பொறுப்புணர்வு, வாழ்க்கை அனுபவங்கள், மூலதனம், சாதி - சீனா புத்தகம்

 

பொறுப்புணர்வு இல்லையா? 

முதலில் பொறுப்புணர்வை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு நீண்டகால நோக்கைக் கொண்டிருக்க வேண்டும். முதல்கட்ட இலக்கை நிறைவேற்றிய பிறகு ஆர்வம் வடிந்து விடுவதை முறையாகக் கையாண்டு இறுதி இலக்கை நோக்கிப் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது என்னுடைய பண்புப்பிழையாக இருந்து வருகிறது. உற்சாகத்தின் முதல் உந்துதலில் கிடைக்கும் வேகம் வடிந்தவுடன், அந்த வேலையை கைவிட்டு விட்டு வேறொரு வேலைக்குக் கவனத்தைத் திருப்பி விடுவது என்ற போக்கு. உருவாக்கிய ஒன்றை உறுதிப்படுத்தி கட்டமைக்கும் துறையில் பலவீனமாகவே இருந்து வருகிறேன். அதை எல்லா துறைகளுக்கும் சொல்லலாம். நீடிக்கும் காலகட்டம் ஒரு சில மாதங்களில் இருந்து ஒரு சில ஆண்டுகள் வரை இருக்கலாம், ஆனால் வாழ்நாள் பணியாக மாற்றுவது என்பது நடப்பதில்லை.

தோல் துறையில் அவ்வளவு தலைகுப்புற விழுந்தேன். டாடாவில் தோல் துறையை தூக்கி நிமிர்த்தப் போகிறேன் என்று கனவு கண்டிருந்தேன். அது ஏ.சி.டெக்கில் தொடங்கி தேவாசில் தொடர்ந்தது; ஷாங்காயிலும் குவாங்தொங் பயணங்களிலும் கூடவே வந்தது. பி.எல்.சியில் உரம் போட்டு வளர்ந்தது. அதன் பிறகு பி.எஸ்.ஜி லெதர்லிங்க் என்று உச்சகட்டத்தை எட்டியது. 1989இல் தொடங்கியது 2009இல் தோல்விகளின் சுமையால் வடியத் தொடங்கியது. 2013 வாக்கில் கிட்டத்தட்ட இல்லாமல் போய் விட்டது. அது இப்போது அலுமினி சங்கத்தின் மூலமாக புதுப்பிக்கப்படுவதற்குக் காத்திருக்கிறது; ****, **** போன்றவர்கள் மூலமும் அதற்கு புத்துயிர் கொடுக்கலாம். இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகால மயக்கம் – இதை மயக்கம் என்று சொல்ல முடியாது; வாழ்நாள் கடப்பாடாக இருந்தது என்று சொல்ல வேண்டும்.

இரண்டாவதாக கணினித்துறை. 1995இல் டாடா தேவாஸில் பயனராகத் தொடங்கி, 1998இல் ஷாங்காயில் நிரல் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு பி.எஸ்.ஜி லெதர்லிங்கில் உச்சத்தைத் தொட்டது. அதன் ஊடாக, லினக்ஸ் சுதந்திர மென்பொருள் துறைகளிலும் நிறைய வேலை செய்தேன். 2000ம் ஆண்டுகள் அதில் முக்கியமானவை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் அது வடிந்து விட்டது. அதுவரை தீனி போட்டது. அதற்குப் பிறகு அதை விட பரந்துவிரிந்த அரசியல் களத்துக்கு மார்க்சியத்துக்கு வந்து விட்டேன். அது மேலே சொன்ன தோல் துறைக்கும் பொருந்தும்.

மூன்றாவதாக, குடும்பம். 1972இல் தொடங்கி, உணர்வுரீதியாக 1980-களில் இருந்து செயல்படத் தொடங்கியதை 2020 வாக்கில் முழுமையாக அறுத்துக் கொண்டு விட்டேன். அப்பா இறந்த சென்ற ஆண்டு நிகழ்வு மட்டும்தான். அது 40 ஆண்டுகள் ஓடியிருக்கிறது.

திருமண உறவுதான் அதை விட பரிதாபமானது. *****வுடன் 1997இல் பழகத் தொடங்கி 2005இல் முடித்துக் கொண்டு விட்டேன். என்னுடைய அறிவுத்தாகத்துக்கு அங்கு இரை இல்லை என்பதோடு மட்டுமின்றி அந்த நெருப்பை மண்ணள்ளிப் போட்டு அணைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதிலிருந்து திமிறிக் கொண்டு வெளியேறி விட்டேன். அதன் பிறகு தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்று மழைக்குப் பிந்தைய தூறல் போல அவ்வப்போது அவர்களோடு தொட்டுக் கொண்டு வந்தாலும் அது எட்டு ஆண்டு விவகாரமாகவே முடிந்து போனது.

இப்படி மூன்று அல்லது நான்கு பெரிய செயல்பாட்டுக் களங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். அப்படி ஒன்றும் ஓடுகாலியாக இருக்கவில்லை. நிறுவனங்களைக் கடந்து ஓடியிருக்கிறேன். டாடா, பி.எஸ்.ஜி லெதர்லிங்க் இரண்டிலும் நீடித்து நிற்கவில்லை; பி.எல்.சியில் நீடித்து நிற்க முடியவில்லை; திருமணம் என்ற நிறுவனத்தையும் கைகழுவி விட்டேன். அந்தப் பொருளில் நான் ஓர் ஓடுகாலிதான்.

என்னுடைய வாழ்க்கையின் தொடர்ச்சி என்ன? அறவுணர்வு என்று சொல்லலாம், ஆனால் அது போதவில்லை. அது தனிநபர் அறவுணர்வு அல்லது தரும உணர்வாகவே சுருங்கிப் போயிருக்கிறது. எனவே, மனிதர்களுக்கிடையேயான உறவில் தோற்றுப் போய்க் கொண்டிருந்தேன். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அல்லது அனைத்து மக்களுக்கும் இடையே சகோதரத்துவம் என்ற உணர்வும் சிந்தனையும் எனக்கு இருக்கவில்லை. அதை அம்பேத்கர்தான் கொடுத்தார். நான் தனிமனித தன்னல சிந்தனையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன். அந்த வாழ்க்கையில் ஒன்று மற்றவர்களை ஏய்த்து தன்னை வளமாக்கிக் கொள்ளும் கயமையில் விழலாம்; அல்லது மற்றவர்களுக்காக நான் தியாகம் செய்கிறேன் என்ற மோசடியில் விழலாம். நான் இரண்டாவது வகையில் வருகிறேன். தன்னலம் என்பது தவறு என்று உணர்த்தப்பட்டு விட்ட பிறகு வேறொரு பொருளில் முழுக்க முழுக்க தன்னலவாதியாக வாழ்ந்திருக்கிறேன்.

நான் படிக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்தபிறகு, Howard Roarkஐ அறிமுகப்படுத்தினாள், ****. அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அமெரிக்க தூதரக நூலகத்தில் படித்த நூல்களின் எண்ணிக்கை ஏராளம். அது போன்ற தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் நூலகத்திலும் அமெரிக்க நூலகத்திலும் தொடர்பு கொள்ள வேண்டும். ரசிய பண்பாட்டு மையம், பிரெஞ்சு பண்பாட்டு மையம் இவற்றையும் தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக வருவது,

  1. சாதிய கூருணர்வு – குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, உறவினர்கள்

  2. தோல் துறை அனுபவங்கள் – கல்லூரி நட்புகள், தேவாஸ், பி.எல்.சி லெதர் டெக்னாலஜி, சீனா, பி.எஸ்.ஜி லெதர்லிங்க், ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, டாடா

  3. சீன வாழ்க்கை அனுபவங்கள் – மொழி, இலக்கியம், அரசியல், நிருவாகம், புவியியல், பண்பாடு

  4. மார்க்சிய லெனினிய அரசியல் – மா.., மாவோ, லெனின் – ஏகாதிபத்தியம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின் தேர்வுநூல்கள் மொழிபெயர்ப்பு

  5. மார்க்சிய தத்துவம் – மார்க்ஸ், திறந்தநிலை மார்க்சியம், முத்துமோகன், முதல் மூன்று நிமிடங்கள் மொழிபெயர்ப்பு

  6. மூலதனம் நூல் – வாசிப்புக் குழுக்கள், ஜான் ஸ்மித் நூல் மொழிபெயர்ப்பு

இவ்வளவுக்கும் பிறகு

  1. அம்பேத்கர் – இளம் கம்யூனிஸ்ட் கழகம், தோழர் பாலன், மருத்துவர் வாலறிவன், தம்மவேல், வீ அரசு, அம்பேத்கர் மக்கள் பதிப்புக் குழு வேலைகள்

2,3,4,5,6 ஆகியவற்றுக்கு இடையே ஓர் ஒருமை உள்ளது. அவை அனைத்தையும் பிணைக்கும் தொகுப்பாக மூலதனம் நூலும் மார்க்சிய தத்துவமும் உள்ளன. மார்க்சிய லெனினிய அரசியலும் அந்தத் தளத்தில் உள்ளன. இவை அனைத்தும் புறநிலை சார்ந்தவை.

முதல் அம்சம் அகநிலை சார்ந்தது. அதனை விளக்குவதும் உணர்த்துவதும் ஏழாவதாகக் குறிப்பிட்ட அம்பேத்கரின் ஆய்வும் அரசியலும்தான்.

50 வயதுக்குப் பிறகு இந்த இடத்தை வந்தடைந்திருப்பது ஒருவகையில் நல்வாய்ப்புதான். இவ்வளவு தாமதமானாலும் வந்து சேர்ந்தோம் என்பதே முதன்மை திருப்பம்தான். அறியாமையிலேயே சமூக மனிதனாக நம்முடைய இடத்தைப் புரிந்து கொள்ளாமலேயே செத்துப் போயிருந்தால் அது பெரும் துயரமாகப் போயிருக்கும்.

சீனா புத்தகம்

நூல் பட்டியல்

  1. நவீனம்

    1. Rush Doshi – The Long Game

    2. When China Rules the World – Martin Jacques

    3. Governance of China – Xi Jinping

    4. Is China an Imperialist power – N B Turner

    5. China – a social imperialist power – Maoist party

  2. அரசியல் கோட்பாடு

    1. புதிய ஜனநாயகம் பற்றி- மாவோ

    2. கட்சி பற்றி – லியோ ஷாவ்சி

    3. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனப் புரட்சியும் – மாவோ

    4. முரண்பாடுகள் பற்றி – மாவோ

    5. கட்டுரைகள் – மாவோ

  3. வரலாறு, பண்பாடு

    1. From Opium War to May 19 movement

    2. History of Modern China

    3. The Dram of Red Mansion

    4. Journey to the West

    5. Lu Xun

    6. Liu zhenyun

    7. My Long March

    8. Chinese Anecdotes

இப்போது செய்ய வேண்டியது என்ன? சீனா பற்றிய புத்தகத்தை எழுதியே தீர வேண்டும். அது தோல் துறை, மென்பொருள் துறை, சுதந்திர மென்பொருள், மார்க்சிய லெனினியம், மூலதனம் நூல், அனைத்தையும் இணைக்கிறது. இவை அனைத்தையும் இணைத்த ஒரு வேலையாக அதை மட்டுமே எழுத வேண்டும்.

இரண்டாவது பெரிய பணி. அம்பேத்கரைப் பற்றி எழுதுவது. அதை அகநிலையாக எழுதலாம். அல்லது மேலே சொன்னதை அகநிலையாகவும் இதை புறநிலையாகவும் எழுத வேண்டுமா. அம்பேத்கரைப் பற்றி எழுதும் அளவுக்கு இன்னும் முழுமையான புரிதல் ஏற்படவில்லை என்பது முக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் - பௌத்தம்

வேலைகள் - God Building?

சந்திப்புகளின் ஒரு நாள்