அண்ணல் அம்பேத்கரின் பார்வையில் இந்திய வரலாற்றியல்
அண்ணல் அம்பேத்கரின் பார்வையில் இந்திய வரலாற்றியல்
அல்லது
இன்றைய இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான இந்திய வரலாறு
1. பழங்குடி சமூகம் பற்றிய பொதுவான கருத்துக்கள்
-
புராதன (ancient) சமூகங்களில் மதத்தின் பாத்திரம் முதன்மையாக இருந்தது. மதம் என்பது சமூக வாழ்வை பராமரித்து வாழச் செய்வதற்கான அடிப்படையான நெறிகளின் தொகுப்பாகக் கருதப்பட்டது. அது பிறப்பு, கருத்தரித்தல், குழந்தை பிறப்பு, ஆண்/பெண் பருவமடைதல், திருமணம், இறப்பு போன்ற மனித வாழ்வின் நெருக்கடியான கட்டங்களுடன் தொடர்புடையது; மேலும் பொருளுற்பத்தியின் முக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்புடையது. இந்த வாழ்க்கை நிகழ்வுகளுடன் புனிதம் (வாழ்வை நீட்டிக்க செழிக்கச் செய்வது) தீட்டு (வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பது) போன்ற கருத்துக்களும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. [இந்து மதத்தின் தத்துவம்]
இந்த சமூகங்களில் கடவுள் என்பவர் சமூகத்தின் ஒரு அங்கத்தினராகக் கருதப்பட்டார். ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காகவே கடவுளிடம் வேண்டுதல்கள் வைக்கப்பட்டன.
-
புராதன சமூகங்கள் இனக்குழுக்கள் (tribe), குலக்குழுக்கள் (gens) அடிப்படையில் அமைந்திருந்தன. இவற்றில் வேறுபடுத்தல்களாக ஃபிராட்ரிக்களும் மொய்த்திக்களும் சில மக்கள் மத்தியில் காணப்பட்டன. [இந்து மதத்தின் தத்துவம்]
இந்த குலக்குழுக்கள் தமக்கே உரிய குலமரபுச் சின்னங்களைக் கொண்டிருந்தனர். அவை முன்னோர், விலங்கு, மரம் போன்ற அடிப்படையில் உருவானவை. [தீண்டப்படாதவர் யார்?]
இந்த இனக்குழுக்களுக்கும் குலக்குழுக்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இந்தப் போரிடும் நடவடிக்கைகளும் மதச் சடங்குகளுடன் தொடர்பு கொண்டிருந்தன..
-
இனக்குழுக்களும் குலக்குழுக்களும் கால்நடை மேய்க்கும் அலைந்து திரியும் குழுக்களாக இருந்தன. சில குழுக்கள் ஓரிடத்தில் குடியேறி வேளாண்மை செய்பவையாக மாறின.. குழுக்களுக்குடியையான மோதலில் சில குழுக்கள் சிதறுண்டன. அந்தச் சிதறுண்ட மனிதர்கள் குடியமர்ந்த குழுக்களின் இருப்பிடங்களுக்கு வெளியில் வாழத் தொடங்கினர். குடியமர்ந்த குழுக்களுடன் பணி/ஊதிய ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டனர். [தீண்டப்படாதவர் யார்?]
-
இந்தப் புராதன சமூகங்கள் காட்டுமிராண்டி நிலை (கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம்), அநாகரிக நிலை (கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம்) ஆகியவற்றைக் கடந்து நாகரிக நிலையை அடைந்துள்ளன. [இந்து மதத்தின் தத்துவம்]
-
புராதன சமூகங்களில் மதத்தின் முதன்மையைத் தொடர்ந்து மதகுருக்கள் (புரோகிதர்கள்) சமூக சட்டதிட்டங்களின் மீதும் செயல்பாடுகள் மீதும் சமூக தகுதிநிலையை அங்கீகரிப்பதிலும் அரசு பதவிகளை உறுதி செய்வதிலும் எதிர்க்க முடியாத முற்றதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.. [இந்து மதத்தின் தத்துவம்]
2. தொல்ழங்கால இந்தியாவில் பழங்குடிகள்
-
இந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. அவை ஆரிய இனம், திராவிட அல்லது நாகர் அல்லது தஸ்யூக்களின் இனம். இந்தியாவின் ஒரு பகுதியில் வாழும் அனைத்து சாதியினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். வெவ்வேறு பகுதிகளில் இந்த இனம் மாறுபடலாம். [தீண்டப்படாதவர் யார்?]
-
ஆரிய இனமும் திராவிடர் இனமும் என்பது மொழி, மதம் இவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறது. Race என்ற அடிப்படையில் இல்லை. இவை ஒவ்வொன்றிலும் பல இனக்குழுக்களும் அவற்றினுள் பல குலக்குழுக்களும் இருந்தன.. [தீண்டப்படாதவர் யார்?]
-
ஆரியர்களின் தொடக்க கால வாழ்வில் (அநாகரிக நிலை மக்கள்) ரிக் வேதம் இயற்றப்பட்டது. ரிக் வேதம் யஜுர், சாம வேதங்களில் மீண்டும் எழுதப்பட்டது. நான்காவதாக வந்த அதர்வண வேதம் தனித்தது. எனவே, ஆரியர்களிடையே ரிக் வேத ஆரியர்கள் யஜுர் வேத ஆரியர்கள் என்று இரண்டு குழுக்கள் இருந்தன. [சூத்திரர்கள் யார்?]
-
ரிக் வேத காலத்தில் ஆரிய சமூகம் புரோகிதர் வேலைகளைச் செய்த பார்ப்பன வருணமாகவும் போர்த்தொழிலையும் நிர்வாகத்தையும் கவனித்த சத்திரிய வருணமாகவும் வேளாண்மை கைவினைத் தொழில்கள் போன்ற (உற்பத்தி) செயல்களில் ஈடுபட்ட வைசிய வருணமாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. வேதங்களே உச்சநிலை அறிவாகக் கருதப்பட்டன. [சூத்திரர்கள் யார்?]
-
அனைத்து வருணத்தினருக்கும் வேதங்களைக் கற்பதற்கு உரிமை இருந்தது. ஆனால், வேதங்களை கற்பிப்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகும். சமூக வாழ்வில் தீர்மானகர பங்கு வகித்த மதச் சடங்குகளை நடத்தி வைப்பதும் பார்ப்பனர்களிம் முற்றுரிமையாக இருந்தது. [சூத்திரர்கள் யார்?]
-
இந்த வருண முறை பிறப்பின் அடிப்படையிலானதாக இருக்கவில்லை. பல்வேறு இனக்குழுக்களையும் குலக்குழுக்களையும் சேர்ந்தவர்கள் தமக்குள் கலப்பு மணம் செய்து கொள்வதும் கலந்துண்ணுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் இனக்குழு குலக்குழு அடையாளங்கள் தொடர்ந்து நீடித்தன. [சூத்திரர்கள் யார்?]
3. (வட) இந்தியாவில் அரசுகள் உருவானதும் வகுப்பு மோதல்களும்
-
கி.மு 500 வாக்கில், சிசுநாகர் என்ற நாகர் இனத்தவர் மகதப் பேரரசை நிறுவினார். மகதப் பேரரசின் கடைசி மன்னன் நந்தனை வீழ்த்தி மௌரியப் பேரரசை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார். மகதப் பேரரசின் காலத்தில் ஆரிய மதத்தின் வேள்விகளும் உருவாகி வந்து கொண்டிருந்த வருண ஏற்றத்தாழ்வுகளும் பார்ப்பனர்கள் பெற்றிருந்த தனியுரிமைகளும் அவர்கள் வாழ்ந்த ஆடம்பர வாழ்வும் சமூக முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன. மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தன. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
பார்ப்பன புரோகிதர்களால் வழிநடத்தப்பட்ட ஆரிய மதத்துக்கு எதிராக பௌத்தமும் சமண மதமும் உருவாக்கப்பட்டன. பௌத்தம் தேவையற்ற உயிர்ப்பலிகளையும் வேள்விகளையும் கண்டித்தது. பார்ப்பனர்களின் தனியுரிமைகளை மறுத்தது. அனைத்து ஆரிய குழுக்களும் ஆரியர் அல்லாத குழுக்களும் சம வாய்ப்புகளைப் பெறலாம் என்பதை முன்வைத்தது. மேலும், புத்தரின் துறவு வாழ்க்கையும் பரப்புரைகளும் பௌத்தத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கத் துணையாக இருந்தன.. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
மௌரியப் பேரரசின் காலத்தில் பௌத்தம் அரச மதமாயிற்று. ஆரிய பார்ப்பன புரோகிதர்களின் தனியுரிமைகள் இல்லாமல் போயின. மௌரியப் பேரரசர் அசோகரின் ஆட்சி இந்தியா முழுவதிலும் பரவியது. இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மக்களினங்கள் (இனக்குழுக்களும் குலக்குழுக்களும்) பௌத்த நெறிகளின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டனர். ஆரியரும் ஆரியல்லாதவரும் பெண்களும் கல்வி, மதகுரு நிலை (புத்த பிக்குகள்), அரசு பதவிகள் பெற்று முன்னேறினர்.. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
பார்ப்பன புரோகிதர்களாக இருந்த குலக்குழுவினருக்கு இது மிகுந்த ஆத்திரத்தை உருவாக்கியது. அவர்கள் நீண்ட சதித்திட்டங்களின் மூலம் கடைசி மௌரிய மன்னனை படுகொலை செய்தனர். அதைச் செய்த புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பனன் சுங்க வம்ச அரசாட்சியை நிறுவினான். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
பார்ப்பனர்களின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள், சூத்திரர் என்ற குலத்தினர். பார்ப்பனர்களுக்கும் இந்த மன்னர்களுக்கும் இடையேயான போர்கள் (வர்க்க அல்லது வகுப்புப் போர்கள்) பற்றி பார்ப்பனிய இலக்கியங்கள் விரிவாக பதிவு செய்கின்றன. விசுவாமித்திரர் - வசிட்டர், நகுஷன் - பார்ப்பன முனிவர்கள், கார்த்தவீரிய அருச்சுனன் - பார்ப்பன முனிவர்கள், பரசுராமர் - சத்திரிய மன்னர்கள் என்ற இந்த மோதல்கள் பார்ப்பனர்கள் தம்மை எதிர்த்த மன்னர்கள் மீது கொண்டிருந்த ஆத்திரத்தைக் காட்டுகின்றன. இந்த மன்னர்கள் பார்ப்பனருக்கு இணையாக கல்வி அறிவு பெற்றிருந்தனர். பார்ப்பனரின் மேல்நிலை உரிமைகோரல்களை ஏற்க மறுத்தனர். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத் தத்துவம், சூத்திரர்கள் யார்?]
-
இறுதியில் இந்த மன்னர்களுக்கு பூணூல் சடங்கு செய்விக்க மறுத்ததன் மூலம் அவர்களை சூத்திரர்கள் என்ற கீழ்நிலைக்குத் தள்ளினர், பார்ப்பனர்கள். புராதன சமூகத்தில் மதச் சட்டங்களுக்கும் புரோகிதர்களுக்கும் இருந்த இறுதிநிலை அதிகார உரிமை இந்த மன்னர்களின் தோல்விக்கு காரணமாயிற்று. [சூத்திரர்கள் யார்?]
4. பௌத்த இந்தியாவின் மீது இந்து மன்னர்களின் படையெடுப்பும் அழிவுச் செயல்களும்
-
அதன்பிறகு பௌத்தத்தின் மீது பார்ப்பன குல மன்னர்களின் படையெடுத்து நடத்தப்பட்டது. பௌத்த விகாரங்கள் இடிக்கப்பட்ட. புத்த பிக்குகள் கொல்லப்பட்டனர். பிற்காலத்தில் முஸ்லிம் மன்னர்கள் இந்து இந்தியாவின் மீது படையெடுத்து நடத்திய அழிவுச் செயல்களை விட பல மடங்கு அதிகமான பண்புவழியில் வேறுபட்ட அழிவுச் செயல்களை பௌத்த இந்தியா மீது படையெடுத்த இந்து மன்னர்கள் (சுங்க குலம், ஆந்திர குலம் போன்ற குலத்தினர்) நிகழ்த்தினர். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
பௌத்தம் மக்கள் மத்தியில் (ஆரியர் மத்தியிலும் ஆரியரல்லாதவர் மத்தியிலும்) பெற்றிருந்த செல்வாக்கை அழிக்கும் வகையில் புதிய அரச மதம் உருவாக்கப்பட்டது. அதற்கு தத்துவ அடித்தளத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக எழுதப்பட்டவை பகவத் கீதையும் மனு ஸ்மிருதியும். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
பார்ப்பன மதம் பௌத்தத்தின் கொல்லாமை என்ற கொள்கையை தமதாக்கிக் கொண்டனர்.. வேள்விகளில் அனைத்து வகையான விலங்குகளையும் பலி கொடுத்து உண்டு வந்திருந்த அவர்கள் இப்போது மரக்கறி உணவு உண்பவர்களாக மாறினர். அதற்கு மேலாக, வெகுமக்களின் ஆதரவைப் பெறும் வகையில் பசு இறைச்சியை உண்பதை அனைவருக்கும் தடை செய்தனர். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
பகவத் கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் அது மகாபாரதத்தின் மையக் கதையான குருட்சேத்திர போருக்குப் பின்னர் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரே அதில் சேர்க்கப்பட்டது. அது போலவே மனு ஸ்மிருதியும் பிறப்பின் அடிப்படையிலான நால்வருண முறையை சட்டமாக்கி, அதில் பார்ப்பனர்களின் மேன்மையையும் சூத்திரர்களின் சேவக நிலையையும் உறுதிப்படுத்தியது. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
மனு ஸ்மிருதியை எழுதியவர் சுமதி பார்கவா என்பவர். அவர் பண்டைய இந்தியாவில் மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றிருந்த மனு என்பவரின் பெயரை தான் எழுதிய சட்டத் தொகுப்புகளின் நூலுக்கு வைத்தார். மனு என்பது ஆயிரம் ஆண்டுகளாக கற்றறிந்த மதத் தலைவரைக் குறிக்கப் பயன்பட்டு வந்த பெயர். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
5. பிறப்பின் அடிப்படையிலான வருண முறையின் உருவாக்கம்
-
மனு ஸ்மிருதி வருண முறையை பிறப்பின் அடிப்படையிலான சாதி முறையாக மாற்றியது. வருண முறை முதல் கட்டத்தில் மனு எனப்பட்டவரின் தலைமையில் ஏழு முனிவர்களைக் கொண்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது. யார் யார் எந்த வருணத்தில் இருக்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவு செய்யப்பட்டது. இதில் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான் குறிப்பிட்ட வருணத்தில் சேர வேண்டும் என்ற விதி இல்லை. இரண்டாவது கட்டத்தில், பயிற்சியின் அடிப்படையில் வருணம் ஒதுக்கப்பட்டது. சிறுவர்கள் குருகுலத்தில் கல்வியை முடித்த பிறகு குரு மாணவர்களுக்கு தகுந்த வருணத்தை ஒதுக்கினார். இது வாழ்நாள் முழுவதற்குமாக நீடித்தது. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
இப்போது பார்ப்பனிய அரசாட்சியின்போது வருண முறை பிறப்பின் அடிப்படையில் மாற்றப்பட்டது. பார்ப்பன குழுக்கள் தமது குழந்தைகள் வேறு வருணத்துக்கு ஒதுக்கி விடப்படுவதைத் தடுக்க முயன்றனர். எனவே வருணத்தையும் அதை வழங்கும் பூணூல் சடங்கையும் வீட்டில் நடப்பதாக மாற்றினர். எனவே, தந்தையின் வருணம் மகனுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர்தான் கல்வி கற்க குருகுலம் சென்றனர். [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
இந்தப் பிறப்பின் அடிப்படையிலான வருண பிரிப்பை உறுதி செய்யும் வகையில் அகமண முறையை பார்ப்பனர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். வருணக் கலப்பைத் தடை செய்தனர். கீழ்நிலை வருண ஆணுக்கும் மேல்நிலை வருண பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தைத் தடை செய்தனர். அதுவரை அத்தகைய ஒரு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள் கீழ்நிலை வருணத்தைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள். மேல்நிலை வருண ஆணுக்கும் கீழ்நிலை வருண பெண்ணுக்கும் இடையிலான அனுலோம திருமணத்தை மனு அனுமதித்தார். ஆனால், அதில் பிறக்கும் குழந்தைகளின் வருணம் தந்தை வழியில் அல்லாமல் தாயின் வழியில் வழங்கப்பட்டது. அதாவது அந்தக் குழந்தை கீழ்நிலை வருணத் தகுதியையே பெற்றது. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
சாதி சட்டவிதிகளை மீறுபவர்களை சாதியை விட்டு விலக்கி வைத்தல் என்ற தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு சாதியும் தான் ஒடுக்கப்படுவதாக இருந்தாலும், தனக்குக் கீழே தான் ஒடுக்கும் சாதிகள் உள்ளன என்று மனநிறைவு கொள்கிறது. இதனால், படிநிலை ஏற்றத்தாழ்வு என்ற முறையில் சமூகப் புரட்சிக்கான அகநிலை உந்துதல் இல்லாமல் செய்யப்பட்டது. இவ்வாறு சாதியம் என்ற கொடுமையான சமூக அமைப்பு நீடித்து நிலைப்பதற்கான கூறுகள் அதில் உள்ளார்ந்துள்ளன.. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்]
-
நால்வருண முறைக்கான தத்துவ அடிப்படைகளை பார்ப்பனர்கள் பழங்கால வேதங்களிலும் பிரமாணங்களிலும் புராணங்களிலும் புகுத்தினர். அதன்மூலம் மத நூல்கள் செல்வாக்கு செலுத்தி வந்த மக்கள் மத்தியில் அதற்கு அங்கீகாரத்தை வென்றனர். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ள புருச சூக்தம் இதற்குத் துலக்கமான எடுத்துக்காட்டு. அது பிற்கால இடைச்செருகல் என்பதை வேதங்களை ஆய்வு செய்த ஆய்வாளர்களின் ஒருமித்த முடிபு.. [இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், சூத்திரர்கள் யார்?]
6. நால்வருணம் என்ற சுரண்டல் கட்டமைப்பு - சாதிகள்
-
பார்ப்பன வகுப்பினர் தமது குழுவின் கதவடைத்துக் கொண்டதால் மற்ற குழுவினர் பார்ப்பன இனக்குழுவுடன் அல்லது குலக்குழுவுடன் திருமண உறவையும் கலந்துண்ணும் உறவையும் ஏற்படுத்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. கூடுதலாக, பிற குழுக்கள் (வருணங்கள்) மதப் புரோகிதர்களாக இருந்த பார்ப்பனர்களைப் போலச் செய்யத் தொடங்கினர். மதத்தின் மேல்நிலை காரணமாக புரோகிதர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டதால் அவர்களைப் பின்பற்றி தாமும் அகமணமுறையைப் பின்பற்றத் தொடங்கினர். இவ்வாறு இனக்குழுக்கள், குலக்குழுக்களுக்கிடையே கலப்பு நின்று போனது. சாதிகளும் கிளைச் சாதிகளும் உருவாகி பல்கிப் பெருகத் தொடங்கின. [இந்தியாவில் சாதிகள்]
-
மனு ஸ்மிருதி பார்ப்பனர்கள் என்ற மீமனித வகுப்பின் அனைத்து நலன்களையும் உறுதி செய்தது. அவர்களது செல்வச் செழிப்பையும் அதிகாரத்தையும் குற்றங்களில் இருந்து எளிதாகத் தப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியது. இப்போது பெரும்பான்மையாக ஆகி விட்டிருந்த சூத்திரர்களின் (ஆதி சூத்திரர்கள், ஆரியர் அல்லாத இனக் குழுக்களும் குலக்குழுக்களும்) சமூகத் தகுதிநிலையைத் தாழ்த்தியது. அவர்களுக்கு கல்வி உரிமையையும் (வேதக் கல்வி) சொத்து சேர்க்கும் உரிமையையும் ஆயுதம் ஏந்து உரிமையையும் மறுத்தது. பொருளாதாரத்துக்கு அவர்கள் எப்போதுமே முதல் மூன்று வருணத்தினரை சார்ந்திருக்கும்படி சட்டம் இயற்றியது.. [இந்து மதத்தின் தத்துவம்]
7. சிதறுண்ட மனிதர்களும் தீண்டப்படாதவர்களும்
-
கிராமங்களுக்கு (குடியேற்றங்களுக்கு) வெளியே வாழ்ந்து கொண்டிருந்த சிதறுண்ட குலங்களின் மனிதர்கள் பொருளாதார காரணங்களால் செத்த மாட்டின் இறைச்சியை உண்பதைத் தொடர்ந்தனர். பார்ப்பனிய மனு தருமத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பார்ப்பனர்களின் மேல்நிலையை அங்கீகரிக்கவில்லை. [தீண்டப்படாதார் யார்?]
-
பசு இறைச்சி உண்பதும் பார்ப்பனர்களால் சடங்குகள் செய்விக்கப்படாததும் இந்தக் குழுக்களை சமூகப் படிநிலையில் ஆகக் கீழ்நிலைக்குத் தள்ளியது. அவர்கள் நால்வருண முறைக்கு வெளியே தீண்டப்படாத வகுப்பினராக ஒதுக்கப்பட்டனர். [தீண்டப்படாதார் யார்?]
-
அவர்களுக்கு மனித உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு என்ற பல வகைகளில் பல்வேறு குழுக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. கிராம சமூகங்களைச் சார்ந்திருந்த அவர்களது கடமைகள் கட்டாயமாக்கப்பட்டன, உரிமைகள் நால்வருணத்தினரின் விருப்பத்தைச் சார்ந்தவையாக ஆக்கப்பட்டன. [தீண்டப்படாதார் யார்?]
-
பிற்காலத்தில் சீர் மரபினர், பழங்குடிகள் ஆகியோரும் நால்வருண முறைக்கு வெளியில் வைக்கப்பட்டாலும் தீண்டப்படாதவர்கள் போன்ற சமூக இயலாமைகள் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. [இந்து மதத்தின் தத்துவம்]
8. இந்திய சாதிய சமூகக் கட்டமைப்பின் தீங்குகள்
-
ஆயுதம் ஏந்தும் உரிமை சத்திரியர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டது. எனவே பெரும்பான்மை இந்து சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வீரியத்தை இழந்தது. அயல்நாட்டு படையெடுப்பாளர்கள் தாக்கும் போது சத்திரிய வகுப்பினர் தோற்றதும் ஒட்டு மொத்த நாடும் அடிபணிந்து புதிய ஆட்சியாளரை ஏற்றுக் கொண்டது. பார்ப்பனர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சடங்குகள் செய்து பொருளீட்டவும் தமது சமூகத் தகுதிநிலையை தக்க வைத்துக் கொள்ளவும் செய்தனர். [இந்து மதத்தின் தத்துவம்]
-
சாதியமுறை உழைப்புப் பிரிவினையாக மட்டுமின்றி உழைப்பாளர்களின் பிரிவினையாக உள்ளது. படிநிலை ஏற்றத்தாழ்வு என்ற முறையில் சமத்துவமின்மையை சட்டமாக்கி வைக்கிறது. அது மக்களை சிறு குழுக்களாக பிளவுபடுத்தி சமூக உணர்வை பலவீனப்படுத்துகிறது. சுதந்திரமாக தொழில்களை தேர்ந்தெடுப்பதைத் தடை செய்கிறது. அதன்மூலம் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்கிறது. தடையற்ற சமூக உறவாடலை தடை செய்கிறது. எனவே, இந்துக்களிடையே சகோதரத்துவத்தை ஒழித்துக் கட்டியுள்ளது. [இந்து மதத்தின் தத்துவம், சாதியை அழித்தொழித்தல்]
-
சமூகத்தின் ஐந்தில் ஒரு பகுதியினராக உள்ள மக்களை தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து சுரண்டவும் இழிவுகளை சுமத்தவும் செய்கிறது சாதியக் கட்டமைப்பு.. சீர் மரபினரும் பழங்குடியினரும் அவரவர் வாழ்க்கை முறையிலிருந்து மேம்பட்டு நாகரிக வாழ்க்கைக்கு வருவதற்கு இந்துக்களின் கற்றறிந்தவர்கள் எந்த முயற்சியையும்எடுக்கவில்லை. அதற்குக் காரணம் சாதிய முறையே. [இந்து மதத்தின் தத்துவம், சாதியை அழித்தொழித்தல்]
9. சாதியை அழித்தொழித்தல்
-
சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாஸ்திரங்களின் (பார்ப்பனிய இலக்கியங்களின்) செல்வாக்கை ஒழிக்க வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்தும் பகுத்தறிவுக்குப் பொருத்தமான மத நூலை சட்டமாக்க வேண்டும். அத்தகைய நூல் பௌத்த நெறிகளை தனது அடித்தளமாக எடுத்துக் கொள்ள வேண்டும். (அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் என்ற நூல் அதற்கான உருவரை) [சாதியை அழித்தொழித்தல்]
-
தீண்டப்படாத மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்கும் மதங்களில் ஒன்றைத் தழுவ வேண்டும். அவற்றில் அம்பேத்கர் உருவாக்கிய நவயான பௌத்தம் நவீனகால அறிவியல் சமூகத்துக்கு பொருத்தமானதாகும். [தீண்டப்படாதவர்களும் தீண்டாமையும் - மதம்]
கருத்துகள்
கருத்துரையிடுக