ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

 

ஜூன் 27, 2024 – காலை 5 மணி முதல் 6 மணி வரை - அம்பத்தூர் குப்பம்

"ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்" என்று இந்தப் பதிவுக்குத் தலைப்புக் கொடுக்கலாம் என்று தோன்றியது. சவர்ண ஹிந்து ஆண் என்பது a loaded term. துயரங்களும் குழப்பங்களும் என்பதையும் விளக்க வேண்டும். சவர்ண ஹிந்து ஆண் என்பதைப் பற்றி நிறைய யோசித்து, நிறைய அசைபோட்டு அதை வந்தடைந்தேன். துயரங்களும் குழப்பங்களும் என்பது கண நேரத்தில் தோன்றியது.

அதற்கு முன்னதாக இந்த வலைப்பதிவைப் பற்றி ஒரு சொல். From the cesspool of savarna hindu male world என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய தேவை என்ன? "சவர்ண ஹிந்து ஆண் என்ற சாக்கடைக்குள் இருந்து" என்பதுதான் தமிழில் தலைப்பு.

எப்படி ஆசான் கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ உலகின் புதிர்களை விடுவித்தாரோ, அதே போல அண்ணல் அம்பேத்கர் நான் மூழ்கி நீந்திக் கடக்கும் சாதியக் கட்டமைப்பு பற்றிய கோட்பாட்டுப் புரிதல்களை வழங்குகிறார். கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் வாசிப்பு முதலில் அறிமுகம் ஆன போது, ஒரு புதுக் காதலன் போற அதையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன். முதல் பாகம் வாசிக்கும் போதே இரண்டாம் பாகத்திலும் முக்கியமான மூன்றாம் பாகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பக்கங்களை வாசித்திருக்கிறேன். இதற்குள்ளிருந்து ஏதோ ஒரு புரிதல் நமக்குக் கிடைக்கிறது என்ற உணர்வு பேயாய் பிடித்து ஆட்டியது.

ராணிப்பேட்டையில் கழிவுநீர் சகதியின் சுனாமியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட வட இந்தியத் தொழிலாளர்கள்; வங்கதேசத்தின் ராணா பிளாசாவில் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு செத்துப் போன இளம் தொழிலாளர்கள், அதிலும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தவாறே புதைபாடுகளில் இருந்து வெளியெடுக்கப்பட்ட அந்த இளைஞனும் இளம் பெண்ணும்; சீனாவின் மாபெரும் வியர்வைக் கூடங்களில் சந்தித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள். இது ஒரு பக்கம். மறுபக்கம், இந்தியாவின் மிகவும் நாணயமான வணிக இல்லமாகக் கருதப்படும் டாடா குழுமத்தின் டாடா இன்டர்நேஷனல் (அப்போது டாடா எக்ஸ்போர்ட்ஸ்) தொடங்கி, சீனாவின் சிறு நடுத்தர முதலாளிகள், இங்கிலாந்தின் மதர்ப்பான அறிவுத்துறை வியாபாரிகள் (பி.எல்.சி லெதர் டெக்னாலஜி சென்டர்), இந்தியாவின் பதட்டம் நிறைந்த மார்வாடி வணிகர்கள், தமிழ்நாட்டின் தொழில் முனையும் குடும்பங்கள், இறுதியாக எனது சொந்த முதலாளித்துவ முயற்சி என்று முதலாளித்துவத்தின் பல்வேறு முகங்களைப் பார்த்து திகைத்துப் போய் வெளியே துப்பப்பட்டிருந்த காலம்.

அப்போது மூலதனம் நூல், இந்த ஒவ்வொன்றுக்கும் பின் இருக்கும் முழுமையின் பரிமாணங்களை திரை விலக்கிக் காட்டியது. தொழிலாளர்கள் சாவதும் கைகளையும் கைவிரல்களையும் இழப்பதும் முதலாளிகள் நிதானமாக இலாபக் கணக்கு போடுவதும் ஈவு இரக்கமின்றி தொழிலாளர்களையும் போட்டி போடும் முதலாளிகளையும் தீர்த்துக் கட்டுவதும் மூலதனத்தின் தர்க்கத்தில் தெளிவானது. இன்றும் கூட உலக அளவில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டியில் தொடங்கி தமிழ்நாட்டில் தி.மு.க முதலாளிகளுக்கும் பா..கவின் மார்வாடி/பனியா முதலாளிகளுக்கும் இடையிலான இழுபறி வரை மூலதனம் நூலின் ஒளி புரிதல்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

"குன்றேறி யானைப்போர் கண்டற்று" என்று திருவள்ளுவர் ஒரு குறளில் பயன்படுத்துகிறார் (குறள் 757, அதிகாரம் பொருள் செயல்வகை - )

மார்க்சும் அதையேதான் சொல்கிறார். என்னுடன் கைகோர்த்து செங்குத்தான மலைச் சிகரங்களில் ஏறி வாருங்கள். மலை உச்சியின் ஒளிர்வீசும் சிகரங்களை காண்பீர்கள் என்று உறுதியளிக்கிறார். அந்த மலையுச்சியில் இருந்து கிடைக்கும் பார்வைதான் மூலதனத்தின் ஆன்மாவையும் நாடி நரம்புகள் ஒவ்வொன்றையும் அதன் உயிரணுவையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மூலதனத்தைவிட நெருக்கமானது, முழுக்க முழுக்க அகவயமானது சாதி. சாதியில் பிறந்து சாதியாகவே வளர்ந்து சாதியாகவே திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று சவர்ண ஹிந்து ஆணாகவே அவர்களிடமிருந்து பிரித்து எறியவும் பட்ட அனுபவம் இருக்கிறது.

2005 ஆம் ஆண்டில் அது நடந்தது. 1997இல் திருமணம். 1998இல் மகன். 2000இல் மகள். 2005இல் அவர்களது அம்மாவின் (அப்போது எனது வாழ்க்கை இணையின்) வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்டேன்/துரத்தப்பட்டுக் கொண்டேன். என்ன நடக்கிறது என்று தெரியாமலேதான் ஓடிக் கொண்டிருந்தேன். அப்போது மட்டுமல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து மூக்குக்கு முன்னால் இருப்பதை மட்டும் பார்த்துக் கொண்டே நடை போடுவதுதான் வாழ்க்கை முறையாக. வாழ்வின் பேரழிவு என்று தோன்றிய அந்த நாட்களிலும் எனக்கும் எனது நேசத்துக்கு உரிய மனைவியின், குழந்தைகளின் வாழ்விலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற புரிதல் சுத்தமாக இருக்கவில்லை.

நிறைய கோபம், நிறைய சோகம், ஆத்திரம், மன அழுத்தம், மனச் சோர்வு என்று அந்தக் கட்டம் தொடங்கியது. அப்போது கைகொடுத்தவர்கள் பலர். இவன் இப்படி ஒரு கரை தட்டிய கப்பலாக வீழ்ந்து கிடக்கிறான் என்று தங்குவதற்கு தனது பூட்டிக் கிடந்த திறந்து விட்டான் ஒரு நண்பன். அதிலும் எந்தவிதமான பரிவர்த்தனை மதிப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளவில்லை (அதற்கு முன்பும் பின்பும் பரிவர்த்தனைகளில் நண்பர்களிடமும் சுற்றத்தாரிடமும் பெற்றுக் கொண்டது ஏராளம், திரும்பிக் கொடுத்தது அற்பசொற்பமே). அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்திருந்த தங்கையும் அவளது கணவரும் தாங்கிக் கொண்டார்கள். 2006ஆம் ஆண்டில் இராமாபுரத்தில் அவர்கள் வாங்கவிருந்த அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டுக்கு அருகில் வாடகை வீடு ஒன்றிற்குப் போய்ச் சேர்ந்தோம்.

அலுவலகம் வளசரவாக்கத்தில். அதாவது நான் ஒரு சவர்ண ஹிந்து ஆண் முதலாளியாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்துவதற்கு செய்த முயற்சிக்கான அலுவலகம் அது. அந்த நிறுவனமும் இந்தப் பயணத்தின் கணிசமான ஆண்டுகளின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அந்தக்கதை இன்னொரு நேரத்தில். இப்போது 2006லேயே நிற்போம்.

அந்த வீட்டில் இருந்துதான் எனது இணைய எழுத்து வெள்ளம் தொடங்கியது. அப்போதுதான் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவர்கள் அலையில் நானும் இணைந்து கொண்டேன். தொடங்கும்போதே இரண்டு வலைப்பதிவுகளைத் தொடங்கினேன். “எல்லோரும்எல்லாமும் பெற வேண்டும்" -  என்ற தலைப்பில் ஒன்று. அது எனது அரசியல் பார்வைகளை எழுதுவதற்கானது. “உள்ளத்தைஎழுதுகிறேன்" -  (முதலில் "எண்ணத்தை எழுதுகிறேன்" என்று இருந்தது) என்ற தலைப்பில் ஒன்று. அதில் எனது அகநிலை எண்ணங்களை எழுதிக் கொண்டிருந்தேன்.

முதல் வலைப்பதிவில் மகாத்மா காந்தியும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் எனது அரசியல் நாயகர்களாக இருந்தார்கள். அதைப் பற்றி இன்னொரு இடத்தில் பேசலாம். இப்போது "உள்ளத்தை எழுதுகிறேன்”.

அது ஒரு நாள்பதிவு. ஒவ்வொரு நாளும் காலை தூக்கம் விழித்தது முதல் இரவு தூங்கப் போவது வரை என்னென்ன செய்தேன், என்னென்ன நடந்தன, யார் யாரை சந்தித்தேன், என்னென்ன யோசித்தேன் என்பவற்றை பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல கொட்டிக் கவிழ்க்கும் முயற்சி. தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்த பிறகு ஒரு மணி நேரம் இந்தப் பதிவுகளை தட்டச்சு செய்வேன். தினமும் என்றால் தினமும். அந்த ஒரு மணி நேர பதிவு, பின்னர்"உள்ளத்தை எழுதுகிறேன" வலைப்பதிவில் ஒரு பதிவாகப் போய் விடும்.

அதில் என்னைத் தவிர மற்றவர்களின் பெயர்களையும் தனி விவரங்களையும் எழுதி முடித்த பிறகு நீக்கி விடுவேன். அந்த இடங்களில் கோடுகள் அல்லது வெற்று இடங்களைக் கொடுத்திருந்தேன்.

இது ஒரு சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. 2006 ஜூன் மாதம் தொடங்கி 2011 வரை விடாப்பிடியாகத் தொடர்ந்தது.; 2008 வரைதான் முழுமூச்சில். அந்த வலைப்பதிவர்களை இணைக்கும் தமிழ்மணம், தேன்கூடு போன்ற தளங்களின் மூலமாக "உள்ளத்தை எழுதுகிறேன்" பதிவுகளைப் படிக்கவும் ஒரு வாசகர் வட்டம் உருவானது. எவ்வளவு முட்டாள்தனமான, அற்பமான ஒன்றையும் விடாப்பிடியாக கால ஒழுங்கில் செய்து கொண்டே இருந்தால் அது ஒரு பழக்கமாக (habit) ஆகி விடும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் அது. எனது அந்த உள்ளத்தின் சிதறல்களைப் படித்துப் படித்து பலர் என்னோடு மனதளவில் நெருக்கமானார்கள். தொலைதூரத்தில் இருந்து வந்து சந்தித்து முதல் சந்திப்பிலேயே பல ஆண்டுகள் பழகிய உணர்வில் பேசியவர்களின் அனுபவம் எல்லாம் உண்டு.

அந்தப் பதிவுகள் சவர்ண ஹிந்து ஆணின் துயரங்களைப் பற்றிய புலம்பலாக இருந்தன. அதே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அதே உலகத்தின் சிக்கல்களை எதிர்கொண்டிருந்த சிலருக்கும் அது நெருக்கமாக இருந்திருக்கிறது என்றுதான் தொகுத்துச் சொல்ல வேண்டும். போகப் போக அது ஓய்ந்து போய், ஒரு கட்டத்தில் மார்க்சிய லெனினிய அரசியல் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அது அதிகாரபூர்வமாக நின்று போனது.

இப்போது இந்தக் கதை எல்லாம் எதற்கு என்றால், இந்த வலைப்பதிவை எழுதுவதற்கான காரணத்தைச் சொல்வதற்குத்தான். ஒவ்வொரு தனிமனிதனும் பல்வேறு variationகளில் பல்வேறு கூறுகளின் தொகுப்பாக உள்ளான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். எந்த இரு மனிதரும் முற்றிலும் identical இல்லை. அதே நேரம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான கூறுகளின் மையக்கருக்கள் உள்ளன; அதற்குள் எல்லா இந்தியர்களுக்கும் எல்லா தமிழர்களுக்கும் எல்லா சவர்ண ஹிந்து ஆண்களுக்கும் எல்லா நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களுக்கும் பொதுவான கூறுகளின் மையக்கருக்கள் குறிப்பிட்ட மனிதருக்குள் இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான கூறுகளின் மையக்கருக்களும் இருக்கின்றன.

அத்தகைய நான் கடந்து வந்த போராட்டங்களும் மோதல்களும் ஒரு சவர்ண ஹிந்து ஆணின் போராட்டங்களாகவும் மோதல்களாகவுமே இருந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி அகநிலையாக பதிவு செய்வதற்குத்தான் இந்த வலைப்பதிவு.

ஆக மோசமான சமூக விரோத குற்றவாளியும் தனக்குள் தன்னை நியாயப்படுத்திக் கொண்டுதான் வாழ முடியும். என்னைப் பொறுத்தவரையில் எனக்குள் ஒரு righteousness இருக்கிறது. என்னதான் இருந்தாலும் நான் சரியாக இருந்தேன், தனிப்பட்ட முறையில் தவறுகள் செய்திருக்கலாம், அந்த righteousnessதான் என்னை இங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்ற சமாதானம் இருக்கிறது. அதன்கீழ்தான் இரவு படுத்தால் தூங்க முடிகிறது, காலையில் எழுந்திருக்க முடிகிறது, சாப்பிடும் உணவை enjoy செய்ய முடிகிறது.

ஆனால், அது மட்டும் போதாது. அந்த righteousness ஐப் பற்றி எழுதுவது தேவை. எனது செயல்களின் புற வெளிப்பாடுகளை அவற்றின் விளைவுகளை உறவினர்களும் நண்பர்களும் குடும்பத்தினரும் சாதியினரும் சாதிக்கு வெளியில் உள்ளவர்களும் கூடப் படித்தவர்களும் கூட வேலை செய்தவர்களும் தோழர்களும் சக மாணவர்களும் பார்த்திருக்கிறார்கள். அதை நான் எப்படி எனக்கு நானே நியாயப்படுத்திக் கொண்டேன் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வது அவசியமில்லை, எனது வாழ்க்கையே எனது staement என்ற சவர்ண ஹிந்து ஆணின் இறுமாப்பில்தான் இருந்திருக்கிறேன்.

ஆனால், அது போதாது. இந்த மோதல்களையும் முரண்களையும் அகநிலையில் இருந்து பதிவு செய்ய வேண்டும் என்பது கடந்த ஓராண்டு உரையாடல்களில் இருந்து தெளிவானது.

மேலே சொன்ன சுற்றுவட்ட மனிதர்களுடனான உறவாடல்களின் முழுமையை அவற்றின் உயிரணுவை அவற்றின் நாடி நரம்புகளை எல்லாம் ஒளிபாய்ச்சிக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். அவரது நூல்களை வாசித்தது அவரது வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றிப் பேசியது அதற்கு தோழர்களின் கடுமையான எதிர்வினைகள் இறுதியாக அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் மாபெரும் பணியில் பங்கேற்பது என்று வாழ்க்கையில் பார்த்த துயரங்களுக்கும் புரியாத புதிர்களுக்கும் விடை சொல்லும் கோட்பாட்டு ஒளி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அந்தக் கோட்பாட்டு ஒளியில் எனது righteousnessஇன் யோக்கியதையை பார்க்க முடிகிறது. எனது சமூகத் தவறுகளின் அடித்தளத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதைப் பதிவு செய்வதும் பகிர்வதும் ஒரு சமூகக் கடமை என்ற வகையில் இந்தப் பதிவு. இது முழுக்க முழுக்க அகநிலையாக எழுதப்படுகிறது. புறநிலை விவரங்கள் அந்த அகநிலை பயணத்துக்குத் தேவையான அளவில் மட்டுமே சுட்டப்படுகின்றன. ஒரு சவர்ண ஹிந்து ஆணின் அகநிலைப் பயணத்தை பதிவு செய்வதன் மூலம்

ஒரு சவர்ண ஹிந்து பெண்
ஒரு திரிவர்ணிக ஹிந்து ஆண்
ஒரு திரிவர்ணிக ஹிந்து பெண்
ஒரு அவர்ண ஹிந்து ஆண்
ஒரு அவர்ண ஹிந்து பெண்

ஒரு சவர்ண ஹிந்து அல்லாத ஆண்
ஒரு சவர்ண ஹிந்து அல்லாத பெண்
ஒரு திரிவர்ணி ஹிந்து அல்லாத ஆண்
ஒரு திரிவர்ணிக ஹிந்து அல்லாத பெண்
ஒரு அவர்ண ஹிந்து அல்லாத ஆண்
ஒரு அவர்ண ஹிந்து அல்லாத பெண்

ஒரு பார்ப்பன ஆண்
ஒரு பார்ப்பன பெண்

என நமது சமூகத்தை நிறைத்திருக்கும் வகைப்பிரிவினர் ஒவ்வொருவரும் தமது சமூக வாழ்வை உரசிப் பார்க்க ஒரு template ஆக இந்தப் பதிவுகளை எழுத வேண்டும் என்பதுதான் இந்த சமூகக் கடமையின் தேவை.

எனக்கு சரி என்று படுவதை, அண்ணல் அம்பேத்கரிடமிருந்தும் ஆசான் கார்ல் மார்க்சிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட தத்துவத்தில் இருந்து இதைச் செய்யத் தொடங்குகிறேன். இது மேலே சொன்னபடி மற்றவர்களுக்கு எவ்வளவு பலன் அளிக்கிறது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இது ஒன்றுக்கும் உதவாத குப்பை என்று அவர்கள் முடிவு செய்யலாம். அட, சரிதானே இதுதான் நாம் வாழும் சாக்கடை சமூகத்தின் யோக்கியதை என்று ஒரு சிலர் ஒரு சில இடங்களில் உணரலாம். எதுவானாலும் அண்ணல் அம்பேத்கரும் ஆசான் மார்க்சும் மிகக் கவனமாக தவிர்க்க வேண்டும் என்று வழிகாட்டிய அகநிலைப் பதிவை நான் எனது ஊடகமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். அதற்குக் காரணமும் அண்ணல் அம்பேத்கர்தான்.

நான் ஏன் அம்பேத்கரைப் படிக்கவில்லை என்ற கேள்விக்கான பதில்தான் அந்தக் காரணம். மேலே குறிப்பிட்டது போல 2005 வாக்கில் அதற்கு முன்னரும் நான் அடையாளம் கண்ட ஹீரோ மகாத்மா காந்தி - அவர் ஒரு திரிவர்ணிக ஹிந்து ஆண். நான் படித்த நான் அறிந்த மனிதர்களிலேயே தலைவர்களிலேயே அவர் எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தார். ஆயிரம் ஆண்டுகள் காணாத மகத்தான தலைவர் என்று "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என்ற வலைப்பதிவில் தொடர் பதிவுகள் எல்லாம் எழுதியிருக்கிறேன்.

பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் பணி வாழ்க்கையிலும் தொழில் செய்யும் போதும் அம்பேத்கரைப் படிக்காமல் இருந்ததற்கு பாடத்திட்டம் வகுத்தவர்களின் அரசியல், பெற்றோரின் சவர்ண வாழ்க்கை முறை, சுற்றியிருந்த நண்பர்களின் சமூகத்தின் obscurantism என்று எவ்வளவுதான் நான் பட்டியல் போட்டாலும், என்னிடம் உண்மையிலேயே கேள்வி கேட்கும் நேர்மை இருந்திருந்தால், நான் காந்தியை வாசிக்கத் தொடங்கிய போதே அதாவது பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போத அம்பேத்கரை வந்தடைந்திருக்கலாம். அதைத் தடுத்தது எது?

முதலில் முதலாளித்துவத்தின் மூலதனத்தின் கோர முகங்களைப் பார்த்து அதில் இருந்து கடும் அடிபட்டு உதைபட்டு அதன் பிறகு சமூகத்தைப் புரிந்து கொள்ள கார்ல் மார்க்சை நாடிய பின்னர், மார்க்ஸ் கேள்விகளை எழுப்புவதைக் கற்றுக் கொடுத்த பின்னர்தான் அம்பேத்கரைத் தேடுவதே நடந்திருக்கிறது. இந்த torturous journey எதைக் காட்டுகிறது? இது சவர்ண ஹிந்து ஆண் என்ற privilegeஇல் இருந்து வந்ததா? அகநிலையில் அந்த privilege எப்படி செயல்பட்டது?

எட்டாம் வகுப்பில் "என் வாழ்க்கைக் கதை" என்ற தலைப்பில் காந்தியின் "சத்திய சோதனையின்" சுருக்கப்பட்ட வடிவம் துணைப்பாடமாக படித்தோம். அதில் காந்தி எப்படி திருமணமான புதிதில் தந்தைக்குச் செய்ய வேண்டிய சேவையைக் கூட புறக்கணித்து விட்டு மனைவியுடன் 'சிற்றின்ப' வேட்கையில் மூழ்கியிருந்தார், எப்படி கோழி இறைச்சி தின்று விட்டு வயிற்றில் கோழி கூவுவதாக உணர்ந்தார், இங்கிலாந்தில் தனக்குத் திருமணமானதை மறைத்து அந்த நாட்டு இளம்பெண் ஒருவருடன் நெருங்கியதைப் பற்றி குற்றவுணர்வு கொண்டார் என்பதையெல்லாம் வாழ்க்கைப் பாடமாகக் கற்றுக் கொண்டோம். பின்னர் அவரது முழு புத்தகமான 'சத்திய சோதனை'யையும் மற்ற எழுத்துக்களையும் படிக்கும்போது அவர் பாலியல் தொழிலாளியிடம் போய் வந்தது பிற்காலத்தில் திருமண வாழ்வில் பிரம்மச்சாரியத்தை கையாண்டது என்று சவர்ண ஹிந்து ஆணுக்கு நெருக்கமான பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

அதில் இருந்து உலகத்தைக் காட்டுகிறார் மகாத்மா. அது கதகதப்பாக இருந்தது. அவரைப் போல ஒரு தலைவர் உண்டா என்று புளகாங்கிதம் அடைய வைத்தது. அவரைப் போற்றி எழுத வைத்தது.

எனவே, அம்பேத்கரைத் தேட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அம்பேத்கருக்கு அழைத்துச் செல்வதற்கு எனக்கு ஒரு கார்ல் மார்க்ஸ் தேவைப்பட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அது நடக்கலாம் அல்லது வாழ்நாள் முழுவதும் நடக்காமலே போய் விடலாம்.

ஆனால், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது நாம் எப்படி சிந்திக்கிறோம் நாம் எப்படி வாழ்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் வாழ்வது நாய்களுக்கும் ஆடுகளுக்கும் மட்டுமானால் உவப்பாகவும் பெருமையாகவும் இருக்கலாம். மனிதர்களைப் பொறுத்தவரை அது நாய் வாழ்க்கைதான். இந்தியாவில் ஹிந்துவாகவோ ஹிந்து அல்லாதவராகவோ அவர்ணராகவோ சவர்ணராகவோ திரிவர்ணிகராகவோ (இருபிறப்பாளர்) ஒரு பிறப்பாளராகவோ (சூத்திரர்களும் அவர்ணர்களும்), ஆணாகவோ பெண்ணாகவோ ஒருவர் இருக்கலாம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் முழுமையைப் புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரின் கோட்பாட்டு அடித்தளம் அவசியமாக இருக்கிறது.

மறுபடியும் இதனை வர்க்கப் பார்வையோடு இணைக்க வேண்டியுள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் ஒரு முதலாளியாகவோ அல்லது தொழிலாளியாகவோ, உற்பத்தி சாதனங்களை எதுவும் இல்லாதவராகவோ அல்லது உற்பத்தி சாதனங்களின் உடைமையாளராகவோ, உற்பத்தியில் ஈடுபடுபவராகவோ உற்பத்தியோடு தொடர்பில்லாதவராகவோ, ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். யாராயிருந்தாலும் முதலாளித்துவத்தில் நான் யார், எனக்கும் மற்ற தனிநபர்களுக்கும் என்ன உறவு. எனக்கும் மற்ற சமூகப் பிரிவினருக்கும் என்ன உறவு என்பதைப் புரிந்து கொள்ள மார்க்ஸ் மூலதனம் நூலில் கொடுக்கும் கோட்பாட்டுப் பின்புறம் இன்றியமையததாகிறது.

சாதியும் வர்க்கமும் என்ற இயங்கியல் நம்மிடையே பேசிப் பேசி சலித்துப் போன ஒரு trope ஆகியுள்ளது. அது ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கிறது, ஒவ்வொரு பொருள் பெறுகிறது. இந்த இடத்தில், 21ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சவர்ணரும் அவர்ணரும் இருபிறப்பாளரும் ஒற்றைப் பிறப்பாளரும் தத்தமது சாதியாக உள்ளனர்; முதலாளித்துவ சமூகத்தில் தங்களது பாத்திரம் மூலமாக ஒரு வர்க்கமாகவும் உள்ளனர். இந்த இரண்டுக்குமான இயங்கியல் அவ்வளவு நெருக்கமானதும், அது எவ்வளவு புறநிலையாக உள்ளதோ அவ்வளவுக்கு ஒவ்வொருவரின் அகநிலையாகவும் உள்ளது.

எனவே, சாதியையும் வர்க்கத்தையும் மேல்கட்டுமானத்தையும் பொருளாதார அடித்தளத்தையும் எதிரெதிர் சுவர்களாக வைக்க முடியாது. அவைப் பின்னிப் பிணைந்துள்ள double helix வடிவிலான DNA போன்று செயல்படுகின்றன.

வர்க்க நீக்கம் செய்வது போல, உணர்வுரீதியாக திட்டமிட்டு முறையாக சாதிநீக்கம் செய்து கொள்ளாத வரை நாம் எவ்வளவு 'நல்லவராக', எவ்வளவு 'முற்போக்காளராக', எவ்வளவு 'புரட்சியாளராக' இருந்தாலும் நாம் நால்வருண சாக்கடை சகதிக்குள் இருந்து தலையைத் தூக்கி உலகைப் பார்ப்பது முடியாத காரியம்தான்.

மார்க்ஸ் இதனை "கடந்த கால தத்துவ மனசாட்சியோடு கணக்கு தீர்த்துக் கொள்ளுதல்" என்கிறார். நமது கடந்த கால, நிகழ் கால தத்துவ மனசாட்சி இந்து மத தத்துவ மனசாட்சிதான். அதனுடன் கணக்கு தீர்த்துக் கொண்டு உண்மையான மனிதர்களாக மாற வழிகாட்டுவது அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளும் வாழ்க்கைப் போராட்டங்களும் அரசியல் செயல்பாடுகளும் பௌத்தம் பற்றிய அவரது வியத்தகு பணிகளும்தான்.

"இழப்பதற்கு ஏதுமில்லை அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது" என்று மார்க்சும் எங்கெல்சும் சொன்னதில் இழப்பதற்கு ஏதுமில்லை என்ற இடத்தை எட்டிப் பிடிப்போம், அதன் பிறகு பொன்னுலகம் இந்தச் சமூகத்தில் படைக்கப்பட்டு விடும். இப்போது ஒவ்வொருவருக்கும் இழப்பதற்கு என்று ஒரு வருணம் ஒரு சாதி ஒரு சமூகத் தனியுரிமை (அது உச்சநிலையில் உள்ள பார்ப்பனருக்கும் சரி, மிகவும் கீழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஏதோ ஒரு ளவில் பொருந்தும்) உள்ளது. அதைப் பாதுகாப்பதற்கு நம்மை அறிந்தும் அறியாமலும் பல intellectual குட்டிகரணங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். உச்சிக்குடுமியைப் பிடித்து அங்கும் இங்கும் நகர முடியாமல் அதை நமக்கு நாமே உணர வைக்கும் அண்ணல் அம்பேத்கருக்கு நன்றி சொல்லி இன்றைய பதிவை முடிக்கிறேன்.

ஜெய் பீம்! லால் சலாம்!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்