அம்பேத்கரை அறியாமலேயே வளர்ந்து விட்ட தற்குறித்தனம்
வளரும் பருவத்தில் அம்பேத்கர் என்ற பெயரைக் கூடக் கேள்விப்பட்டதில்லை. பள்ளிப் பாடங்களில் அம்பேத்கரைப் பற்றி சொல்லித்தரவில்லை. காந்தியின் என் வாழ்க்கைக் கதை துணைப்பாட நூலாக எட்டாம் வகுப்பில் இருந்தது. மறைமலை அடிகள், ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் (இந்தியாவின் இரும்பு மனிதர்), லோகமான்ய திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, வ.உ.சிதம்பரனார் வரை பாடங்கள் இருந்தன.
வீட்டிலும் படிக்கக் கிடைத்த புத்தகங்களில் அம்பேத்கர் இடம்பெறவில்லை. விஜயபாரதம் என்ற பத்திரிகையிலும் அம்பேத்கரைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இது எல்லாம் 1980-களில். தமிழ்நாட்டு அரசியலில் அம்பேத்கர் முன்னிலை பெறுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் இருந்தன.
அதன் பிறகு கல்லூரியிலும் அம்பேத்கரின் அரசியலோ அவரது எழுத்துக்களோ கவனத்தைக் கவரவில்லை. பின்னர் மத்திய பிரதேசம் தேவாசிற்குப் போய் வேலை செய்த நான்கு ஆண்டுகளும் அதற்குப் பின் சென்னையில் இருந்து வேலை செய்த எட்டு மாதங்களும் கூட அம்பேத்கரை கண்முன் கொண்டுவரவில்லை. அதைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ஷாங்காயிலும் சென்னையிலும் துஷாரிகாவுடன் இழுபறியோடு தொழில் சுணக்கங்களும். அப்போதும் அம்பேத்கர் கவனத்துக்கு வரவில்லை. ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ் தேசிய அரசியல், தமிழ் கணினி திட்டம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோமே தவிர அம்பேத்கர் கவனத்துக்கு வரவில்லை.
டோண்டு ராகவனுக்கு எதிராக போலி டோண்டு (மூர்த்தி) என்பவர் களமிறங்கிய செய்திகள் தெரிய வந்தன. ஆனால், அப்போதும் அம்பேத்கர் அரசியல் தெரிய வரவில்லை. முதன்முதலில் தலித் அரசியல் என்று தெரிய வந்தது.
2008ஆம் ஆண்டில் சென்னையில் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான மோதல் சாதி அடிப்படையில் நடந்தது என்று செய்திகளில் படித்தேன். வன்முறை மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் (அதாவது தலித் மாணவர்களின்) நியாயத்தை சிலர் முன்வைத்திருந்தார்கள். அதில் அம்பேத்கரின் பெயரை சுவரொட்டியில் சேர்க்காததை ஒட்டி மோதல் வெடித்திருக்கிறது, குறைந்தபட்சம் அதுதான் உடனடி காரணமாக இருந்திருக்கிறது. அதற்கு முன்னதாக கர்னல் கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தனி அமைப்பு உருவாக்கியதில் சாதிய அரசியல் இருப்பதாகப் படித்திருக்கிறேன்.
அம்பேத்கரைத் தெரியவில்லை. ஆனால், சாதியும் இட ஒதுக்கீடும் குறிப்பாக பட்டியல்சாதியினருக்கான இட ஒதுக்கீடும் கல்வி உரிமைகளும் மிகத் தொடக்கத்திலிருந்தே தெரிய வந்திருந்தன. பள்ளியில் தங்கமிராசு என்ற மாணவனுக்கு அரசு உதவித் தொகை, ஆண்டு தோறும் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் கொடுக்கப்படும். அவன் அதிகம் பேசாத பையன். அவனது அம்மா நகராட்சியில் துப்புரவுப் பணி செய்வதாக யாரோ சொன்னதைக் கேட்டிருக்கிறேன். நல்ல வெள்ளை நிறத் தோல் அவனுக்கு, உப்பிய கன்னங்கள். நிறைய பவுடர் போட்டுக் கொண்டு அழகாக வருவான்.
அவனுக்குக் கிடைக்கும் புது புத்தகங்களைப் பார்த்து மனதுக்குள் பொறாமைப்பட்டிருக்கிறேன். அதன் அரசியல் அறிந்ததில்லை.
அதன்பிறகு கல்லூரி சேர்க்கையின்போது இட ஒதுக்கீடு என்பது பற்றித் தெரிய வந்தது. பட்டியல் சாதி மாணவர்கள் குறைந்த அளவு மதிப்பெண்கள் பெற்றே வந்து விடுவார்கள் (எனவே, அவர்களுக்கு திறமையும் குறைவு) என்ற எண்ணம் பதிந்திருந்தது. தோல் வகுப்பிலேயே ****, ****,, ****,, ****,, ****, ஆகியோர் இருந்தனர். அவர்கள் பட்டியல் சாதி ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மற்ற துறைகளில் யார் யார் எந்த பிரிவு என்பது தெளிவில்லை. ****, பட்டியல் சாதி ஒதுக்கீட்டில் வந்தான், ****, பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் என்று தெரியும். **** பட்டியல் சாதியைச் சேர்ந்தவன் என்று தெரியும்.
கல்லூரியிலும் இந்த அரசியலுக்குள் காலெடுத்து வைத்து விடவில்லை. சர்வதேச அரசியல் அமெரிக்க தூதரக நூலகம், கன்னிமரா நூலகம் என்று ஓடிக் கொண்டிருந்தேன். தாம்பரத்தில் வசிக்கத் தொடங்கி தாம்பரம் காமராசர் நூலகத்தில் படிக்கும்போதும் அம்பேத்கர் கையில் கிடைக்கவில்லை. நான் தேடிப்போகவில்லையா அல்லது எனக்குக் கிடைக்கும்படி பொதுவெளியில் இல்லையா என்று தெரியவில்லை. எப்படி ஒரு சவர்ண நடுத்தவர்க்க மாணவன் சாதிய அரசியலை தொடாமலே பயணித்து நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்து செத்துப் போய் விடலாம் என்பது இப்போது புரிகிறது.
எனக்கு அடுத்தடுத்து நடந்த விபத்துகள் இந்த அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தின. 2011இல் ம.க.இ.கவில் சேர்ந்த பிறகுதான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். "அம்பேத்கரியம் சாதித்தது என்ன?" என்ற ஆர்கே எழுதிய கட்டுரைதான் அம்பேத்கரிய அரசியலைப் பற்றிய முதல் அறிமுகம், அதுவும் எதிர்மறையில்தான் அறிமுகமானது. சரவணனுடன் தோழர் தொல் திருமாளவளவனின் உரை ஒன்றைக் கேட்கப் போனேன். எழும்பூர் இக்சா மையத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அந்த உரையைக் கேட்கும்போது புதுமையாக இருந்தது; தாழ்த்தப்பட்ட மக்கள் தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள் என்று அவர் பேசினார். அது உண்மையா என்று சரவணனிடம் அப்பாவியாகக் கேட்டேன்.
அதன்பிறகு ****,டன் சரவணன் டீக்கடையில் அம்பேத்கர் பற்றிப் பேசியதாக ஒரு குறிப்புத் தொகுப்பைக் கொடுத்தார். அந்த நேரத்தில் சாதியை அழித்தொழித்தல் படித்திருந்தேன் என்று நினைவு. இந்தியாவில் சாதிகள் நூலையும் படித்திருக்க வேண்டும். அப்படி ஆர்.எஸ்.எஸ் இந்துத்துத்துவா சக்திகளுக்கு சாதகமாக அவர் எதையும் எழுதவில்லையே என்று கேள்வி எழுப்பினேன். அப்படித்தான் எழுதியிருக்கிறார், நுணுக்கமாகப் பார்த்தால் அவர்களுக்குப் பயன்படும்படி இருப்பது தெரியும் என்றார்.
அதன்பிறகு, ****, அறைத் தோழராக உடன் தங்கினார். அவர் மருத்துவர் சாதியைச் சேர்ந்தவர். அது ஓரிரு ஆண்டுகள் நீடித்தது. அதிலும் அவரைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமலேயே வாழ்ந்திருந்தேன். ****ஐ எனது வழிகாட்டலின் கீழ் **** வைத்திருந்தார். அவரது தகுதிக்கு ****க்கு எல்லாம் வழிகாட்ட முடியாது என்ற திமிராகக் கூட இருக்கலாம்.
டாக்டரும் புனிதரும் (Doctor and Saint) என்ற அருந்ததி ராயின் அறிமுகக் கட்டுரை வெளியானது. அது சாதியை அழித்தொழித்தல் கட்டுரைக்கு அருந்ததி ராய் எழுதிய நீண்ட அறிமுகக் கட்டுரை. அது ஒரு சவர்ண இந்து மனநிலையில் தீண்டாமை பற்றி விமர்சனபூர்வமாக எழுதப்பட்ட நூல்தான். அதில் அம்பேத்கர் முன்வைக்கும் அகநிலை கூறுகள் அரிதாகவே இருந்தன; புறநிலை கூறுகளிலேயே அது பயணித்துக் கொண்டிருந்தது.
அதன் பிறகு **** அறிமுகம். அவர்தான் அம்பேத்கரியம் சாதித்தது என்ன என்ற கட்டுரையைப் படித்து கோபப்பட்டவர் என்று தெரிய வந்தது. எனவே, அவர் தலித், அம்பேத்கர் அரசியலை ஏற்பவர். பின்னர் ஐ.டி அரங்குக்குப் போன பிறகு இன்னொரு **** அறிமுகமானார். அவர் **** பகுதியைச் சேர்ந்த **** சாதியைச் சேர்ந்தவர்கள். அவருடன் நீண்ட காலம் நெருக்கமாகப் பழகினேன். அவரது குழுப் பொறுப்பாளராக இருந்ததால் அவரும் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார். அவரை வீடு மாற வைத்து ****னும் அவரது அக்கா மகனுடனும் இன்னொருவருடனும் தங்க வைத்தோம். அவர் பண விவகாரத்திலும் வேலைகளிலும் கறாராக இருப்பார், அதாவது ****தி. கடைசியில் கட்சியிலிருந்து நான் வெளியேறும்போது அவர் ****ன் தரப்பில் நின்று விட்டார்.
நான் மிகவும் மதிக்கும் இரண்டு அறிவாளிகள் என்று ****யும் (****யும்) ****யையும் குறிப்பிடத் தொடங்கினேன். அதன்பிறகு **** அறிமுகமானார். அவர் தலித் பின்னணி கொண்டவர் என்று தெரியும். அவரும் கூட அம்பேத்கரின் அரசியலைப் பேசவே இல்லை. வாசிப்பு அமர்வுகள் என்ற வகையில் சாதியை அழித்தொழித்தல் நூலை ஒரு ஏப்ரல் 14 அன்று வாசித்து விவாதித்தோம்.
இந்திய சமூகம் பற்றிய ஆய்வு என்ற அறிக்கையில் ஏன் அம்பேத்கரை மேற்கோள் காட்டவில்லை என்று ****கைக் கேட்டேன். அம்பேத்கரை விமர்சிக்க விரும்பவில்லை என்றார். விமர்சித்து மேற்கோள் காட்டச் சொல்லவில்லை, அவரைப் பற்றி நேர்முகமாக மேற்கோள் காட்ட வேண்டும் என்று சொன்னேன், வலியுறுத்தினேன் என்று எழுத விரும்பவில்லை.
அதன் பிறகு இளம் கம்யூனிஸ்ட் கழகம் ஓய்ந்து கொண்டிருந்தபோது வி.சி.க பற்றிய விவாதத்தை **** தொடங்கி வைத்தார். அதைப் பற்றி நான் எழுதி முன்வைத்தேன். அடுத்து ஒரு ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதம் முற்றி **** ****கை பார்ப்பனியப் பார்வை என்று எழுதி வைத்து விட்டார். அது மிகப்பெரிய கலகத்தை உருவாக்கியது.
விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் பற்றி மதிப்பிடும்போது அவர்களுடைய தவறுகளையும் செயல்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். அக்கட்சிக்கு வழிகாட்டும் கருத்தியலையும் அண்ணல் அம்பேத்கரையும் பற்றிப் பேச மறுக்கிறீர்களே என்று வாதிட்டோம். அம்பேத்கரைப் பற்றிய தொகுப்புத் திட்டத்தை எழுதி வைக்கும்படி ****கை வலியுறுத்தத் தொடங்கினோம். அவர் அதற்கு வெகு விரைவில் உடல்நிலை மோசமாக அறுவை சிகிச்சையில் இறந்து விட்டார்.
அம்பேத்கர் வாசிப்பு வட்டம் தொடங்கி அதில் முதலில் தீண்டப்படாதவர்கள் யார் என்ற நூலையும் அதைத் தொடர்ந்து சாதியை அழித்தொழித்தல் நூலையும் வாசித்து விவாதித்தோம். இந்திய ரூபாய் பற்றிய சிக்கல் என்ற நூலை வாசித்து பாதியில் நிறுத்தி விட்டோம்.
மகத் சத்தியாகிரகம், சாதிகளின் குடியரசு என்ற ஆனந்த் தெல்டும்டே நூல்கள், கம்யூனிசம் பற்றிய அம்பேத்கர் என்ற அவரது நூல் இவற்றை 2023இல் வாசித்து விட்டிருந்தேன்.
சென்ற அக்டோபர் மாதம் தொடங்கி அம்பேத்கர் மக்கள் பதிப்புக்கான தொகுப்புப் பணி தொடங்கி விட்டது. அம்பேத்கரின் எழுத்துக்களுக்குள் பய்யப்பய்ய இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். புத்தகக் கண்காட்சியில் அம்பேத்கரின் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தேன்.
பிப்ரவரி
மாதம் முதல் அம்பேத்கர் மக்கள்
பதிப்பு வேலைக்குள் முழுமையாக
இறங்கி விட்டிருக்கிறேன்.
அதை
ஒட்டி அம்பேத்கர் பற்றிய
கார்ட்டூன் புத்தகம்,
ஆகாஷ்
சிங் ராத்தோர் எழுதிய புத்தகம்
இரண்டையும் வாசித்தேன்.
பேராசிரியர்
உமேஷ் பாகடேவின்
இந்த
ஆய்வுக்கட்டுரையையும் படித்து
மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறேன்.
இந்தப் பின்புலத்தில் இருந்துதான் அம்பேத்கரைப் புரிந்து கொள்ள வேண்டும், அதாவது வாழ்க்கையை புரிந்து கொண்டு முன்வைக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக