அம்பேத்கர் தொகுப்பு, மூலதனம் வாசிப்பு, YCL

 

ஜூலை மாதம் 15ஆம் நாள் ஆகி விட்டது. அண்ணல் அம்பேத்கர் மக்கள் பதிப்பு தொகுப்பில் முதல் 10 தொகுதிகளை ஜூன் 15ஆம் நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று  சொல்லியிருந்தார். அதன் பிறகு ஜூன் 10ஆம் நாளுக்குள் மூன்று தொகுதிகளை முடிக்கச் சொன்னார்கள். 5 தொகுதிகளை முடித்து விடுகிறோம் என்று சொல்லி ஜூன் 15க்குள் முடித்து விட்டோம்.

அதன் பிறகு ஜூலை முதல் வாரத்தில் எஞ்சிய ஐந்து தொகுதிகளையும் கொடுத்து விடுகிறோம் என்று சொன்னோம். அது ஜூலை 10 என்று ஆனது. இப்போது ஜூலை 15 ஆகி விட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரம் தாமதத்திற்குப் பிறகு கொடுக்கிறோம். தொடக்கத்தில் சொன்ன கெடுவில் இருந்து ஒரு மாதம் தாமதம் என்று வைத்துக் கொள்ளலாம்.

தொகுதி 9இல் திருத்தங்களைப் போட்டு, செய்ய வேண்டிய திருத்தங்களை குறிப்பிட்டு ஜீவமணிக்கு அனுப்பி விட்டேன்.

தொகுதி 10, தொகுதி 11 இல் - பகுதி 1, பகுதி 2 என்பதை தலைப்புப் பக்கத்தில் சேர்ப்பது பற்றிக் குறிப்பிட வேண்டும். இரண்டையும் ஒருமுறை புரட்டிப் பார்த்துத் திருத்தங்கள் இருந்தால் சொல்ல வேண்டும். தொகுதி 10இல் வரைபடம் சேர்க்க வேண்டும் என்று நினைவூட்ட வேண்டும்.

தொகுதி 15

  • இப்போதுதான் மெய்ப்புத் திருத்தம் பாதி முடிந்திருக்கிறது. இன்று காலையில் கலைச்சொல் அகராதி, நூல் பட்டியல் மெய்ப்புத் திருத்தத்தை சரிபார்த்து அதை idd கோப்பில் சேர்க்கக் கொடுக்க வேண்டும்.

  • பின்பாதி 130 பக்கங்களை அச்செடுத்து மெய்ப்புப் பார்க்கக் கொடுக்க வேண்டும். அது முடிந்த பிறகு திருத்தங்களை சேர்த்து இறுதி செய்ய அனுப்ப வேண்டும் (இன்று மாலை, நாளைக் காலை)

  • வாழ்க்கை வரலாறு நீக்க வேண்டும் என்று கேட்கலாமா, அல்லது கடைசி இரண்டு கட்டுரைகளை நீக்கி, தொகுதி 16-க்குக் கொண்டு போகலாம்.

தொகுதி 18

  • இன்று காலை ஒரு முறை சரிபார்த்து இறுதிக் குறிப்புகளைச் சொல்லி இறுதி செய்யச் சொல்ல வேண்டும்.

அனைத்து தொகுதிகளின் அட்டைகளை அச்செடுத்து மெய்ப்புத் திருத்த வேண்டும்.

இவை முடிந்த பிறகு நாளை முற்பகலில் PODக்கு அனுப்பி விடலாம் என்று தோன்றுகிறது. புதன் கிழமை கூட்டத்தை நடத்தலாம். தொகுதி 15ஐ இன்னொரு முறை படித்துத் திருத்த வேண்டியுள்ளது. என்ன வாய்ப்பு என்று பார்க்கலாம்.

அடுத்து இந்த 10 தொகுதிகளையும் இறுதி செய்யும் வேலை. அதாவது இறுதியாக அச்சுக்கு அனுப்புவதற்குத் தயாரிக்கும் வேலை. கூடவே 16, 17 தொகுதிகளையும் 21, 22, 23 தொகுதிகளையும் என இன்னும் 5 தொகுதிகளை முடிக்கலாம். அதற்கு ஆகஸ்ட் இறுதி வரை திட்டமிடலாம். மொத்தம் 15 தொகுதிகளை அச்சுக்கு அனுப்பும்படி திட்டமிடலாம்.

இனிமேல் செய்யும் தொகுதிகளில் உள்ளடக்கம் லேஅவுட் முடிந்த பிறகுதான் சுட்டிகளைத் தேட வேண்டும். அப்போதுதான் சுட்டி சேர்ப்பதற்கு வசதியாக இருக்கும். நூல் பட்டியலையும் கலைச்சொல் அகராதியையும் முன்கூட்டியே கொடுத்து விடலாம்.

மூலதனம் வாசிப்புக் குழு அமர்வுகளில் சென்ற செவ்வாய்க் கிழமை முன்னுரைகளை வாசித்து முடித்து விட்டோம். மார்க்ஸ் தவறாக மேற்கோள் காட்டினார் என்ற அவதூறை சிறப்பாக விளக்கினார். அவர் தன்னை மார்க்சிஸ்ட் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால், அவரது நடைமுறை அன்றாட அரசியல் தலித் அரசியல் என்று சொல்லக் கூடியதாக உள்ளது.

சனிக்கிழமை காலை, விலை ஏற்ற இறக்கங்களால் மாறா மூலதனத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றத்தை் பற்றியும் அது இலாபவீதத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றியும் படித்தோம். மார்க்ஸ் முதலாளிகளின் அகநிலையைப் பற்றிப் பேசுவதைச் சுட்டிக் காட்டினேன். அவர் சூக்குமமாகத் தொகுத்துச் சொன்ன கருத்துக்களுக்கு எண் விளக்கங்களைக் கொடுத்தேன்.

நேற்று காலை இரண்டாம் பாகம் வாசிப்பில், வேலைக் காலத்துக்கும் சுற்றோட்டக் காலத்துக்கும் இடையிலான வேறுபாடு கூடுதல் மூலதன முன்னீட்டைக் கோருகிறது; அந்தக் கூடுதல் மூலதனம் பண மூலதனமாக விடுவிக்கப்படுவதைப் பற்றிப் படித்தோம். மூன்றாம் பாகத்தில் மாறா மூலதனத்தில் ஏற்படும் மாற்றங்களால் மூலதனம் விடுவிக்கப்படுவதைப் பற்றிப் படித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

அதே நேரம், இழப்பீட்டுக் கோட்பாடு என்ற பிரிவில் (பாகம் 1, அத்தியாயம் 15 இயந்திர சாதனங்களும் நவீன தொழில்துறையும்) தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதால் மூலதனம் விடுவிக்கப்படுகிறது என்ற கொச்சைப் பொருளாதார பிதற்றலைப் பற்றிய மார்க்சின் masterly பகுப்பாய்வைப் படித்தோம். நேற்று அதே வாசிப்புத் தொடர்ந்தது. இயந்திர சாதனம் ஒரு துறையில் அறிமுகப்படுத்தப்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று அந்த நிறுவனத்தில் தொடங்கி, அதற்கு பொருட்களை வழங்கும் துறைகளில், பிற துறைகளில், சொகுசுப் பண்டங்களின் உற்பத்தியில், அயல்நாட்டு வர்த்தகத்தில் போக்குவரத்துத் துறையில், புத்தம் புது துறைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகிறார். அடுத்த பகுதி பருத்தித் தொழிலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் பற்றிப் பரிசீலிக்கிறது.

நாளைக்குக் காலையில் குடும்பம் பற்றிய இறுதிப் பகுதியை தோழர் விளக்கவுள்ளார். அது முடிந்த பிறகு வாசிப்பைக் கூடத் தொடரலாம்.

இன்று இரவு தோழர் ஆம்ஸ்ட்ராங் பற்றிய உரையாடல். அதில் தோழர் துரை சண்முகத்தையும் தோழர் திருப்பூர் குணாவின் காணொலியையும் குறிப்பிட்டு அறிவிப்பு அனுப்பியிருந்தோம். அதற்கு குணா எதிர்வினை ஆற்றியிருக்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் - பௌத்தம்

வேலைகள் - God Building?

சந்திப்புகளின் ஒரு நாள்