இந்தியாவில் கம்யூனிஸ்டுகள்: இந்து மதம் - பௌத்தம்

 1. கம்யூனிஸ்ட் பற்றிய குறுகிய வரையறை:  சுரண்டல் சமூகத்தின் அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து, அவற்றை ஒழித்துக் கட்டுவது என்ற நோக்கத்துடன், சமூகக் கட்டமைப்பின் இயங்கு விதிகளை அறிவியல் அடிப்படையில் (புறநிலை அடிப்படையில்) ஆய்வு செய்து அந்த ஆய்வு தரும் முடிவுகளை அடிப்படையாகக்  கொண்டு அமைப்பாகத் திட்டம் வகுத்துக் கொண்டு செயல்படுபவர்; சுரண்டும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம் சுரண்டலற்ற சமூகத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பவர்.

இதில் நம் நாட்டில், சமூக அநீதிகளைக் கண்டு கொதித்தெழுவதும் சுரண்டலற்ற சமூகத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பதும் மற்ற நாடுகளைப் போலவே பொருந்துகிறது. ஆனால், இந்தியப் புறநிலை பற்றிய ஆய்வும் புரிதலும் சூத்திரங்களை இயந்திரகதியாக பொருத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது, எனவே கம்யூனிஸ்டுகளின் திட்டமும் செயல்பாடும் பரந்துபட்ட மக்களின் வர்க்கப் போராட்ட வடிவங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

2. "கம்யூனிஸ்டுகள் மதம் மற்றும் மூடநம்பிக்கைகளைக் கடந்தவர்கள். அறிவியல் அணுகுமுறை ஒன்றையே - உற்பத்தி, அரசியல், சமுதாய வாழ்கை - வாழ்வியல் நெறியாகக் கொண்டவர்கள். சமூக மனிதனுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் மதம் மற்றும் நம்பிக்கை பற்றிய வரையறைகள் பாராதூரமானது." என்பது பொதுவான உண்மை. அதைக் குறிப்பான இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தும்போது என்ன கிடைக்கிறது?

இந்தியாவில் உழைப்பின்மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கான வலுவான கட்டமைப்பாக இருப்பது

- மக்களில் நான்கில் ஒரு பகுதியினரை தீண்டப்படாதவர்கள் என்று ஊருக்கு வெளியில் ஒதுக்கி வைத்து அவர்கள் மீது பல சமூக இயலாமைகளை சுமத்தும்

- இந்துக்களில் நான்கில் மூன்று பகுதியினரான பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வி, சொத்துடைமை, சமூக தகுதி நிலை ஆகியவற்றை மறுக்கும்

- அதன் அடிப்படையில் சிறுபான்மையாக உள்ள இரு பிறப்பாளர் வருணத்தைச் சேர்ந்த பார்ப்பன, பனியா (முதலாளிகள், நிலவுடைமையாளர்கள்) மேற்சொன்ன பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டும்

பார்ப்பன சனாதன நால்வருணக் கட்டமைப்பு (இது ஒரு புறநிலை உண்மை, இது ரசியாவில் இல்லாத நிலைமை).

இவ்வாறு சமூகத்தை படிநிலை ஏற்றத்தாழ்வு அடிப்படையில் பிரித்து வைப்பதற்கு கருத்தியல் அடித்தளத்தையும் நியாயப்படுத்தலையும் வழங்குவது பார்ப்பன இந்து மதம். 

3. எனவே, "இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மதம் மற்றும் மூடநம்பிக்கைகளைக் கடந்தவர்கள்" என்று பொதுவாகச் சொல்ல முடியாது. கம்யூனிஸ்டுகள் இந்து மதத்தை நிராகரிக்க வேண்டியவர்கள். சுரண்டல் கட்டமைப்பை உருவாக்கி தொடர்ந்து மறுஉருவாக்கம் செய்துவரும் இந்து மதத்தை "கடவுள் நம்பிக்கை இல்லை, சடங்குகளைப் பின்பற்றுவதில்லை, மாட்டுக்கறி சாப்பிடுகிறேன்" என தனிநபர்களாக நிராகரிப்பதோடு நிற்காமல் சமூகரீதியாக நிராகரிக்க வேண்டியவர்கள். 

அப்படி நிராகரிப்பதற்கு இந்து மத அடையாளங்களையும் (பெயர்கள், உற்றார் உறவினர், சுற்றியுள்ள சமூகம், மக்கள்தொகை கணக்கெடுப்பில் தரவு கொடுப்பது) சமூகப் படிநிலையில் (நாம் நிராகரித்த) ஆனால் சமூகம் இன்னும் பராமரிக்கும் தமது இடத்தையும் தூக்கி எறிந்து விட்டோம் என்று அறிவிப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகிறது. ஏனென்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர், மூடநம்பிக்கைகளை பின்பற்றாதவர், சடங்குகளை நிராகரிப்பவர் என்று அறிவித்த பிறகும் சமூக அடிப்படையில் குறிப்பிட்ட சாதியி்ல் (வருணத்தில்) பிறந்த ஒருவர் அவர் கம்யூனிஸ்டாக இருந்தபோதும் அந்த வருணத்துக்கான தனிச்சலுகைகளை அல்லது இழிவுகளை எதிர்கொள்கிறார்.

4. அப்படி அறிவிப்பதற்கான முதன்மையான ஒரு படி இந்து மத வெளியேற்றமும் அதை சமூகத்தின்முன் வெளிப்படையாக பிரகடனப்படுத்துவதும். மாறிச் செல்வது எந்த மதமாகவும் இருக்கலாம், அங்கு மாறிச் சென்ற பிறகு அந்த மதத்தை லெனின் சொன்ன போர்க்குணமிக்க பொருள்முதல்வாத அடிப்படையில் விமர்சிக்கலாம். பௌத்தம் அறிவியல் பார்வையை ஏற்றுக் கொண்டவர்களுக்கான மதம் (அறிவியல் அடிப்படையிலான மதம் என்று சொல்லவில்லை) என்று அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார். 

பௌத்தத்தில் கடவுள் நம்பிக்கை இல்லை, சடங்குகள் இல்லை, மூட நம்பிக்கைகள் இல்லை. அது மனித வாழ்வை ஒழுங்குபடுத்தும் அறநெறி போதனைகளின் தொகுப்பு.

5. எனவே, இந்து மதத்தின் ஆக்டபஸ் கரங்களில் சிக்கிக் கொண்டுள்ள கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் பௌத்தம்.

இதுதான் கம்யூனிஸ்ட் தோழர் சரவணராஜா பௌத்தத்தை ஏற்றது தொடர்பான என்னுடைய புரிதல்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்