சீனா புத்தகம் - 01
சீனா என்ற நாட்டைப் பற்றி முதன்முதலில் படித்தது 1980 ஆம் ஆண்டில் என்று நினைவு . அந்த ஆண்டு சோ ராமசாமி நடத்தி வந்த துக்ளக் இதழின் ஒரு பெட்டிச் செய்தியில் சீனா பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருந்தது . சீனாவில் அதிகரித்து வரும் உழைக்கும் மக்கள் தொகை முழுவதற்கும் வேலை வாய்ப்புகளை வழங்க முடியவில்லை ; எனவே , அதுவரை பின்பற்றப்பட்டு வந்த இரும்புக் கிண்ணம் என்ற முறை கைவிடப்படுகிறது என்றது அந்தச் செய்தி . அந்தச் செய்திக்குத் துணையாக நிறையபேர் மிதிவண்டியில் பயணிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது . சோ ராமசாமியின் துக்ளக் இதழ் எனக்குப் படிக்கக் கிடைத்தது ; அப்போது எனக்கு வயது எட்டு . அப்படியானால் , நான் வளர்ந்த அரசியல் பண்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ளலாம் . ஆம் , சவர்ண இந்துக் குடும்பத்தில்தான் நான் வளர்ந்து கொண்டிருந்தேன் . இது ஓர் இடைக்குறிப்பாக ; எந்தப் பார்வையில் நான் உலகைப் பார்க்கத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிடுவதற்காக . இரும்புக் கிண்ணம் (Iron bowl) என்பது வாழ்நாள் முழுவதற்கும் வேலையை உறுதி செய்வது என்ற முறை . ஒருவர் படித்து முடித்து ஒரு வேலையில் சேர்ந்து விட்டால் அவர் ஓய்வு பெறும் வரை...