மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்

 சுரண்டல் சமூகத்தில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பண்பாடு, கருத்தியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் போராட்டமும் வாழ்க்கை நிலைமையும் தொகுக்கப்படாமல் சிதறடிக்கப்படுகின்றன.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு உலக அளவில் முதலாளித்துவ உற்பத்தி முறை மாபெரும் வளர்ச்சி பெற்றது. அது தொடர்பான கோட்பாட்டாக்கப் பணியை முதலாளித்துவ வரம்புக்குள் இருந்த ஆதாம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்களே செய்தனர். முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களும் இயக்கமும் தீவிரமடைந்தபோது, முதலாளிகளுக்கு சேவை செய்யும் கொச்சைப் பொருளாதாரவியல் அல்லது சப்பைக்கட்டுவாதம் தோன்றியது. மாறிவந்த புறநிலை தானாகவே தொழிலாளர்களுக்கான புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்கி விடவில்லை.

கார்ல் மார்க்சின் மகத்தான கோட்பாட்டு ஆக்கமான மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தொடங்கி அதன் இயக்கத்தையும் அதன் இறுதி முடிவையும் பற்றிய ஒவ்வொரு இழையையும் தொழிலாளி வர்க்கத்தின் பார்வையில் இருந்து ஆய்வு செய்து முன்வைத்தது. புதிய கருத்தியல் வகையினங்களை உருவாக்கியது. எடுத்துக்காட்டாக, முதலாளிகள் இலாபவீதம் என்று மட்டும் பேசிக் கொண்டிருந்தபோது, தொழிலாளர்களின் பார்வையில் உபரி-மதிப்பு வீதம் அல்லது சுரண்டல் வீதம் என்பதை வரையறுத்து அதற்கும் இலாபவீதத்துக்கும் இடையேயான உறவை விளக்கும் முழுமையாக கோட்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்கினார், மார்க்ஸ். அந்தக் கோட்பாட்டுக் கட்டமைப்பு உலகெங்கிலும் போராடிக்கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தின் கையில் ஆயுதமாகச் செயல்பட்டது. தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தியது, புரட்சிகர எழுச்சிகளுக்கு அடித்தளத்தை உருவாக்கியது. இன்றுவரை, அதாவது மூலதனத்தின் ஆட்சி நீடிக்கும் வரை மூலதனத்தை எதிர்ப்பதற்கான வலுவான கருத்தியல் அடித்தளத்தை வழங்குகிறது.

இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டு தொடங்கி, ஐரோப்பிய காலனியவாதிகள் நவீன கருத்துகளையும் உற்பத்தி முறையையும் புகுத்தினர். அவர்கள் இந்திய வரலாற்றை தமது காலனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் கட்டமைத்தனர். அதற்கு அடிப்படையாக பார்ப்பனிய இலக்கியங்களையும் பார்ப்பனர்களால் பராமரிக்கப்பட்டு வந்த மன்னர்களின் பதிவேடுகளையும் பயன்படுத்தினர். ஒரு நூற்றாண்டுக்குப் பின் இத்தகைய காலனிய வரலாற்றியலுக்கு எதிரான தேசிய வரலாற்றை எழுதிய பார்ப்பன அறிஞர்கள், அதே பார்ப்பன ஆதாரங்களைப் பயன்படுத்தி காலனியத்துக்கு எதிரான வரலாற்றைக் கட்டியமைத்தனர். புறநிலையில் பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பை தளர்த்தும் வகையிலான அல்லது உடைக்கும் வகையிலான பொருளாயத மாற்றங்கள் நடந்து வந்தாலும் இந்த இருவகையான வரலாற்றியலும் கருத்தியல் தளத்தில் பார்ப்பனிய மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கவில்லை. எனவே, நால் வருண அடிப்படையிலான சாதியக் கட்டமைப்பும் தீண்டாமையும் மாறிய வடிவத்தில் தொடர்ந்தன.

இந்நிலையில் இந்து சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர சாதி உழைக்கும் மக்களும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் தலித் மக்களும் நடத்தி வந்த போராட்டங்களுக்கான கோட்பாட்டாக்கம் தானாகவே நடந்து விடவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகாத்மா ஜோதிபா புலே பார்ப்பனிய எதிர்ப்பு உழைக்கும் மக்கள் சார்ந்த வரலாற்றியலை உருவாக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உயர்கல்வி பெற்று, மேற்கத்திய சிந்தனை மரபுகளையும் உள்வாங்கிய அண்ணல் அம்பேத்கர் மகாத்மா புலேவின் பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றியலையும் கோட்பாட்டாக்கத்தையும் புரட்சிகரமாக வளர்த்தெடுத்தார். குடிமை உரிமைகளுக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களில் இருந்தும் தமது அரசியல் செயல்பாடுகளில் இருந்தும் இருபதாம் நூற்றாண்டின் சமூக நிலைமைகளில் இருந்தும் அந்தக் கோட்பாட்டுக்கான தொடக்கப் புள்ளிகளை எடுத்துக் கொண்டார். அந்தத் தொடக்கப் புள்ளிகளில் இருந்து இந்திய வரலாற்றை ஆய்வு செய்தார். அதற்கு பார்ப்பன இலக்கியங்களையும் பிறநாடுகளுடன் ஒப்பிடும் ஆய்வுமுறையையும் பயன்படுத்தினார். ஆளும் வர்க்க கருத்தியலுக்கு சேவை செய்யும் "கண்ணால் காண்பதே மெய்" என்ற நேர்க்காட்சிவாத வரலாற்றுக்கு மாறாக பதிவு செய்யப்படாத உழைக்கும் மக்களின் வரலாற்றியலை மீட்டமைத்தார். அதற்காக புதிய வகையினங்களை உருவாக்கி வழங்கினார்.

நம் நாடு உள்ளிட்ட உலக மூலதனத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக மார்க்சின் மூலதனம் இருப்பது போல இந்தியாவில் பார்ப்பனியத்துக்கு எதிரான வலுவான கருத்தியல் ஆயுதமாக அண்ணல் அம்பேத்கரின் வரலாற்றியல் உள்ளது. அந்தப் போர்வாளை உறையில் இருந்து எடுத்து பார்ப்பனியத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதும் பார்ப்பனியத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்திய மூலதனத்துக்கு எதிராக மார்க்சின் மூலதனத்தைப் பயன்படுத்துவதும் இன்றைய புரட்சிகர வர்க்கங்களின் பணியாக உள்ளது.

  • இந்திய வரலாற்றில் போராடும் வர்க்கங்களின் புரட்சிகரத் தன்மையினை அம்பேத்கர் எவ்வாறு கண்டறிந்து வகைப்படுத்தினார் ?
  • சமஸ்கிருத மூலாதாரங்களை காலனியாதிக்கவாதிகள் பயன்படுத்தியது மட்டுமின்றி தேசியவாதிகளும் பயன்படுத்தியபோது சுரண்டப்பட்ட வர்க்கங்களின் வாழ்வியல் உண்மைகளை கண்டறிய அம்பேத்கர் புதிதாக கண்டறிந்த வழிமுறைகள் என்ன? 
  • வரலாற்றாசிரியர்கள் என்ற படிப்பறைவாதிகளின் பார்வையில் இல்லாமல் உழைக்கும் வர்க்க குரலாய் அம்பேத்கர் வரலாற்றை மீட்டமைத்தது எப்படி?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

21ஆம் நூற்றாண்டு சீனா - ஒரு மார்க்சியப் பார்வை