21ஆம் நூற்றாண்டு சீனா - ஒரு மார்க்சியப் பார்வை

 

முன்னுரை

சீனாவைப் பற்றி தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் இந்த நூலின் தேவை என்ன என்ற கேள்வி யாருக்கும் எழாது என்றே நினைக்கிறேன்.

பொதுமக்களின் பார்வையில் செல்பேசிகள் தொடங்கி வீட்டுப் பொருட்கள் வரை சீனப் பொருட்கள் மலிவானவை என்று ஒரு காலம் இருந்தது. இப்போது சீன அலைபேசிகள் உயர்தரத்தில் அமெரிக்க பொருட்களுடனும் தென்கொரிய பொருட்களுடனும் போட்டி போடுகின்றன. அது போக, சூரிய மின்சக்தி தகடுகள், 5ஜி தொழில்நுட்பச் சாதனங்கள், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், அதிவேக தொடர்வண்டிகள் (புல்லட் ரயில்கள்) போன்ற துறைகளில் சீன நிறுவனங்கள் உலக அளவில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

முதலாளித்துவ பார்வையில் சீனப் பொருளாதாரத்தின் அளவு வாங்கும் திறன் அடிப்படையில் பார்க்கும் போது உலகின் முதலிடத்தில் உள்ளது. சந்தை பரிவர்த்தனை விகிதத்தில் பார்த்தால் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் கடுமையான பொருளாதாரப் போட்டியிலும் புவிசார் அரசியல் போட்டியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்திய அரசுத்துறையின் பார்வையில் பார்க்கும்போது சீனா ஒரு போட்டியாளர்; இந்தியாவின் பொருளாதாரத்தின் அளவு சீனப் பொருளாதாரத்தின் அளவில் ஆறில் ஒரு பங்குதான்; அதே நேரம் இரண்டு நாடுகளின் மக்கள்தொகை கிட்டத்தட்ட சமமானவை; எனவே, சீன மக்கள் இந்திய மக்களை விட சராசரியாக ஆறு மடங்கு வளம் பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், இந்திய ஆளும் வர்க்கம் சீனாவைப் போட்டியாளராகப் பார்க்கிறது. வடமேற்கில் அக்சய் சின் (லடாக் பகுதி) தொடங்கி வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் வரையில் நீண்ட எல்லைப் பகுதியில் இந்தியத் தரப்பும் சீனத் தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ளன. 1990களில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த எல்லையில் வெடிபொருள் ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடாது என்ற தடை உள்ளது. இருந்தாலும் தடிகளைக் கொண்டும் கம்பிகளைக் கொண்டும் கால்வான் பள்ளத்தாக்கில் 2020இல் இந்திய-சீன எல்லைக் காவல்படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரையில் சீனா பற்றிய நிலைபாடு இரண்டு வகைப்பட்டது

1.    சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடை சார்ந்து, சீனா சோசலிசக்கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள நாடு; நட்பு நாடு என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன் வைக்கும் நிலைபாடு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிலிருந்து பெருமளவு வேறுபடுவதில்லை.

2.    மார்க்சிய லெனினிய கட்சிகளும் குழுக்களும் முன்வைக்கும் – சீனா முதலாளித்துவ நாடு, ஏகாதிபத்தியமாக மாறி விட்டது என்ற வரையறை.

இந்தச் சிறுநூலில் மேலே சொன்ன முதல் நிலைபாட்டுக்கு ஆதரவான தரவுகளையும் தகவல்களையும் கோட்பாட்டு வாதங்களையும் முன்வைக்கிறேன். இதனை கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு மட்டுமான வெறும் கோட்பாட்டு ஆவணமாக ஆக்கவில்லை; அதே நேரம் பொதுமக்களுக்கான சீனாவைப் பற்றிய கையாடாக மட்டும் நிறுத்தவும் செய்யவில்லை. சீனாவைப் பற்றிய முழுமையான மார்க்சியப் புரிதலுக்கு இந்த இரண்டையும் இணைத்த ஒரு தொகுப்பை முன்வைக்கிறேன். அத்தகைய ஒரு வேலை சிக்கலானது; குழப்பிவிடும் சாத்தியத்தைக் கொண்டது; என்றாலும் தேவை கருதி அந்த அணுகுமுறையேயே மேற்கொண்டிருக்கிறேன்.

சீனாவின் முக்கியத்துவம்

சீனா சமீப காலம் வரையில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தது; இப்போது இந்தியா அதை முந்தி முதல் இடைத்தைப் பிடிக்க சீனா இரண்டாவது பெரிய மக்கள்தொகை நாடாக உள்ளது. அதாவது சுமார் 140 கோடி மக்கள் சீனாவில் வசிக்கின்றனர்; அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் ஐந்தில் ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள்; ஐந்தில் இன்னொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

இத்தனை கோடி மக்களும் உழைக்கின்றனர்; உற்பத்தி செய்கின்றனர்; நுகர்கின்றனர். உலகில் மூன்றில் ஒரு மனிதர் இந்த இரண்டு நாடுகளில் வாழ்கின்றனர். எனவே, இந்தியா சீனாவுடன் கொண்டிருக்கும் உறவு உலக வரலாற்றை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

அது மட்டுமில்லை, மேலே ஏற்கனவே குறிப்பிட்டது போல சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டி போடும் அளவில் ஆகியுள்ளது.

1.    விண்வெளிப் பயணம்

2.    சூரிய மின் தொழில்நுட்பம்

3.    மின் ஊர்திகள்

4.    அதிவேக தொடர்வண்டிகள்

5.    5ஜி தொலைத் தொடர்பு நுட்பம்

6.    அலைபேசிகள்

சீன அரசு கல்வியில் செய்த முதலீடுகள் அந்நாட்டின் அறிவியல் ஆய்வுகளை பன்னாட்டு அளவில் முன்னேற்றியுள்ளன. சீன மாணவர்கள் பன்னாட்டு அளவில் பல அளவீடுகளில் முன்னணி இடம் பிடித்துள்ளனர். முன்னணி சீனப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயர்கல்வி பெற்ற இளைஞர்களை உருவாக்குகின்றன.

மூன்றாவதாக, சீனாவின் சோசலிசக் கட்டமைப்பு. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பும் வேலையில்லா முதலீடுகளும் பல நாடுகளில் வாடிக்கையாகிப் போயுள்ளன. 2024 ஜூலை மாதம் நடந்த அம்பானி குடும்பத் திருமணம் அதனைத் தெளிவாக விளக்கிக் காட்டியது. சீன அரசோ மூலதனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி ஒழுங்குசெய்கிறது. மூலதனம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் உயர் தரத்திலான உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கவும் பணியாற்றி வருகிறது. 2049ஆம் ஆண்டுக்குள் மிதமான செல்வந்த நாடாகவும் சோசலிசத்தைக் கட்டமைக்கத் தொடங்கும் நாடாகவும் மாறும் இலக்கைக் கொண்டுள்ளது.

எனவே, சமூக அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் சீனா இந்திய மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் முதன்மையான ஆதரவு சக்தியாக வளர்ச்சியடைந்துள்ளது.

By 2049, the Chinese government aims to 'build a modern socialist country that is prosperous, strong, democratic, culturally advanced and harmonious'.

ஆனால், சீனா நம்மோடு எல்லையில் சண்டை போடுகிறதே என்ற கேள்வி பலருக்குத் தோன்றும். ஆனால், சீனாவிலும் வெளிநாட்டு பெருநிறுவனங்களும் சீன தனியார் நிறுவனங்களும் சுரண்டலை நடத்தி வருகின்றனவே என்று இன்னும் சிலருக்குக் கேள்வி எழும்.

மூக்கிருந்தால் சளியிருக்கும் என்பது போல பக்கத்து வீட்டுக்காரர் (அல்லது வயல்காரர்) இருந்தால் எல்லைத் தகராறு இருக்கத்தான் செய்யும். அதைத் தூண்டி விடுவதற்கு முதலாளித்துவ சக்திகளும் ஏகாதிபத்திய நலன்களும் இருக்கும்போது அதை அமைதிவழியில் தீர்த்துக் கொள்வதும் எளிதில்லை. ஆனால், எல்லைத் தகராறு ஒருபுறம் இருக்கட்டும், நாம் பிற வழிகளில் இருதரப்பு மக்களுக்கிடையேயான தொடர்புளையும் பொருளாதார உறவுகளையும் வளர்த்துச் செல்வோம். எல்லைச் சிக்கலுக்கு எதிர்காலத்தில் வருங்கால வழித்தோன்றல்கள் தீர்வு காண்பார்கள்; அதற்குத் தேவைப்படும் அறிவிலும் திறனிலும் அவர்கள் நம்மை விட மேம்பட்டிருப்பார்கள் என்கிறது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லறிவு.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்