மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

 மூலதனத்தைக் கற்றல்

வாரத்துக்கு நான்கு மூலதனம் நூல் வாசிப்பு அமர்வுகளில் கலந்து கொள்கிறேன். 

  •     செவ்வாய் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஆங்கிலத்தில். முதல் பாகம் முன்னுரைகளில் ஜெர்மன் மூன்றாம் பாகத்துக்கு முன்னுரையை வாசித்து முடித்து விட்டு ஆங்கிலப் பதிப்புக்கு முன்னுரையையும் முடித்து விட்டதாக நினைவு. அடுத்து ஜெர்மன் நான்காம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையோடு அது முடிந்து விடும். முதல் அத்தியாயம் "சரக்குகள்" என்பதைத் தொடங்கி விடுவோம். 
  • இரண்டாவதாக, சனிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை - ஆங்கிலத்தில். மூன்றாம் பாகத்தில் அத்தியாயம் 5-ஐ முடித்து விட்டு, அத்தியாயம் 6 “Effects of Price Fluctuation” வாசிக்கிறோம். 
  • மூன்றாவதாக, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை - தமிழில். இரண்டாம் பாகத்தில் அத்தியாயம் 15 “முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பருமன் மீது புரள்வுக்காலம் ஏற்படுத்தும் விளைவு" - “வேலைக்காலம் சுற்றோட்டக் காலத்தை விட நீண்டதாய் இருத்தல்" என்பதை வாசித்து முடித்து விட்டு, “வேலைக்காலம் சுற்றோட்டக் காலத்தை விட குறுகலாய் இருத்தல்" என்பதை வாசிக்கத் தொடங்க வேண்டும். இந்த அத்தியாயம் இன்னும் ஓரிரு வாரங்களுக்குப் போகும். அதன்பிறகு, அத்தியாயம் 16 “மாறும்-மூலதனத்தின் புரள்வு", அத்தியாயம் 17 “உபரி-மதிப்பின் சுற்றோட்டம்" இரண்டையும் முடித்த பிறகு பகுதி 3 “மொத்த சமூக மூலதனத்தின் மறுவுற்பத்தியும் சுற்றோட்டமும்" என்பதை வாசிக்க வேண்டும்.
  • நான்காவதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 முதல் 10 மணி வரை - தமிழில் முதல் பாகத்தில் அத்தியாயம் 15 “இயந்திர சாதனம்" என்பதில் இழப்பீட்டுக் கோட்பாடு என்ற தலைப்பை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நான்கும் எனக்கு மிக பயனுள்ளவையாக உள்ளன. முதல் பாகத்தின் முன்னுரைகள், சரக்குகளும் பணமும் என்ற பகுதியில் முதல் அத்தியாயங்கள் ஒரு பக்கம்; முதல் பாகத்தில் இயந்திர சாதனங்கள் பற்றிப் பேசும் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதி - நூலின் நடுவில்; இரண்டாம் பாகத்தில் மூலதனத்தின் புரள்வு தொடர்பான சமூக மூலதனத்தின் உற்பத்தி பற்றி; மூன்றாம் பாகத்தில் இலாபவீதம் உருவாவது பற்றிய நுணுக்கங்கள்.

இந்த மொத்தத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு வாரமும் மூலதனம் நூலின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த madnessஇல் ஒரு method உள்ளது. இது தற்செயலாக அமைந்தது. தொடர்பும் திட்டமும் இல்லாத அடுத்தடுத்த தேர்வுகளால் தீர்மானிக்கப்பட்டது. 

கூடவே, செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றிய எங்கெல்சின் நூலை வாசிக்கிறோம். குடும்பம் என்ற இயலை வாசித்து மீளாய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த ஐந்து அமர்வுகளும் வாரா வாரம் தோழர்களுடன் இணைந்து மார்க்சுடனும் எங்கெல்சுடனும் பயணிக்க வைக்கின்றன.

மூலதனம் வாசிப்பு இயக்கத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

அம்பேத்கரைக் கற்றல்

இது போக, வாரம் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்களைத் தொகுக்கும் பணி. சென்ற வாரம் முழுவதும் இந்து மதத்தின் தத்துவம், இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவைகள் ஆகியவற்றைப் படித்தேன். சனிக்கிழமை உரையாடலுக்காக இந்தியாவில் சாதிகள் என்ற நூலைப் படித்தேன். வருணம் சாதியாக மாறியது பற்றிய அம்பேத்கரின் கோட்பாட்டை விளக்குவதற்காக அதைத் தொகுத்தேன். இப்போது தீண்டப்படாதவர்களும் தீண்டாமையும் என்ற தலைப்பில் அரசியல் கட்டுரைகளை படித்து இறுதி செய்து கொண்டிருக்கிறேன். கூடுதலாக, சாதியை அழித்தொழித்தல் நூலை வாசிக்க வேண்டும், புதன் கிழமை இரவுக்காக. திங்கள் இரவில் இளம் கம்யூனிஸ்ட் கழகம் நடத்தும் அமர்வுகளில் அம்பேத்கரைப் பற்றியும் இந்திய சமூகம் பற்றியும் பேசுகிறோம்.

YCL அமர்வுகளில் மூலதனம் நூலையும் இணைத்துப் பேச வேண்டும். அதுதான் அடுத்த அடி. அம்பேத்கரின் நூலை வாசிக்கும் போதும் மார்க்சுடன் இணைத்துப் பேச வேண்டும்.  இவற்றுக்கு மேல் இன்னும் ஓர் அமர்வு இரவு நேரத்தில் கிளப் ஹவுசில் நடத்த வேண்டும்.

கிளப் ஹவுசில் நான் பேசியதைக் கேட்டுத்தான் லயோலா கல்லூரியில் ரசியா-உக்ரைன் போர் பற்றிப் பேச லெனின் அழைத்திருந்தார். அதே போல அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மார்க்சின் கருத்தியல் பற்றிப் பேச பிரபு அழைத்திருந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்