்வாதம் மார்க்சுக்கு முந்தையது. மார்க்சியம் பற்றியும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றியும் பேசும் போது பெரும்பாலும் நாம் மார்க்சுக்கு முந்தைய இந்த பொருள்முதல்வாதத்தில் விழுந்து விடுகிறோம். அகநிலையின் செயல்பாட்டை முற்றிலும் புறக்கணித்து விடுகிறோம்.

3. அண்ணல் அம்பேத்கர் மார்க்சிஸ்ட் கிடையாது. ஆனால், அவர் மத நூல்களை ஆய்வு செய்வதாலேயே மதக் கருத்துக்களை எதிர்த்த போராட்டத்தை முன்வைப்பதாலேயே அவர் கருத்து முதல்வாதி கிடையாது. அவரது ஆய்வுகள் அறிவியலுக்குப் புறம்பானவை கிடையாது. அவை இந்திய புறநிலை எதார்த்ததில் முதன்மையான சிக்கலாக நிற்கும் இந்து மத தத்துவம் (வரலாறு, சமகால நடைமுறை) பற்றிய ஆய்வுகள். 

எனவே, அவற்றை மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்துபவர்கள் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு எதிரானவர்கள். "இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவைகள்" (The Prerequisites of Communism in India) என நூலை எழுதியவர் (எழுதத் தொடங்கி முடிக்கவில்லை), அண்ணல் அம்பேத்கர். சோசலிசத்தையும் பொதுவுடைமையையும் தனது அரசியல் இலட்சியமாக வெளிப்படையாக முன்வைத்தவர். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளியே அப்படி முன்வைத்த வேறு எந்த அரசியல் தலைவரும் உள்ளாரா? 

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இருபதாம் நூற்றாண்டு நடைமுறை மீது விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் விமர்சிப்பவை - வன்முறைப் புரட்சி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்.  இருபதாம் நூற்றாண்டின் அனுபவங்களை வைத்து அவர் எழுப்பிய கேள்விகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் வரலாறு மீண்டும் திரும்பி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்