தனிநபருக்கும் சமூகத்துக்குமான இயங்கியல் என்ன?

 ஒவ்வொருவரும் தன்னை தனிநபராகவே உணர்கிறார், சக மனிதர்களை போட்டியாளர்களாகப் பார்க்கிறார். மற்றவர்களை ஒழித்துக் கட்டினால்தான் தனது வாழ்வை உறுதி செய்து கொள்ள முடியும் என்று உணர்கிறார், அதையே நம்புகிறார்.

பொருளாயத உலகில் உள்ள வரம்புக்குட்பட்ட வளங்களை பகிர்ந்து கொள்வதற்கான நபர்கள் குறைவாக இருந்தால் நமக்குத் தேவையான வளங்கள் கிடைப்பதை உறுதி செய்யலாம். எனவே, இந்தப் போட்டியும் பொறாமையும் இயல்பானவை எதார்த்தத்தில் இருப்பவை. ஏதோ தனிமனித வக்கிரம் இல்லை; மனிதரின் சிந்தனையில் மட்டும் இருப்பது இல்லை.

இன்னொரு பக்கம் ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒரு முழுமையின் பகுதியாகவே உணர்கிறார்; சக மனிதர்களுடனான கூட்டு வாழ்க்கையின் மூலமாகத்தான் தனது வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்பதை உணர்கிறார், அதையே நம்ப முயல்கிறார்.

பொருளாயத உலகில் இயற்கையுடனான (மனிதர்கள் அல்லாத இயற்கையுடனான) பொருள்வகை பரிமாற்றத்தில் மனிதர் தனியாக எதையும் சாதித்து விட முடியாது. அப்படி தனிமனிதனாக எளிய விலங்கு வாழ்க்கையைத் தாண்டி வளர்ந்திருக்க முடியாது. மனிதர்கள் மனிதர்களாக வளர்வது மனிதக் கூட்டம் ஒன்றை அல்லது மந்தையாக வாழ்வதையே சார்ந்திருக்கிறது.

இந்த இரண்டுக்கும் இடையே எப்போதுமே ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. தனிமனிதரின் தன்னலமும் பொறாமை உணர்ச்சியும் கரைந்து போகப் போக மந்தையின் ஒற்றுமை அதிகரிக்கிறது. மந்தையின் ஒற்றுமை தளரத் தளர தனிமனிதரின் தன்னல உணர்வு மேலோங்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மந்தையின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்போது ஒவ்வொருவரும் தனக்குத் தேவையானவற்றை தானே ஒதுக்கிக்கொள்ள போராட வேண்டியதாகிறது. மந்தையின் கூட்டுத்துவ செயல் இல்லாமல் உற்பத்தி சுருங்கிப் போகிறது.

மந்தைகள் இனக்குழுக்களாகவும் இனக்குழுக்கள் குலக்குழுக்களாகவும் மாறும்போதும் அந்தந்த குழுவுக்குள்ளாக நிலவும் தனிமனிதர் - குழு இயங்கியல் தொடர்கிறது. அதே நேரம் இந்தக் குழுவுக்கும் பிற குழுக்களுக்கும் இடையில் இதே போன்ற இயங்கியல் தொடர்கிறது. மற்ற குழுவை ஒழித்துக் கட்டினால்தான் நாம் வாழ்வதை உறுதி செய்து கொள்ள முடியும் என்பது மிகப் புராதன பொருளாயத அடிப்படை. ஆனால், குழுக்களுக்கிடையே உறவாடல் தொடங்கி வளரும்போது பிற குழுக்களின் நலவாழ்வுதான் ஒவ்வொரு குழுவின் நலவாழ்வையும் உறுதி செய்ய முடிவது என்ற எதார்த்தம் மேலோங்குகிறது.

குழுக்களுக்கிடையே ஒற்றுமை தளரும்போது, ஒவ்வொரு குழுவும் தனது நலனைப் பாதுகாத்துக் கொள்ளப் போட்டி போடும் போக்கு தீவிரமாகிறது.

இந்தக் குழுக்கள் இணைந்து பிராட்ரிகளாகவும் குலக்குழுக்களின் கூட்டமைப்பாக மொய்த்திகளாகவும் செயல்படத் தொடங்குகின்றன. இங்கும் ஐக்கியமும் போராட்டமும் தொடர்கிறது.

குழுக்கள் ஒன்றுகலந்து தேசியங்களாக, நாடுகளாக உருவாகும்போதும் இதே இயங்கியல் செயல்படுகிறது. தேசங்கள், மதங்கள், சாதிகள், வணிக நிறுவனங்கள் என்று இதே போன்று பல வகையான குழுக்களாகப் பிரிந்து செல்கின்றன.

ஒருவர் ஏன் தனிநபர்வாதியாக, தன்னலவாதியாக மாறுகிறார்.

இது போலத்தான் ஒவ்வொரு போட்டி பொறாமை உணர்வும். பொறாமை என்பது முழுக்க முழுக்க எதிர்மறையானது. சக மனிதரிடம் கோபம் வரலாம், விமர்சனம் செய்யலாம். ஏன் பொறாமை வர வேண்டும். அது குறுகிய தன்னலத்தின் விளைபொருள்.

குறுகிய தன்னலம், தன்னுடன் இணைந்த சமூக நலன் என்று வரையறுக்க வேண்டும். குறுகிய தன்னலம் என்பதைத்தான் தன்னலம் என்று வழக்கமாகச் சொல்கிறோம். முழுமையான தன்னலம் என்பது சமூக நலனோடு இணைந்ததுதான். தன்னுடன் இணைந்த சமூக நலன் என்பதைத்தான் பொதுவாக சமூக நலன் என்று சொல்ல வேண்டும். ஆனால், சமூக நலன் என்பதை தன்னிலிருந்து பிரிக்கப்பட்ட சமூக நலன் என்றுதான் பொதுவாகப் பார்க்கிறோம்.

தனக்கென வளங்களை ஒதுக்கிக் கொள்வது குறுகிய தன்னலம், பொறாமை என்பது குறுகிய தன்னலம். சமூகப் பணிக்காக தியாகம் செய்கிறேன் என்பது தன்னை மறுதலிப்பது என்ற வகையில் சமூகநலனுக்கு எதிரானது. அதற்கும் ஒரு சரியான பெயர் வேண்டும். அதன்பெயர் வறட்டுவாத சமூகநலன் என்று சொல்லலாம்.

குறுகிய தன்னலம் - பொறாமை, வளங்களை தனக்காக ஒதுக்கிக் கொள்வது, மற்றவர்களை பலியிட்டு தனது தனிப்பட்ட சுகத்தைப் பேணுவது

வறட்டு சமூகநலம் - தருமம், தன்னை பலியிட்டு சமூகத்துக்கு நல்லது செய்வதாகச் செயல்படுவது.

அறிவார்ந்த தன்னலம் - ஒட்டு மொத்த மனித சமூகத்தின் நலனில்தான் தனது நலனும் இருக்கிறது என்று உணர்வது. ஏனென்றால் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பகுதியாகத்தான் நாம் இருக்கிறோம்.

தான் சார்ந்த சமூகநலம் - தன்னைப் பிரித்த சமூகம் என ஒன்று இல்லை. அந்த உணர்வில் ஒட்டுமொத்த சமூகத்தின் நலவாழ்வின் மூலமாக நான் நலமாக வாழ வேண்டும் என்ற உணர்வில் சமூகநலம்.

(அயர் ராண்ட் எழுதிய The Fountainhead நாவலில்) எல்ஸ்வொர்த் டூஹி, கேட்டி வறட்டு சமூகநலனுக்காகப் பாடுபடுகிறார்கள். பீட்டர் கீட்டிங் குறுகிய தன்னலத்துள் மூழ்கிக் கிடக்கிறான். ஹோவார்ட் ரோர்க்தான் அறிவார்ந்த தன்னலத்தைப் பின்பற்றுகிறான். ஆனால் அவனிடம் தான்சார்ந்த சமூகநலனுக்கான சிந்தனையோ அதற்காக வேலை செய்வதோ இல்லை. சமூகம் என்ற ஒரு முழுமை இருப்பதை அந்த முழுமையால்தான் தான் வாழ முடிகிறது என்ற புரிதலும் உணர்வும் அவனுக்கு இல்லை.

மார்க்சும் அண்ணல் அம்பேத்கரும் அறிவார்ந்த சமூகநலனையும் தான்சார்ந்த சமூகநலனையும் பின்பற்றியவர்கள். நாம் போற்றக்கூடிய பெரிய மனிதர்கள் எல்லோரும் அவ்வாறுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.

இது தனிமனிதருக்குப் பொருந்துவது போலவே குழுக்களுக்கும் (சாதி, தேசியம், இனம், மதம், நாடு, வணிக நிறுவனம், குழுக்கள்) பொருந்தும்.

குழுக்களுக்கும் அறிவார்ந்த தன்னலமும் தான்சார்ந்த சமூகநலனும் இருக்க வேண்டும். குறுகிய தன்னலத்தையும் வறட்டு சமூகநலனையும் தவிர்க்க வேண்டும்.

என்.ஜி.ஓக்கள் வறட்டு சமூகநலன் பேசுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களும் அதே இடத்தில்தான் இருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் - பௌத்தம்

வேலைகள் - God Building?

சந்திப்புகளின் ஒரு நாள்