சீனா புத்தகம் - 01

சீனா என்ற நாட்டைப் பற்றி முதன்முதலில் படித்தது 1980ஆம் ஆண்டில் என்று நினைவு. அந்த ஆண்டு சோ ராமசாமி நடத்தி வந்த துக்ளக் இதழின் ஒரு பெட்டிச் செய்தியில் சீனா பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருந்தது. சீனாவில் அதிகரித்து வரும் உழைக்கும் மக்கள் தொகை முழுவதற்கும் வேலை வாய்ப்புகளை வழங்க முடியவில்லை; எனவே, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த இரும்புக் கிண்ணம் என்ற முறை கைவிடப்படுகிறது என்றது அந்தச் செய்தி. அந்தச் செய்திக்குத் துணையாக நிறையபேர் மிதிவண்டியில் பயணிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது.

சோ ராமசாமியின் துக்ளக் இதழ் எனக்குப் படிக்கக் கிடைத்தது; அப்போது எனக்கு வயது எட்டு. அப்படியானால், நான் வளர்ந்த அரசியல் பண்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ளலாம். ஆம், சவர்ண இந்துக் குடும்பத்தில்தான் நான் வளர்ந்து கொண்டிருந்தேன். இது ஓர் இடைக்குறிப்பாக; எந்தப் பார்வையில் நான் உலகைப் பார்க்கத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிடுவதற்காக.

இரும்புக் கிண்ணம் (Iron bowl) என்பது வாழ்நாள் முழுவதற்கும் வேலையை உறுதி செய்வது என்ற முறை. ஒருவர் படித்து முடித்து ஒரு வேலையில் சேர்ந்து விட்டால் அவர் ஓய்வு பெறும் வரை அதே வேலையில் நீடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஓய்வுபெற்ற பிறகும் ஓய்வூதியமும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த இரண்டும் ஒட்டு மொத்த சமூகத்தின் பொறுப்பு; அதாவது அரசாங்கத்தின் பொறுப்பு.

அப்படி எல்லோருக்கும் வேலை கொடுத்து வாழ்நாள் முழுவதும் அவர்களை உற்பத்தியில் ஈடுபடுத்த முடியவில்லை என்பதுதான் செய்தியின் சாரம். எனவே, பொருளாதாரத்தின் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளைக் கைவிட்டு, சந்தையில் போட்டி அடிப்படையிலான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறார்கள் என்றும் எழுதியிருந்ததாக நினைவு. அதாவது அயல்நாட்டு முதலீட்டாளர்களை சீனாவுக்கும் முதலீடு செய்ய அனுமதிக்கிறார்கள்.

அதுவரை, சோவியத் ஒன்றியத்தைக் குறிப்பிட இரும்புத் திரை (iron curtain) என்ற சொல் இருந்தது; அதாவது வெளிஉலகத்திலிருந்து அந்த நாட்டு மக்கள் இரும்புத் திரை ஒன்றால் பிரிக்கப்பட்டிருந்தனர்; மறைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வெளி உலகம் மறைக்கப்பட்டிருந்தது. சீனாவுக்கான அதற்கு இணையான சொல் - மூங்கில் திரை என்பது (bamboo curtain). சீனாவில் மூங்கில்கள் நிறைய விளைவதால் அந்தப் பெயராக இருக்கலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் நடந்தவற்றைப் பார்க்கும்போது, இந்தப் பெயர்கள் பொருத்தமாகவே இருந்திருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் இரும்புத்திரை வீழ்த்தப்பட்டது; சீனாவின் மூங்கில் திரை வளைந்து கொடுத்துக் கொண்டது; இன்னும் நிற்கிறது.

மேலே சொன்ன செய்தியில் இன்னொரு தகவல் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்கிறது என்பது. கம்யூனிஸ்ட் கட்சியால் தனது இரும்புக் கிண்ணக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை. எனவே, கம்யூனிசம் தோற்று விட்டது என்பது அந்தச் செய்தியின் உள்குத்து. துக்ளக் சோ ராமாசாமி மிகவும் வெளிப்படையான முதலாளித்துவ ஆதரவாளர்; கம்யூனிச எதிர்ப்பாரள் என்பது ஊரறிந்த உண்மை. அவரை அதை என்றுமே மறைத்துக் கொண்டதில்லை.

அவர் ஜனசங்கத்தையும் பிற்காலத்தில் ஜனதாவையும் ஆதரித்தவர்; காங்கிரசை முழுமூச்சாக எதிர்த்தவர்; தி.மு.க ஒழிந்து போக வேண்டும் என்ற கருத்தியல் நிலைபாடு கொண்டவர். தமிழ்நாட்டில் தி.மு.கவை உடைத்து அ.தி.மு.க உருவான போதுதான் அவரது பத்திரிகையே உருவாகிறது. தொடக்கத்தில் எம்.ஜி. இராமச்சந்திரனின் அ.தி.மு.கவை அதன் தி.மு.க எதிர்ப்புக்காக ஆதரித்தார்; அவர் முதலமைச்சராக அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் அவரது கோமாளித்தனங்களையும் கிண்டல் செய்யத் தொடங்கினார். 1984இல் ஆந்திர பிரதேசத்தில் என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சி இந்திரா காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது; அப்போது துக்ளக் இதழின் அட்டைப் படத்தில், ஆந்திரா என்ற வீட்டின் சுவரில் தொங்கும் பெயர்ப்பலகையை ராமாராவ் மாற்றுவதாக வெளியானது. “இந்திரா" என்ற பெயர்ப்பலகையை கழற்றி விட்டு "ஆந்திரா" என்று மாட்டுகிறார். அதாவது ஆந்திராவின் அடையாளத்தை மீட்கிறார்.

இந்தக் கதை இப்படியே போகிறது. இப்போது சீனாவுக்குத் திரும்பி வருவோம்.

சீனாவைப் பற்றிய அடுத்த பெரிய செய்தி 1989இல் வெளியானது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளாக சோவியத் ஒன்றியத்தில் மிகையில் கோர்பச்சேவ் என்பவர் பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்நாஸ்ட் என்ற கொள்கைகளை செயல்படுத்துவதாக ஆங்காங்கே செய்திகள் வந்து கொண்டிருந்தன. 1989இல் நான் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். அதற்குள் நிறைய வாசிக்கத் தொடங்கியிருந்தேன். பெரும்பாலும் தமிழில் எங்கள் வீட்டில் கிடைக்கும் புத்தகங்களையும் அருகில் உள்ள ஒரு பேராசிரியரின் வீட்டில் இருந்த சோவியத் நூல்களையும் தமிழ் தொடர்கதைகளையும் வாசிக்கும் பழக்கம் என்ற அளவிலேயே அது இருந்தது. பள்ளிப் பாடப் புத்தகங்கள், அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து புத்தகங்கள் என்று எனது வாசிப்புத் தாகத்துக்கு தீனி கிடைத்தது. மாவட்ட நூலகத்துக்குப் போக அம்மா அனுமதிக்கவில்லை.

1989இல் சீனாவைப் பற்றிய செய்தி இதுதான்; சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியான்-அன்-மென் சதுக்கத்தில் நடந்த மாணவர் எழுச்சி பற்றி தினத்தந்தி, தினமலர் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் எட்டு பத்திகளில் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பெய்ஜிங் என்பதை எப்படி எழுத வேண்டும் (பீகிங், பெய்கிங், பீஜிங்), தியன்-அன்-மென் என்பதை எப்படி ஒலிக்க வேண்டும் (தியனானமனன் என்று தமிழ் செவிக்கு இணக்கமாக ஒலிக்க வேண்டும்). என்று வேடிக்கையான பேச்சுக்கள் கூட எங்கள் நண்பர்கள் கூட்டத்துக்குள் நடந்தது.

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்றால், 1990 வரையில் சீனாவைப் பற்றியோ அதன் பண்பாட்டைப் பற்றியோ அதன் மக்களைப் பற்றியோ பெரிய அளவில் நான் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பிந்தைய நான்கு கல்லூரி ஆண்டுகளிலும் அதே நிலைமைதான். அப்போது வாசிப்பு இன்னும் விரிவடைந்தது. அமெரிக்க நூலகத்தில் கிடைத்த நூல்களில் இருந்து அமெரிக்க வரலாறு, அமெரிக்க அரசியல், அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய நிறைய தெரிந்து கொண்டேன். கன்னிமரா நூலகத்தில் இருந்தும் தாம்பரம் காமராஜர் நூலகத்தில் இருந்தும் பல கதைப்புத்தகங்கள் படித்துக் கொண்டேன். சீனா இன்னும் எனது உலகப் பார்வையிலோ வாழ்க்கையிலோ பெரிதாக நுழையவே இல்லை.

படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போனேன். அது மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகருக்கு அருகில் உள்ள தேவாஸ் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலை. இந்தூர் நகரில் தங்கிக் கொண்டு தினமும் நிறுவனத்தின் பேருந்தில் தேவாஸ் போய் வருவோம். தூரம் சுமார் 35 கிலோமீட்டர், பயண நேரம் - காலையில் போக்குவரத்து நெரிசல் குறைவான நேரத்தில் சுமார் 40 நிமிடங்கள். 7.30 மணி தொழிற்சாலைக்குப் போக 6.40க்கு இந்தூரில் பேருந்து ஏறுவோம். மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகாம இருப்பதால் 1 மணி நேரம் வரை ஆகி விடும். 4 மணிக்கு பணி முறை முடிந்து 4.15க்கு பேருந்து புறப்பட்டால் இந்தூர் போய்ச் சேர 5.30 தாண்டி விடும்.

முதன்முதலில் அங்கு போய்ச் சேர்ந்தபோது நிறுவனத்தின் பொறியியல் பட்டதாரி பயிற்சியாளரின் தங்குமிடத்தில் இறங்கினோம். அங்கு எங்களுக்கு முந்தைய ஆண்டு படித்து முடித்து டாடாவில் வேலைக்குச் சேர்ந்திருந்த ******, ******, ****** மூவரும் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்திருந்த நான்காவது பட்டதாரி ****** ஏற்கனவே வேலையை விட்டுப் போயிருந்தார்.

புதிய ஊர், புதிய வேலை, புதிய நிறுவனம், புதிய வகை உணவுகள், புதிய மொழி என்று மருமமாக இருந்த நிலையில் ******லும் ******தான் எங்களுக்கு வழிகாட்டியவர்கள். டாடா நிறுவனத்துக்கு ஹாங்காங் நகரில் ஒரு கிளை இருந்தது. தேவாசில் இருந்து தொழிற்சாலையை நடத்தியது டாடா எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (டாடா ஏற்றுமதி நிறுவனம்). அதன் தலைமையகம் பம்பாயில் (இப்போது மும்பை) இருந்தது. பம்பாய் இந்தூரில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தத் தலைமையகம் பம்பாயின் வொர்லி என்ற இடத்தில் இருந்தது. அதே நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளை நிறுவனமாக செயல்பட்டது டாடா எக்ஸ்போர்ட்ஸ் சவுத் ஈஸ்ட் ஏசியா லிமிடெட் (டாடா ஏற்றுமதி தென்கிழக்கு ஆசியா நிறுவனம்); அது ஹாங்காங் நகரில் இருந்தது. பம்பாயில் இருந்து ஹாங்காங் 4,295 கி.மீ தொலைவில் உள்ளது.

தோல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் சரி, பொதுவாக பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது கவர்ச்சிகரமான ஆசைகளில் ஒன்று. நாங்கள் இந்தூர் போய்ச் சேர்ந்த முதல் வார இறுதியில் (சனிக்கிழமைதான் விடுமுறை நாள்), ******ம் ******ம் வெளியில் சாப்பிடப் போனார்கள். திரும்பி வந்து நாங்கள் "ஹாங்காங்" உணவகத்தில் சாப்பிட்டோம் என்று இருபொருள்படச் சொன்னார்கள். ஏதோ ஹாங்காங் போய் விட்டு வந்தார்கள் என்று எனக்குத் தோன்றியது. நம்மையும் கூட்டிக் கொண்டு போகவில்லையே என்று பொறாமையாக இருந்தது. அதன்பிறகு அடுத்த ஓரிரு வாரங்களில் அந்த உணவகத்துக்குப் போனோம். அது இந்தூரின் பலாசியா நாற்சந்தியில் மாடியில் இருந்த ஒரு சீன உணவகம்.

அங்கு ஒருமுறை மட்டும்தான் சாப்பிட்டேன் என்று நினைவு. அந்த உணவகத்தின் வாசனைகளும் உணவின் சுவையும் ஒத்துவரவில்லை. அஜினோமோட்டோ, சோயாபீன்ஸ் எண்ணெயை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதற்குப் பிறகு தென்னிந்திய உணவகங்கள், அந்த ஊர் உள்ளூர் தின்பண்டங்கள் என்று நான் விலகி விட்டேன். இந்தூரில் சீன உணவு எனக்கு அவ்வளவாக ருசிக்கவில்லை, ரசிக்கவில்லை.

அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும்போது, ஹாங்காங் சரக்காணைகளுக்காக உற்பத்தி நடக்கும். மறுபுறம் ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளுக்கு உற்பத்தி நடக்கும். ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு வாடிக்கையாளர் - என்.எஸ்.டபிள்யூ என்ற நிறுவனம், அதன் இந்திய முகவராக எ****** என்பவர் இருந்தார். அவர் நாங்கள் படித்த தோல் தொழில்நுட்பக் கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்தவர். இந்த டாடா தோல் தொழிற்சாலையில் அப்போது துணைத் தலைவராக இருந்த ******ம் அதே கல்லூரியில் படித்தவர்தான்; காஷ்மீர் பண்டிட்.

இது போக, அந்த வளாகத்துக்குள்ளேயே இருந்த காலணி உற்பத்தி நிறுவனத்துக்கும் தோல் சட்டை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கும் சிறிதளவு தோல் செய்வார்கள். ஆக்ரா, சென்னை, டெல்லி சந்தைகளுக்காக உள்நாட்டு தோலும் உற்பத்தி செய்வார்கள். ****** தோல் உற்பத்தி நிறுவனத்துக்கு மட்டும் துணைத்தலைவர். ஒட்டு மொத்த வளாகத்துக்கான தலைவராக மேலாண்மை முதுகலைப் பட்டம் பெற்ற (எம்.பி.****** இருந்தார். அவரது பதவி உறைவிட இயக்குநர். அவர் ஐ..எம் அகமதாபாதில் படித்தவர். அறிவுசார் மேலாளர். ****** நடைமுறை சார் மேலாளர்.

எனவே, தோல் உற்பத்தி ஆலையில் சீன வாடிக்கையாளர்களுக்கான உற்பத்தியும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கான உற்பத்தியும்தான் முதல் உரிமை பெறும். நாங்கள் சேரும்போது தோல் தொழில்நுட்பத்தின் முனைவர் பட்டம் பெற்ற ****** என்பவர் விற்பனைப் பிரிவின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார். எனவே, உற்பத்தி மட்டும்தான் ******ன் பொறுப்பில்.

அடுத்த நான்கு ஆண்டுகள் நான் அங்கு வேலை செய்து முடித்த போது ஓ.கே. கவுல் ஒட்டுமொத்த வளாகத்தின் தலைவர் ஆகியிருந்தார். அவரது பதவி இயக்குநராக இருக்கவில்லை. ஆனால், பொறுப்பு என்னவோ இந்த வளாகத்தைப் பொறுத்தவரை அதுதான். முதலில் விற்பனைப் பிரிவை நோகடித்து ******னை அகற்றி விட்டு ஒட்டு மொத்த தோல் ஆலையின் பொறுப்பையும் பெற்றார். அதாவது வாங்குவது தொடங்கி உற்பத்தி விற்பனை வரை முழுமையாக அவரது பொறுப்புதான். அதே நேரம் வளாகத்தில் இருந்த காலணி உற்பத்தி ஆலையும் தோல் ஆடை உற்பத்தி ஆலையும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. எனவே, தோல் விற்பனையை முடுக்கித் தள்ளினார். வளாகத்துக்குள் தர வேண்டிய தோலை புறக்கணித்தார். அந்த மேலாளர்களை நோகடித்து நோகடித்து ஒட்டு மொத்த வளாகத்துக்கும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தோல் துறை தொடர்பான நிறுவனங்களுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்தக் கதை எதற்கு என்றால் சீனா பற்றிய உரையாடலில் இந்த ****** ஒரு முக்கியமான பாத்திரம் வகிப்பார். அதன் பிறகு ஏற்றுமதி விற்பனைத் துறையில் எழுத்தராக/மேலாளராக இருந்த ******, ஹாங்காங் சரக்காணைகளை பெற்று உற்பத்திக்கு அனுப்பி உற்பத்தியான தோல்கள் ஏற்றுமதிக்குச் செல்வதை கண்காணித்து ஒருங்கிணைக்கும் ****** என்பவர்.

ஹாங்காங்கில் உள்ள அலுவலகத்தில் ****** என்ற சென்னையைச் சேர்ந்த பார்ப்பனர் மேலாளராக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனமும் ******ன் கட்டுப்பாட்டில் வந்தது என்று நினைவு. தேவாசில் விற்பனைப் பிரிவில் வேலை செய்யத் தொடங்கி ****** என்பவரும் ஹாங்காங்குக்கு மாறுதல் பெற்றுப் போய் விட்டார். அதே போல கணக்குப் பதிவுத் துறையில் இருந்த ****** என்பவரும் ஹாங்காங் அலுவலகத்துக்கு மாறிப் போயிருந்தார். இவர்கள் இரண்டு பேரையும் நான் தேவாசில் வேலை செய்யும்போது நேரில் பார்த்திருக்கிறேன். அறிமுகமான முகங்கள். இவர்களைத் தவிர, ஹாங்காங் அலுவலகத்தில் ****** என்பவர் அலுவலக நிர்வாகியாகவும் ****** (என்று நினைவு) என்பவர் மற்ற பொருட்களை வர்த்தகம் செய்யும் பொறுப்பிலும் அமர்ந்திருந்தனர். இதெல்லாம் 1997 வாக்கில் இருந்த நிலைமை. 1993 முதல் 1997 வரை இந்த மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் போது நான் தேவாஸ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

முதலில் பயிற்சிக் காலத்தின்போதும் முதல் ஆண்டின் போதும் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டேன். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு தோலை மெருகேற்றும் (leather finishing) பிரிவில் வேலை செய்தேன். 1992 வாக்கில் ஏற்றுமதி விற்பனைப் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அஸ்வனி கோயல் ஹாங்காங் செல்வதால் அவரது இடத்தில் தோல் உற்பத்தி தொடர்பான அறிவு உடைய ஒருவர் வேண்டும் என்று தேடியதில் வெங்கடாசலபதி சிக்காமல் நான் அங்கு போனேன்.

இந்தச் சூழலில்தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். சீனா என்பது ஹாங்காங் வாடிக்கையாளர்களின் சரக்காணைகளுக்கான உற்பத்தி அட்டைகள் (Job Cards) என்ற வகையில்தான் அறிமுகம். ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தம்மளவில் நேரடியாகச் சந்தையில் தோல் பொருட்களை விற்கும் நிறுவனங்கள். பேலி, பீட்டர் கைசர், காபோர், சலமாண்டர் போன்றவர்கள். ஹாங்காங் வாடிக்கையாளர்கள் தாமே ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்பவர்கள்; சொந்தப் பெயரில் சந்தையில் பொருட்களை விற்காதவர்கள்.

எனவே, டாடா தேவாசில் இருந்து போகும் தோல் சீனத் தொழிற்சாலைக்குப் போய் அங்கு பொருளாக மாற்றப்பட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டையும் வணிக அடிப்படையில் ஒருங்கிணைப்பதற்கு ஹாங்காங்கில் முகவர் நிறுவனங்கள் இருந்தன. இந்தியாவில் இருந்து தோல் விற்பதற்கான நிறுவனமாக டாடா ஹாங்காங் இருந்தது. அதே போல அமெரிக்க வணிக முத்திரை நிறுவனங்களின் வாங்கும் முகவர்களாக நிறுவனங்கள் இருந்தன. அமெரிக்க வணிக முத்திரை நிறுவனம் சந்தைத் தேவைக்கு ஏற்ப இந்த மாதத்தில் இத்தனை காலணிகள் வேண்டும் என்று தேவையை அனுப்புவார்கள். அந்த அடிப்படையில் இந்த வாங்கும் நிறுவனங்கள் சீன காலணி உற்பத்தி ஆலைகளுக்கு சரக்காணை அனுப்புவார்கள். இந்த வாங்கும் நிறுவனங்களிடம் நேரடியாக சந்தைப்படுத்தல் என்ற உத்தியை டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே, சீனத் தொழிற்சாலைக்கு சரக்காணை கொடுக்கப்படும்போதே அதற்கான தோலை டாடாவில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்; அதற்கான விலை இன்னது என்று குறிப்பிட்டு விடுவார்கள்.

எனவே, செய்து அனுப்பிய தோலில் ஏற்படும் அளவுசார் சிக்கல்கள் அல்லது தரம்சார் சிக்கல்களை இவற்றைத் தவிர வேறு வகையில் சீனத் தொழிற்சாலையுடன் டாடா தேவாசுக்கு பெரிய அளவு தொடர்பு இருக்கவில்லை. டாடா ஹாங்காங் நிறுவனம் படிப்படியாக சீனத் தொழிற்சாலைகளுடன் உறவாடலை அதிகரிக்க வேண்டியிருந்தது. தோல் எப்போது வந்து சேரும் என்று கேட்பது முதல் படி. ஒரு கட்டத்தில் டாடா ஹாங்காங் நிறுவனம் தானே தோலை இறக்குமதி செய்து தனது சேமிப்பில் வைத்து தேவைப்படும் ஆலைகளுக்கு அனுப்பி வசூலிக்கத் தொடங்கியது.

இவ்வாறு மாறிக் கொண்டிருந்த சூழலில்தான் நான் தேவாஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்தேன். முதலில் தொழிற்சாலையில் பின்னர் ஏற்றுமதி விற்பனைப் பிரிவில்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

21ஆம் நூற்றாண்டு சீனா - ஒரு மார்க்சியப் பார்வை