அகநிலையை வெளிப்படுத்தல்

 

ஜூன் 29, 2024 சனிக்கிழமை. காலை 4 மணி 30 நிமிடங்கள். அம்பத்தூர் குப்பம்.

இந்த வடிவம் எந்த அளவுக்கு சரியானது? மார்க்ஸ், அம்பேத்கர் இருவருமே தமது அகநிலை வெளிப்படுவதை மிகக் கவனமாக தவிர்த்துதான் தமது அரசியல் எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் அது முழு உண்மை கிடையாது. அண்ணல் அம்பேத்கர் தேவைப்படும் இடங்களில் தனது தீண்டாமை அனுபவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார், தனது சாதனைகளையோ தனது பெருமைகளையோ அல்ல.

தோழர் திருமாவளவன் அமைப்பாய் திரள்வோம் எழுதும் போதும் முழுக்க முழுக்க தன்னிலையை விலக்கி விட்டு எழுதுகிறார். தென்னாப்பிரிக்கா இனவெறி மாநாட்டுக்குப் போவது பற்றிய குறிப்புகளில் தன்னைக் குறிப்பிடுகிறார். அது வெறும் தகவல்களாகவே இருக்கிறது. அகநிலைக்குள் பெரிதாகப் போகவில்லை.

இதற்கு மாறாக, மகாத்மா காந்தி போன்றவர்கள், ஜெயமோகன் போன்றவர்கள் அகநிலையின் வெளிப்பாட்டை வியாபாரம் ஆக்குவதற்கான முன்னோடிகளாக உள்ளார்கள். டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கி போன்றவர்கள் தமது அகநிலையை கற்பனை கதாபாத்திரங்களாக மாற்றி உலாவ விட்டார்கள். தமது கதையைச் சொன்னார்கள்.

இப்போது எனது அகநிலையை ஆயுதமாக்குவதற்கான அவசியம் என்ன? இந்தியாவின் சவர்ண இந்துக்கள் மார்க்சைப் படிப்பதில் வெறுப்பைக் காட்டுவதில்லை. தேவையில்லை என்று அலட்சியமோ அல்லது மார்க்சியத்தை நிராகரித்தலோ அதில் இருக்கலாம். ஆனால், வெறுப்பு இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் மார்க்ஸ் முழுக்க முழுக்க புறநிலையில் எழுதியிருப்பது. அவர் அகநிலைக்குள் போயிருந்தால், அது பல இடங்களை நமக்குள் தொட்டிருக்கும் நம்மை தொந்தரவுபடுத்தியிருக்கும். அந்த அகநிலைச் சிக்கல்களை மார்க்ஸ் புனிதக் குடும்பம், ஜெர்மன் கருத்தியல் போன்ற ஆக்கங்களோடு வரம்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அம்பேத்கர் புறநிலையாக எழுதியதும் சரி அகநிலையாக எழுதி வைத்திருந்ததும் சரி இந்து மனசாட்சியை அசைத்துப் பார்க்கவில்லை. காலனிய ஆட்சிக்குப் பிந்தைய இளம் இந்தியக் குடியரசில் கூட சவர்ண ஆதிக்கம் தெளிவாக இருந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அரசியல் முக்கியத்துவம் பெற்றுவிட அனுமதித்துவிடக் கூடாது என்பதில் நேரு தலைமையிலான காங்கிரஸ் தெளிவாக இருந்திருக்கிறது. அம்பேத்கரை காங்கிரஸ் குடைக்குள் கொண்டு வர முடியவில்லை என்றதும் அவரை அழித்து பொருத்தபாடற்று செய்வதில் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.

இன்று பா..க வை எதிர்த்துப் போராடும் எல்லா சக்திகளும் அன்று காங்கிரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. அன்று என்றால் 1980கள் வரை. சொல்லப் போனால் 1990களின் இறுதிவரை என்று சொல்லலாம். காங்கிரசும் சரி பா..கவும் சரி இந்திய ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எனவே உழைக்கும் வர்க்க அமைப்புகள் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது காங்கிரசையும் பா..க ஆட்சியில் இருக்கும்போது பா..கவையும் எதிர்க்கின்றன. அதே நேரம் காங்கிரசை எதிர்க்கும் இயக்கங்களில் எதிர்க்கட்சியான பா..க இணைந்து கொள்கிறது. பா..கவை எதிர்க்கும் போது காங்கிரஸ் அதில் இணைந்து கொள்கிறது. இரண்டும் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் கட்சிகள் என்பதில் மாற்றம் இல்லை. அதில் ராகுல் காந்தி போன்றவர்களும் இருக்கிறார்கள் சசிதாரூர் போன்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களை குறிப்பிட்ட பாத்திரத்துக்கு பார்ப்பன பனியா முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

பேசிக் கொண்டிருந்தது அம்பேத்கரை முறியடித்த அல்லது முறியடிக்க முயன்ற காங்கிரசின் சதியைப் பற்றியது. இப்போது அதே அம்பேத்கரின் கருத்தியலை வெற்றாக்கிய வடிவில் பா..கவும் காங்கிரசும் தூக்கிப் பிடிக்கின்றன. கருத்தியல் இல்லாத அம்பேத்கர் அவர்களுக்குத் தேவைப்படுகிறார். அவரது கருத்தியலை எப்படி இவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடிந்தது?

காந்தியின் செல்வாக்கும் தாக்கமும் இவ்வளவு பெரிதாக ஏன் இருந்தது? காந்திக்கு முன் கைகட்டி நின்ற ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் மீது அதிகாரம் செலுத்த முயன்றது ஏன்? அம்பேத்கரை தனது அமைச்சராக வைத்து வேலை வாங்க முடிந்தது ஏன்?

அமைப்பாய்த் திரள்வோம் நூலில் தோழர் திருமாவளவன் அமைப்பாவது, அங்கீகாரம் பெறுவது, அதிகாரத்தை வெல்வது என்று முன்வைக்கிறார். அதில் அங்கீகாரம் பெறுவது என்ற கட்டம் வரை வந்து விட்டார். ஆனால், அதற்கு செயல் உத்தியாக தி.மு.கவை (அல்லது அதற்கு முன்னர் அ.தி.மு.கவை சில தேர்தல்களில், சி.பி.எம் கூட விஜயகாந்தையும் சேர்த்து ஒரு தேர்தலில்) சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஏன் சவர்ண இந்து ஆண்களையும் பெண்களையும் திருமாவளவன் அரசியல் அடிப்படையில் வென்றெடுக்கவில்லை. அதற்கான காரணம் அவர் அகநிலையை மறைத்துக் கொண்டதா? அகநிலையை வெளிப்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்க சிந்தனையாளர்கள் மகத்தான செல்வாக்கை ஈட்டியிருக்கிறார்கள். அதனை மறைத்துக் கொண்ட மார்க்சும் அம்பேத்கரும் எளிதாக புறந்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது வடிவம் பற்றிய பிரச்சனை. இந்து சவர்ண ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த வழியில் அரசியலைக் கொண்டுபோவது என்ற சிக்கல். கல்யாண் ராவ் போன்றவர்களும் மாரி செல்வராஜ் போன்றவர்களும் autofiction என்ற வகையில் சமூகத்துடன் பேசினார்கள். மாரி செல்வராஜ் தனது சொந்த அனுபவங்களாகவே ஆனந்த விகடனில் தொடர்கட்டுரை எழுதினார். அது அவரை பலருடன் நெருக்கமாகப் பிணைத்தது. கலைத்துறையில் ஒரு சக்தியாக அவரை உருவாக்கியது. அவரது எழுத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.

கடந்த ஒரு வாரத்தில் சூத்திரர்கள் யார் என்ற நூலின் மொழிபெயர்ப்பை சரிபார்த்து தொகுக்கும் வேலையையும் முடித்தேன். இந்தியாவில் சாதிகள், சாதியை அழித்தொழித்தல் ஆகிய ஆக்கங்களுக்கான கலைச்சொல் அகராதியை சரிபார்த்து இறுதி செய்தேன். Becoming Babasaheb என்ற ஆகாஷ் சிங் ராத்தோர் எழுதிய நூலை வாசித்து முடித்தேன். No Laughing Matter என்ற Unnamati Syama Sundar எழுதிய நூலான கேலிச்சித்திரப் படங்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். ஆர். எஸ். சர்மாவின் பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நேற்று அமைப்பாய்த் திரள்வோம் நூலை வரப்பெற்றிருக்கிறேன்.

இவற்றை எல்லாம் நான் உள்வாங்கும் வடிகட்டி எனது சவர்ண இந்து ஆண் சிந்தனை முறைதான். மாரி செல்வராஜ் எழுதியது மறக்கவே நினைக்கிறேன் என்ற தலைப்பில். அதற்காகவே விகடன் சந்தாதாரராக மாறி விட்டேன். ஒரு மாதத்துக்கு ரூ 129. ஜூலை 29 வரை வரும். புத்தகங்கள் வாங்குவதை விட இது செலவு குறைவானது. எனது படிக்கும் பழக்கத்துக்கு ஏதுவானதும் கூட.

மாரி செல்வராஜ் மற்ற மனிதர்களை நேசிக்கிறார். எனக்குள் மற்ற மனிதர்கள்மீது வெறுப்பும் ஆத்திரமும் மண்டிக் கிடக்கிறது. எல்லோரும் என்னுடைய சொத்தைக் கொள்ளையடித்துப் போவதற்காக உலாவிக் கொண்டிருப்பதாக யாரைப் பார்த்தாலும் கரிக்கிறது. அதுதான் யாருடனும் ஒட்ட விடாமல் செய்திருக்கிறது, செய்து வருகிறது.

உச்சாணிக் கொம்பில் எப்போதும் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற மிதப்பு நிறைய இருக்கிறது. இது எங்கிருந்து வந்தது?

சில உடல்கள், அந்த உடல்களினுள் உறையும் மூளை, அந்த மூளையால் இயக்கப்படும் உறுப்புகள் அவை எல்லாவற்றினுள்ளும் இருக்கும் உயிரணுக்கள் - மரபணுக்களின் சேர்க்கை - என்னை இப்படி மாற்றியிருக்கலாம். இதே போன்ற அல்லது இதை ஒத்த உயிரணுக்களின் சேர்க்கையும் இல்லை மரபணுக்களின் சேர்க்கையும் இதே போன்ற அல்லது இதை ஒத்த குடும்பச் சூழலும் கிடைத்த பலர் இதை போன்ற பண்புகளைக் கொண்டிருக்கலாம்.

நான் மாரி செல்வராஜ் போல எழுத வேண்டுமானால் எல்லாம் எதிர்மறையாகத்தான் வரும். முதலில் மிக மிக உறுத்துவது . வாழ்நாள் முழுவதும் திரட்டி வைத்திருந்த ஒவ்வாமையை அவர் மீதும் கொட்டினேன். அவர் அப்பாவியான இளைஞர். அப்பாவியாக என்னை அணுக முயன்றார். நான் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தனிமையில் வறண்டு போய்க் கிடந்தவன். எல்லோர் மீதும் சலிப்பு உலகத்தின் மீது வெறுப்பு யாரிடமும் அன்பு காட்டுவதற்கு பயம் என்று உள்வாங்கிக் கொண்டு கிடந்தேன்.

அதனால், மன அழுத்தமும் அதிகமாகி கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாகத்தான் இருந்தேன். அதற்கு முன்னர் சேர்ந்து தங்கியிருந்த என்னை விட முதிர்ந்த நபர். ஆனால், நான்தான் மூத்த தோழர். அவர் என்னிடம் முரண்படவே இல்லை. வியத்தகு பொறுமையுடன் என்னை சகித்துக் கொண்டார். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி, தோழர், அமைப்பு முறை என்ற வடிவம் காரணமாக இருந்திருக்கலாம். அதற்கு முன்னர் யாருடனும் சேர்ந்து தங்கியிருக்கவில்லை.

ஓர் இரவு பேசியதில் அவர் வலுவாகக் காயப்படுத்தப்பட்டார். இருந்தாலும் அறையைப் பிடித்து ஒரு சில மாதங்கள் சேர்ந்து தங்கியிருந்தோம். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்பியல்பு கொண்டவர்கள். அதாவது நான் மேலே சொன்ன உயிரணு, மரபணு சேர்க்கை எங்கள் இருவரும் ஒரே மாதிரி என்று சொல்லலாம். ஆனால், அவர் என்னைப் போல வளரவில்லை. அவர் சமூக மனிதனாக வளர்ந்தார். நான் சமூகமற்ற மனிதனாக சமூகத்துக்கு எதிரான மனிதனாக வளர்ந்திருந்தேன். இருவரும் எப்படியோ முட்டிக் கொண்டோம், மோதிக் கொண்டோம்.

அதற்கு முன்னதாக யாரும் இல்லை. வேலூரில் தனியாக, காட்பாடியில் தனியாக, ராமாபுரத்தில் தனியாக அதற்கு முன்னதாக வளசரவாக்கத்தில் தனியாக அதற்கு முன்னதாக மதனந்தபுரத்தில் தனியாக வாழ்ந்திருக்கிறேன். வாழ்ந்தபோதும் மனதளவில் தனியாகவே வாழ்ந்திருந்தேன். அந்தத் தனிமையின் உறவாடலில்தான் உருவானார்கள். எவ்வளவு முயற்சித்தும் என்னை அந்தக் கூட்டிலிருந்து வெளியில் கொண்டு வர முடியவில்லை. கூண்டில் அடைத்த புலியைப் போல சீண்டியவர்களை கடித்துக் குதறிக் கொண்டிருந்தேன்.

அவர்கள் முதல் ஆட்கள் இல்லை. என்ன நேசித்தவர்களை புண்படுத்துவது வயது வந்த நாளில் இருந்தே தொடங்கி விட்டது. புண்படுத்தி புண்படுத்தி இறுதி வரை புண்படுத்தி வந்திருக்கிறேன். என்னை சிறகு விரித்து பாதுகாப்பதில் இறுதிவரை போராடிக் கொண்டிருந்தாள். புண்படுத்தியிருக்கிறேன். சாவதற்கு முந்தைய நாட்களில் போய்ப் பார்த்தது கூட இல்லை.

புண்படுத்தியிருக்கிறேன். எனது கூட்டுக்குள் தனிமைக்குள் இருந்து கையை வெளியில் நீட்டவே இல்லை. உள்ளே கை நீட்டி எனது கையைப் பற்ற வந்தவர்கள் எல்லோரையும் கடித்துக் குதறியிருக்கிறேன். ஆனால், அப்படி அடைபட்ட விலங்கின் மீது காட்டும் நேசத்தை முதலிலும் சகிப்பை பின்னரும் காட்டி விட்டு அப்படியே ஒதுங்கி விட்டார்கள்.

மிக மிக தனிமையாக இருப்பது எனது தனியுரிமை இல்லை. அதில் இருந்து கொண்டு எல்லோரையும் நோகடிப்பதும் எனது தனியுரிமை இல்லை. நான் சமூகமற்ற மனிதனாக இருந்திருக்கிறேன், இருந்து வருகிறேன். எனது haughtiness ஆல் இரத்தம் சிந்த வைத்தவர்கள் ஏராளம். யாரையும் எனக்கு நேசிக்கத் தெரியாது. அதைக் கற்றுக் கொள்ளவில்லை. அப்படி கற்றுக் கொடுக்க வந்தவர்களை முறைத்து உறுமி கடித்துக் குதறி துரத்தி விட்டிருக்கிறேன். நான் தனியாகக் கூட்டுக்குள் அமர்ந்து கொண்டு தண்ணீரில் அழும் கண்ணீர் வெளியில் தெரியக் கூடாது என்று தலைமறைத்திருக்கிறேன்.

ஆனால், உள்ளிருந்து வரும் ஓசை கேட்டு எல்லோரும் பதறுகிறார்கள். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று கைகழுவி விடுகிறார்கள். மாரி செல்வராஜ் போன்று அன்பில் நிறைந்து வழியும் அன்பை வழியவிடும் மனிதனாக இல்லை. பிரச்சனை வேறு எங்கும் இல்லை. எனது அகநிலையில் மட்டும்தான் உள்ளது. அந்த அகநிலையை சரி செய்வதற்கு வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை. நான்தான் அந்த முட்டை ஓட்டை உடைத்து வெளியில் வர வேண்டும்.

இது மிக மிக நேர்மறையான ஒரு சித்திரமாக ஆகி விட்டது. என்னை நியாயப்படுத்துவதாக ஆகி விட்டது. ஆர்.எஸ். சர்மா சூத்திரர்களைப் பற்றியும் பார்ப்பனர்களைப் பற்றியும் எழுதுவது போல உள்ளது. அம்பேத்கர் சூத்திரர்களைப் பற்றியும் பார்ப்பனர்களைப் பற்றியும் எழுதுவதில் உள்ள நியாய உணர்வு இதில் சுத்தமாக இல்லை. இதிலும் என்மீதுதான் கவனம் குவிகிறது. மற்றவர்கள் அதில் கதாபாத்திரங்களாகத்தான் வந்து போகிறார்கள்.

உன்னுடைய கதையில் மட்டும்தான் நீ கதாபாத்திரம். மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது, அவர்கள் நாயகிகளாக இருக்கும் கதை. அதற்குள் போக வேண்டும். நான் இன்னும் பாலுக்கு அழும் குழந்தையாகவே இருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்