இணைய உறவாடல்கள்

இணைய வெளியில் சந்திக்கும் நாம் பெரும்பாலும் நம்மோடு உரையாடுபவர்கள் முன்வைக்கும் அவர்களது ஒரு பரிமாணத்தை மட்டும்தான் பார்க்கிறோம். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம். இங்கு ஒற்றைப் பரிமாணத்தில் கருத்தைப் பகிரும் ஒருவருக்குப் பின்னால் ஒரு முழு வாழ்க்கை உள்ளது, அவர் கடந்து வந்த வாழ்க்கை நம்மிலிருந்து வேறுபட்டிருக்கலாம், அவர் வாழும் வாழ்க்கை அவருக்கு வேறு பார்வைகளைக் கொடுத்திருக்கலாம் என்ற புரிதல் நிதானமாக யோசிக்கும்போது நம் எல்லோருக்குமே இருக்கிறது. 

ஆனால், உரையாடலின் சூட்டில் அது மறந்து போகிறது. எப்படியாவது நமக்கு எதிராக உரையாடுபவர்களை காயப்படுத்தி விட வேண்டும், களத்தை விட்டு துரத்தி விட வேண்டும், வெற்றி வாகை சூடி விட வேண்டும் என்ற எண்ணம்தான் முன்னுக்கு நிற்கிறது. அதற்கு ஒவ்வொருவருமே வெவ்வேறு நேரங்களில் பலியாகி விடுகிறோம் (இக்குழுவின் மட்டுறுத்துனர்கள் உட்பட).

இது தொடர்பாக, என்னுடைய மலரும் நினைவுகள் சில, பொறுத்துக் கொள்ளுங்கள். 

1. முதன்முதலில் நான் பங்கேற்ற தமிழ் இணையக் குழுமம் tamil.net நடத்திய மின்னஞ்சல் குழு (mailing list). அதில் tamil@tami.net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் குழுவில் இணைந்தவர்கள் எல்லோருக்கும் அது போய் விடும். குழுவில் இணைந்தவர்கள் அதைத் திறந்து, படித்து விரும்பினால் பதில் அனுப்புவார்கள். இது 1990-களின் இரண்டாம் பாதியில் செயல்பட்டது. அது இணைய உலகின் கற்காலம் எனலாம்.இந்தக் குழுவில்தான் முதன்முதலில் இணையத்தில் குழுவாக தமிழில் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. அதற்கு tscii என்ற encoding பயன்படுத்தப்பட்டது. இந்தக் குழுவின் வழிதான் மதுரைத் திட்டம் போன்ற தமிழ் நூல்களை மின் வடிவமாக்கும் பணி தொடங்கி நடந்தது. (projectmadurai.org). இன்னும் பல பெரிய, சிறிய முயற்சிகள் இக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்டன.

அந்தக் குழுவில் பெரும்பாலும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் (ஐ.டி ஊழியர்களின் இடம்பெயர்வுக்கு முன்பு அமெரிக்க சென்றவர்கள்), வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், மற்றும் பிற வெளிநாட்டு தமிழர்கள் இருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். ஏதோ ஒரு வகையில் அதிக வசதியும், இணையத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளவர்கள் இணைந்திருந்தனர். தமிழ்நாட்டில் இணைய வசதிகள் அப்போதுதான் வளர ஆரம்பித்திருந்தன.

அந்தக் குழுவில் காரசாரமான விவாதங்கள், தனிநபர் தாக்குதல்கள், flamebaitகளுக்கு பஞ்சமில்லை. குழுவை எப்படி மட்டுறுத்துவது என்பதில் கூட முடிவற்ற விவாதங்கள் நடக்கும். குழுவை உருவாக்கி நடத்திய சிட்னி பாலா, குழு தன்னைத்தானே மட்டுறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்தார். மட்டுறுத்துனர் குழு ஒன்றை உருவாக்க முயற்சி செய்தார்கள். எதுவும் வெற்றிகரமாக செயல்படவில்லை.

இங்கு என் நினைவில் இருக்கும் ஒரே ஒரு நிகழ்வை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். எந்த ஒரு குழுவையும் போலவே இந்தக் குழுவிலும் 200 பேர் உறுப்பினர்களாக இருந்தால் 10-20 பேர்தான் தொடர்ந்து மடல்கள் அனுப்பி கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள்தான் சண்டைகள் நடக்கும் அதில் ஓரிருவர் கலகம்  செய்பவர்களாக எல்லோரையும் பொங்க வைப்பவர்களாக இருப்பார்கள். இவர்களில் யாருமே பெண்கள்  இல்லை. 

ஒரு நாள், ஏதோ ஒரு மடலுக்கு தமிழ்நாட்டில் இருந்து குழுவில் இருந்த ஒரு பெண் பதில் அனுப்பி விட்டார். அது அவர் வேலை செய்த துறை சார்ந்த (தமிழ் கணினி தொழில்நுட்பம் தொடர்பான) மடல் என்று நினைவு. உடனேயே, அதற்கு ஒரு பதில் "கண்ணே! நான் உன்னுடன் தொடர்ந்து பேச விரும்புகிறேன், எனக்குத் தனி மடல் அனுப்பு" என்று வளைகுடாவில் இருந்து ஒருவர் குழுவுக்கே அனுப்பி விட்டார். அவரும் அதுவரை குழுவிற்கு மடல் அனுப்பியதே கிடையாது. தனிமடலாக அனுப்புவதற்கு பதிலாக குழுவுக்கு அனுப்பி விட்டார்.

2. 2000 ஆண்டுகளில் இணையம் இன்னும் பரவலாகி, blog (வலைப்பூ) எழுதுபவர்களின் கூட்டம் தமிழில் உருவானது. தமிழ்மணம், தேன்கூடு போன்ற blog aggregators மூலம் ஒரு துடிப்பான தமிழ் வலைப் பதிவர்கள் சமுதாயம் உருவாகி இருந்தது. 

ஒவ்வொருவரும் தத்தமது வலைப்பதிவில் பதிவுகள் போடுவார்கள். வலைப்பதிவுகளை பெரும்பாலும் blogspot அல்லது wordpress இல் உருவாக்கியிருப்போம். அடுத்தவரின் பதிவில் போய் பின்னூட்டம் (comment) போடுவதன் மூலம் உரையாடல்கள் நடக்கும். புதிய பதிவுகள் வந்தால் அறிவிப்பு வர வேண்டும், பின்னூட்டம் போடப்பட்டால் அறிவிப்பு வர வேண்டும் என்றெல்லாம் அமைத்துக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பின்னூட்டங்கள் போட்டுக் கொள்வது (முறை செய்வது என்று கலாய்ப்பார்கள்), troll செய்வது எல்லாம் நிறைய நடக்கும்.

இந்த வலைப்பதிவர்கள் சமுதாயத்தின் மூலம் பதிவர் பட்டறைகள் நடத்தினோம். லினக்ஸ் KDE இடைமுகத்தை தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் இடைமுகத்துடன் ஒரு கணினி இயங்குதளத்தை வெளியிடும் தமிழ்க் கணினி திட்டம் இதன் ஊடாகத்தான் நடந்தது. இன்றைய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்பட இயக்குனர்களில் சிலர் பதிவுலகத்தில்தான் தமது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார்கள்.

இவ்வளவு தனித்தனியான பதிவர்களைக் கொண்ட பதிவுலகத்தில் நடந்த சண்டைகள் அனல் பறப்பவை. சண்டைகள் நிஜ உலகத்துக்கும் நீண்டு நேரில் சந்தித்து சட்டையைக் கிழித்துக் கொண்டவர்கள் உண்டு. போலி @@@@@@ என்ற பெயரில் ஒருவர், பார்ப்பனியக் கருத்துக்களை ஆதரித்து எழுதும் @@@@@@ என்ற ஒருவருக்கு  எதிராக ஆபாச இயக்கமே நடத்தினார். போலி @@@@@@ என்ற பெயரில் தனி வலைப்பதிவு, @@@@@@வின் பதிவில் பின்னூட்டம் இடுபவர்கள் அல்லது அவரோடு தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு வசை மழை பொழியும் மின்னஞ்சல்கள் அனுப்புவது. சிலரை தொலைபேசியிலேயே அழைத்துத் திட்டுவது என்று வரை போனார் (அவர் ஒருவரா சிலரைக் கொண்ட குழுவா என்று இன்று வரை தெளிவில்லை). கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் @@@@@@வை ஆதரிப்பவர்களும், பார்ப்பனிய எதிர்ப்பு என்று போலி @@@@@@ஆதரவாளர்களும் என்று இரண்டு தரப்புகள் இருந்தன.

இந்தப் பதிவுலகில் பல பெண்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிர்கொண்ட trolling தனிவகையானது. பெண் பதிவர்கள்  சந்திப்புகளில் தினமும் எத்தனை பின்னூட்டங்களை நீக்க வேண்டியிருக்கிறது என்று நீளமாக பேசுவார்கள். பலர் எழுதுவதையே விட்டு விட்டார்கள்.

3. slashdot.org என்பது மென்பொருள் (கணினி) துறையைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு விவாத மேடை (discussion forum). அதை ஒரு அமெரிக்க இளைஞர் பொழுதுபோக்காகத் தொடங்கி, ஓரிரு ஆண்டுகளில் நூறாயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து விட்டனர். அதை நடத்துவதற்கான ஒரு அணியையும் உருவாக்கி விட்டார்கள். அதில் தினமும் பதிவுகள் வெளியாகும். பிரபலமான பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கில் comments வரும். பின்னூட்டங்களை வாசகர்களே  மட்டுறுத்துவதற்கு ஒரு பொறியமைவை உருவாக்கியிருந்தார்கள். 

ஒவ்வொரு நாளும் ஒரு சில பேருக்கு (ஒரு சில நூறு பேருக்கு?) moderator access தரப்படும். அதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான commentsக்கு rating கொடுக்கலாம். rating நேர்மறையாக insightful, interestig, informative என்றோ, flamebait, offtopic, troll என எதிர்மறையாகவோ இருக்கும். ஒவ்வொரு எதிர்மறை ratingக்கும் 1 புள்ளி, ஒவ்வொரு எதிர்மறை ratingக்கும் -1 புள்ளி. 

வாசிப்பவர்கள் +5 புள்ளி வாங்கிய பின்னூட்டங்களை மட்டும் படிக்கிறோம் என்று filter செய்து கொள்ளலாம். இல்லை என்றால் எல்லா பின்னூட்டங்களையும் படிக்கிறேன் என்று கடுமையான இணையவழி சண்டைகளில் மூழ்கித் திளைக்கலாம்.

அது சில ஆண்டுகள் துடிப்பான சமுதாயமாக இருந்தது. அதன் பிறகு இணையச் சூழல் சமூக வலைத்தளங்களை நோக்கி நகரவும் வலைத்தளங்களும், விவாத மேடைகளும் முந்தைய முக்கியத்துவத்தை இழந்து விட்டன.

நிற்க.

இன்றைக்கு நாம் இந்த வாட்ஸ்அப் குழுக்களில் இதே சிக்கலை வேறு வடிவங்களில் எதிர்கொள்கிறோம். எப்படி தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து விட்டு உரையாடுவது, உரையாடல் கோட்டைத் தாண்டிச் சென்றால் எப்படி மட்டுறுத்துவது என்பதில் விடை தெரியாத கேள்விகள் நிறைய உள்ளன.

நிஜ உலகில் நமது வட்டம் குறுகியது. நாம் பேசுபவர்களை நேரில் பார்க்கிறோம். அவர்களைப் பற்றியும் அவர்களது வாழ்வைப் பற்றியும் நமக்கு ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் இணைய உலகம் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட, பல்வேறு நிலைகளில் வாழும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உரையாடலில் ஒன்றிணைக்கிறது.

இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் empathy என்று கருதுகிறேன். நாம் நமக்கு இருக்கும் privilegesஐ (ஆண் vs பெண், சவர்ணர் vs அவர்ணர், வசதியான வாழ்க்கை vs வறிய வாழ்க்கை) எப்போதுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிரில் நம்முடன் உரையாடுபவர் இதே privilege பின்னணியைக் கொண்டிருக்காமல் இருக்கலாம் என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். அவரது வாழ்க்கைப் போராட்டங்கள், அவருக்குக் கிடைத்த தீர்வுகள் நமது வாழ்க்கைப் போராட்டங்களில் இருந்து நமக்குக் கிடைத்த தீர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கலாம் என்பதை உணர வேண்டும்.

இதைச் சொல்வது எளிது. ஆனால், 24 மணி நேரமும் இதை மனதில் கொள்வதை விடுங்கள், நேரடி உறவாடல்களில் கூட இந்த முதிர்ச்சியை கடைப்பிடிப்பது போராட்டமாகத்தான் உள்ளது, எனக்கு. இத்தகைய முதிர்ச்சி நமது (தமிழ், இந்திய) சமூகத்தில் அரிது என்றே தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கர்களிடம் (ஐக்கிய நாடுகள்) இந்த முதிர்ச்சியும் வேற்றுமைகளை மதித்து உரையாடும் பண்பும் அதிகமாக உள்ளது. அந்த சமூகத்தில் இனவாதம் பற்றி நாம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நம்முடன் ஒப்பிடும் போது அவர்கள் மிக முன்னேறிய இடத்தில் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

இத்தகைய ஒரு பண்பாடு நம் நாட்டு பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக, நமது நண்பர்களையும் நேச சக்திகளையும்தான் நாம் பாய்ந்து குதறுகிறோம். மோசமான பகை உணர்வுகளை வளர்த்துக் கொள்கிறோம். இணையவழி குழுக்கள் ஆற்றும் நேர்மறை பங்குகளோடு கூடவே இந்த எதிர்மறை உணர்ச்சிகளையும் நாம் முதிர்ச்சியோடு கையாள வேண்டியுள்ளது.

இந்த உணர்வில் தொடர்ந்து உரையாடுவோம். கற்றுக் கொள்வோம், புரட்சிகர இலக்கை நோக்கி முன்னேறுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்