2024 தேர்தல் சொல்லும் செய்தி என்ன?

1. YCLஇன் மதிப்பீடும் நிலைப்பாடும்
=============================

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் - இவர்கள் மட்டும்தான் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று தேர்தல் பரப்புரை செய்தார்கள். காங்கிரஸ் கட்சி, குறிப்பாக உத்தர பிரதேசம், இராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலை எதிர்த்து "ஜெய் சம்விதான்" என்று அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும்படி பரப்புரை செய்தது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

நவீன இந்திய அரசியல் என்பது படிநிலை ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட மனுதரும சட்டத்துக்கும் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அரசியலமைப்புச் சட்டத்துக்கும் இடையிலான போராட்டமாக உள்ளது. அரசியல் அமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் சனாதனத்துக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநாட்ட நடத்திய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சிக்கான சரியான வழி.

- நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் பற்றி இளம் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைக்கும் மதிப்பீடும் கருத்தியல் நிலைப்பாடும் இது.

இடதுசாரி கட்சிகள் பொருளாதாரவாதத்தை பின்பற்றி, பொருளாதாரப் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்தனர். அதனால்தான், பா.ஜ.கவை எதிர்த்து காங்கிரஸ் வெற்றி பெற்ற அளவுக்கு தாம் வலுவாக இருந்த மாநிலங்களில் கூட இடதுசாரி கட்சிகள் வெற்றி பெற முடியவில்லை. ஜனநாயகம் காப்போம் சனாதனத்தை ஒழிப்போம் என்ற கருத்தியலை வெகுமக்களின் அரசியல் முழக்கங்களாக மாற்றுவதுதான் பா.ஜ.கவைத் தோற்கடிக்க வழி. இதனை கம்யூனிஸ்ட் கட்சிகள் தமதாக்கிக் கொள்ள வேண்டும்.

- இதுதொடர்பான கிளப்ஹவுஸ் உரையாடலில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்.

2. இடதுசாரிகள் பற்றிய கருத்து தவறு என்ற விமர்சனம்
============================================

இடதுசாரிகள் பற்றி மேலே சொன்ன கருத்து தவறு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - "அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்" என்று 2019 தேர்தலின் போதே பரப்புரை செய்திருந்தது என்று தோழர் @~revolution மேலே சொன்ன கருத்தை மறுத்திருந்தார். மேலும் 2024 தேர்தலுக்கான சி.பி.எம்-இன் தேர்தல் அறிக்கையையும் பகிர்ந்திருந்தார். அதில் "அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்துநிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்" என்பதுதான் முதன்மை முழக்கமாக இருந்தது. எனவே, இடதுசாரி கட்சிகள் பொருளாதாரவாதத்தை பின்பற்றினர் என்பது தவறு.

முழுமைக்காக, @~revolution தோழரின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

"CPM 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசியல் அமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.. அதிலும் குறிப்பாக 2019 தேர்தலில் இதை ஒரு முழக்கமாக முன் வைத்தது.. 75 சுதந்திர தினத்தில் அரசியல் அமைப்பு பாதுகாப்பு நாளாக cpm அறிவித்து அன்றைய ஒருநாள் முழுக்க அரசியல் தலைமை குழுவில் உள்ள தோழர்கள் social media வில் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியம் குறித்து பேசினார்கள்.. 

ஆனால் அப்போதெல்லாம் ராகுல் மற்றும் ஸ்டாலின் வேறு வேளைகளில் கவனம் செலுத்தி இருந்தார்கள்.. இந்த தேர்தலில் கூட CPI, CPM, cpml (l) கட்சிகள் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது குறித்து தேர்தலில் பேசியுள்ளார்கள்... அதே சமயம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களின் அன்றாடா வாழ்வாதார நிலமை மோசமானதை தேர்தலில் பேச வேண்டிய கடமை இருக்கிறது... அந்த கடமை ராகுலுக்கோ, ஸ்டாலினுக்கோ இருக்க வேண்டிய தேவை இல்லை.. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் பொருளாதார வாத பிரச்சாரம் செய்ததால்தான் தோல்வி அடைந்தார்கள் என்ற YCL ன் மதிப்பீடு தவறானதாகும்.." 

அதாவது, இந்திய அரசியல் பற்றிய இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் மதிப்பீடு தவறானது. சி.பி.எம் அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதை முன்வைத்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தும் தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெற முடியவில்லை. எனவே, தேர்தலில் பா.ஜ.கவின் பின்னடைவுக்கும் காங்கிரசின் வெற்றிகளுக்கும் வேறு ஏதோ காரணம் உள்ளது.

சி.பி.எம் கட்சியின் மாநிலக் கிளைகள் தேர்தல் முடிவுகள் பற்றிய பகுப்பாய்வைச் செய்யவிருப்பதாக கட்சியின் மையக்குழுவும் பொலிட்பீரோவும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பிறகு நாடு முழுவதும் இடதுசாரிகளின் பின்னடைவு குறித்து தொகுப்பான அறிக்கை நமக்குக் கிடைக்கும். அது கிடைப்பது வரை காத்திருப்பதுதான் சரியானது. தேர்தல் களத்தில் நின்று செயல்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சி.பி.எம் கட்சித் தோழர்கள் தேர்தலைப் பற்றி என்ன மதிப்பீட்டை முன்வைக்கிறார்கள் என்பதில் இருந்து நமக்குப் பல புதிய புரிதல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்