வாழை பேசும் வாழ்வியல்

மாரி செல்வராஜ் எழுதிய இயக்கி தயாரித்த வாழை திரைப்படம் பேசும் உழைப்புச் சுரண்டல் என்ற தலைப்பில் தொடங்கி பல பொருட்களில் உரையாடல் நடந்திருக்கிறது. அவற்றில் 
  •     கலை - யதார்த்தம், சோசலிச யதார்த்தம்
  •     திரைமொழி என்ற வடிவம்
  •     மாரி செல்வராஜின் அரசியல்
  •     போராடும் வடிவம்
  •     குட்டி முதலாளித்துவ அற்பவாதம்
  •     மூலதனத்தின் கணக்கு
  •     மூலதனம் நூல்
எனப் பல கூறுகள் பேசப்பட்டன. இவை அனைத்துமே வாழை என்ற திரைப்படத்துடன் இணைந்துள்ளன. இவை அனைத்தும் இணைந்ததுதான் வாழை திரைப்படம். ஒவ்வொரு சமூக நிகழ்வும் இப்படி பல பகுதிகள் இணைந்த முழுமையாகவே உள்ளது. 

அ. மூலதனம் நூலை வாசிப்பதில் ஒரு கம்யூனிஸ்ட் பெறும் அறிவுச் செல்வங்கள் மூன்று

  • முதன்மையாக, ஒரு சிக்கலான சமூக நிகழ்வை ஆய்வு செய்வது எப்படி? அந்த ஆய்வின் மூலம் வந்தடைந்த கருத்துகளை முன்வைப்பது எப்படி?
  • இரண்டாவதாக, அத்தகைய சிக்கலான ஒரு சமூக நிகழ்வான முதலாளித்துவ சமூகத்தின் இயக்க விதிகள் என்ன? மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது? உபரி-மதிப்பின் உற்பத்திக்கும் இலாபத்துக்கும் இடையேயான உறவுகள். மூலதனத்தின் பல்வேறு வடிவங்கள் - திறனுடை மூலதனம், சரக்கு மூலதனம், பண மூலதனம்.
  • மூன்றாவதாக, அதன் அழகியல் அல்லது இலக்கிய நயம். தான் எடுத்துக் கொண்ட பொருளை வறட்சியாக இல்லாமல், வாசகரின் மனதை ஈர்க்கும் வண்ணம் உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம் எழுதுவது

மூலதனம் நூலை படிப்பவர்கள் அல்லது மார்க்சியத்தின் மாணவர்கள் இந்த மூன்று கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் வாழை திரைப்படம் பற்றிய பகுத்தாய்வைப் பார்ப்போம்.

ஆ. வாழை திரைப்படம் பற்றிய விமர்சனங்கள்

  • யார்தான் வாழ்க்கையில் இன்னலுக்கு உள்ளாகவில்லை. மாரி தனது வலியை மட்டும் பெரிதாக்கி காட்டுகிறார்.
  • இதில் மூலதனத்தின் சுரண்டல் ஒரு சார்பாகக் காட்டப்படுகிறது. வாழை விவசாயியின் நிலையையும் (அவரைக் காட்டவே இல்லை) வியாபாரி எதிர்கொள்ளும் தொல்லைகளையும் பற்றிப் பேசவில்லை.
  • இது குட்டி முதலாளித்துவ நடுத்த வர்க்கத்தின் அற்பவாதத்துக்கு தீனி போடுகிறது. மக்களின் கண்ணீரை தனது வருவாயாக பார்க்கிறது. அதாவது, மாரி செல்வராஜ் உணர்ச்சிகளின் வணிகர், இதனால் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் இருக்கும் உழைக்கும் மக்களின் கோபத்தையும் வர்க்க உணர்வையும் கண்ணீரில் மூழ்கடித்து காயடித்து விடுகிறது. அவர்களுக்கு ஒரு தேறுதலாகவும் இளைப்பாறுதலாகவும் மட்டுமே இருக்கிறது.
  • இதில் அரசுப் பள்ளிகள் குறித்தும் 1990களின் கிராம நிலைமைகள் பற்றியும் கற்பனையாக சித்தரிப்பு காட்டப்படுகிறது. மேலும், கம்யூனிஸ்டுகள் பற்றிய தவறான சித்திரம் தரப்படுகிறது. சங்கம் அமைக்காமல் பேரம் பேசுவது, ஊர் ஊராக  அலைந்து செத்துப் போனதாகச் சொல்வது என்று கம்யூனிஸ்டுகளை அவதூறு செய்வதாகவும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

வாழை திரைப்படம் பற்றிய விமர்சனம் என்பது தவிர்க்கவியலாமல் அதை உருவாக்கிய அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் மீதான விமர்சனமாகவும் மாறுகிறது. ஏனென்றால், பல கூறுகள் பின்னிப்பிணைந்த ஒரு நேர்வு அது. அனைத்தையும் இணைத்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

இ. மார்க்சின் ஆய்வுமுறை

இதை எப்படிப் பரிசீலிப்பது என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் நமக்குக் கற்பிக்கிறார். 

  • மார்க்சின் சூக்குமப்படுத்தும் ஆய்வுமுறை ஒரு முழுமையின் கூறுகளைத் தனித்தனியாக ஆய்வு செய்து விவரங்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு கூறாக தனித்தனியாகப் பரிசீலித்து முழுமையைப் புரிந்து கொள்வது என்ற அணுகுமுறை இல்லை அது.
  • இந்தக் கலையாக்கத்தின் சாரமான மையக்கூறு என்ன, அது எப்படி செயல்படுகிறது, அது எந்தெந்த திசைகளில் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று பார்க்க வேண்டும். இதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாத ஆய்வுமுறை. மூலதனம் நூலில் முதலாளித்துவ சமூகத்தின் உயிரணு வடிவமான சரக்குகளில் இருந்து தொடங்கும் மார்க்சின் ஆய்வுமுறை.

ஈ. முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முடிவுகள்

முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முடிவுகள்

  • ஒரு சரக்கு என்பது பயன்-மதிப்பு, மதிப்பு என்ற இரு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.
  • மதிப்பு என்பது இன்னொரு சரக்குடனான பரிவர்த்தனையின் போது மட்டுமே பரிவர்த்தனை மதிப்பாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
  • மதிப்பின் சாரமாக அமைவது மனித உழைப்பு, சமூக வழியில் பொதுப்படையான மனித உழைப்பு.
  • ஒரு சரக்கின் மதிப்பை அளப்பது அதை உற்பத்தி செய்வதற்கு சமூக வழியில் தேவையான உழைப்பு நேரத்தினால்.

பரிவர்த்தனையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மதிப்பு (அதாவது உயிருள்ள உழைப்பின் இறுகல்) வடிவம் முதன்மை வடிவம் (elementary form), மொத்த வடிவம் (Total form), பொது வடிவம் (general form) ஆகியவற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சியடைந்த வடிவம் பண வடிவம், பணத்தால் தெரிவிக்கப்படும் சரக்குகளின் விலை வடிவம். 

இவ்வாறு பண வடிவத்தின் மூலம் தெரிவிக்கப்படும் மனிதர்களுக்கு இடையேயான சமூக உறவுகள் சரக்குகளின் மாய்மாலம் என்ற தோற்ற மயக்கத்தை உருவாக்குகின்றன. மனிதர்களுக்கு இடையேயான சமூக உறவுகள் பொருட்களுக்கு இடையேயான சமூக உறவுகளாகவும் மனிதர்களுக்கு இடையேயான பொருளாயத உறவுகளாகவும் காட்சியளிக்கின்றன.

ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு ஆகும் உழைப்பின் அளவு அதன் விலையால் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து வகை உழைப்புகளின் பொதுத்தன்மை எல்லா சரக்குகளும் பணத்துக்கு (சர்வப் பொதுச் சமதைக்கு) பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட முடியும் என்பதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்திலிருந்து பிரிக்கப்பட்டு விட்ட கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தமது உழைப்புச் சக்தியையே சரக்காக விற்கின்றனர். மற்ற எந்த ஒரு சரக்கையும் போலவே உழைப்புச் சக்தியும் அதனை உற்பத்தி செய்வதற்கு சமூக வழியில் தேவையான உழைப்பின் அளவால் மதிப்பைப் பெறுகிறது. 

தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை விலை கொடுத்து வாங்கும் முதலாளி, தொழிலாளர்கள் தமது கூலியின் மதிப்பை புதிதாக உருவாக்கி சரக்கில் சேர்ப்பதற்கான நேரத்தையும் (அவசிய உழைப்பு நேரம்) தாண்டி வேலை செய்ய வைக்கிறார் (உபரி உழைப்பு நேரம்). இந்த உபரி-உழைப்பு உபரி-உற்பத்திப் பொருளில் உருக்கொள்கிறது. உபரி-மதிப்பாக சந்தையில் கைவரப்பெறுகிறது.

  •  உழைப்புச் சக்தியின் மதிப்பு (கூலி, எனவே அவசிய உழைப்பு நேரம்) மாறாதிருக்கும்போது வேலை நேரத்தை நீட்டுவதன் மூலம் உபரி உழைப்பு நேரத்தையும் உபரி உற்பத்திப் பொருளையும் உபரி மதிப்பையும் அதிகரிப்பது தொடர்ந்து நடக்கிறது. (அறுதி உபரி-மதிப்பு)
  •  வேலை நேரம் மாறாதிருக்கும்போது கூலியை (உழைப்புச் சக்தியின் மதிப்பை, எனவே அவசிய உழைப்பு நேரத்தை) குறைத்து அதன் மூலம் உபரி உழைப்பு நேரத்தையும் உபரி உற்பத்திப் பொருளையும் உபரி மதிப்பையும் அதிகரிப்பதும் முதலாளித்துவப் போட்டியின் மூலமாக தொடர்ந்து நிகழ்கிறது. (ஒப்பீட்டு உபரி-மதிப்பு).

உற்பத்தியில் உபரி-உழைப்பைக் கறந்து அதனை உபரி-மதிப்பாக சரக்குகளில் பெற்றுக் கொள்ளும் முதலாளி அதனைச் சந்தையில் விற்று பணமாக மாற்றுவதன் மூலம் தான் முன்னீடு செய்த மதிப்பையும் உபரி-மதிப்பையும் ஈடேற்றம் செய்து கொள்கிறார். இந்த ஈடேற்றத்தின்போது முதலாளிகளிடையே போட்டியின் காரணமாக ஒருவர் உற்பத்தி செய்த உபரி-மதிப்பு இன்னொரு முதலாளியால் கைப்பற்றப்படுகிறது. இது திட்டமான விதிகளால் இயக்கப்படுகிறது.

இந்த உபரி-மதிப்பில் இருந்து ஒரு பகுதியை முதலாளி வர்க்கமும் அவர்களைச் சார்ந்துள்ள பிற ஒட்டுண்ணி வர்க்கங்களும் தமது சொந்த நுகர்வைப் பெறுகின்றனர். முதன்மையாக உபரி-மதிப்பின் கணிசமான பகுதியை புதிய மூலதனமாக மாற்றுகின்றனர்.

அதாவது, தொழிலாளர்கள் மூலதனத்தின் நுகத்தடியின் கீழ் உழைக்கும்போது, தொழிலாளி வர்க்கத்தின் எதிர்கால நுகத்தடியையும் சேர்ந்தே உற்பத்தி செய்கிறார்கள். மூலதனத் திரட்டலின் காரணமாக உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. உழைப்பின் வேண்டல் (உயிருள்ள உழைப்பின் வேண்டல், கடந்த கால உழைப்பின் (மூலதனம்) வேண்டலுடன் ஒப்பிடும்போது குறைந்து செல்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி அதற்கு முந்தைய அல்லது முதலாளித்துவம் அல்லாத உற்பத்தியாளர்களை உடைமையிழக்கச் செய்கிறது.

இது தொழில்துறை சேமப்பட்டாளத்தை உருவாக்குகிறது. எனவே, மூலதனத் திரட்டல் என்பது ஒரு புறம் செல்வமும் கொழிப்பும் குவியக் குவிய மறுமுனையில் இல்லாமையும் வறுமையும் அறியாமையும் துயரமும் குவிவதைக் குறிக்கிறது.

இவ்வாறு எளிய சரக்கில் தொடங்கி முதலாளித்துவச் சமூகத்தின் நெருக்கடிகளையும் அது தோற்றுவிக்கும் சமூகத் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கான முழுக் கட்டமைப்பையும் வழங்குகிறது மூலதனம் நூல்.

இந்த ஆய்வுமுறையைப் பயன்படுத்தி மார்க்ஸ் கண்டறிந்தவை மூலதனம் நூல் முன்வைக்கும் முதலாளித்துவத்தின் இயக்கம் பற்றிய விதிகள்.

உ. மாரி செல்வராஜின் அரசியலின் மையக்கூறு

மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய வாழை படத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால், மாரி செல்வராஜின் சாரமான கூறு என்ன என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

மாரி செல்வராஜ் பட்டியல் சாதி என்று வகைப்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர். 1990-களின் தென் தமிழ்நாட்டு விவசாயப் பொருளாதாரப் பின்னணியில் வளர்ந்தவர். சாதியப் பாகுபாடுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் சமத்துவம் மலர வேண்டும் என்ற அம்பேத்கரிய அரசியலை முன்னெடுத்துச் செல்பவர். மனிதனை மனிதன் சுரண்டும் சமூகம் இல்லாத நிலை வேண்டும் என்று நாடுபவர்.

மாரி செல்வராஜின் அரசியல் ஜனநாயக அரசியல் - சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இவற்றைக் கோரும் அரசியல். சாதி அடிப்படையில் மனிதர்கள் இழிவுபடுத்தப்படுவதோ வாய்ப்புகள் மறுக்கப்படுவதோ கூடாது என்று கோரும் அரசியல். ஆணும் பெண்ணும் மனிதர்களாகப் பழக வேண்டும், ஆண் பெண் காதலை சாதியின் பெயரால் சிதைத்துப் போடும் சாதிய மூர்க்கத்தை எதிர்க்கும் அரசியல். ஒவ்வொருவரும் சமூக மனிதர்களால், அனைத்து மனிதர்களின் அதாவது சமூகத்தின் நலவாழ்வே தனது சொந்த நலவாழ்வுக்கான முன்தேவையாக உள்ளது என்ற உணர்ந்த சமூகத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் அரசியல்.

இந்த அரசியல் வாழை படத்தில் உள்ளதா? இல்லை. இதில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாடப் புத்தகத்தின் அட்டையில் அண்ணல் அம்பேத்கர் படம் உள்ளது. அது பலமுறை காட்டப்படுகிறது. அதற்குமேல் இல்லை.

ஊ. வாழை படத்தின் வாழ்வியல் மனிதம் - சமூகச் சுரண்டல்

அதற்குமேல் என்ன உள்ளது. அது நேர்மறையான அன்பை, பாசத்தை, காதலைக் காட்டுகிறது. சிவனணைஞ்சானின் அக்கா வேம்பு தம்பி மீது காட்டும் பாசம், சிவனணைஞ்சானுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, வேம்புவுக்கும் கனி என்ற போராட்டக்கார இளைஞனுக்கும் இடையே ஏற்படும் காதல், சிவனணைஞ்சானுக்கும் அவனது நண்பன் சேகருக்கும் இடையேயான மோதல் நிறைந்த நட்பு, அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற கனியின் நியாய உணர்வு. அவன் கூட்டிய கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் பேசி கூலி உயர்வு பெற்றே தீர வேண்டும் என்று முடிவு செய்வது. பசுவின் மீது சிவனணைஞ்சான் காட்டும் நேசம். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்கள் மீது காட்டும் அக்கறை.

இவ்வாறு படம் அன்பாலும் பாசத்தாலும் நேசத்தாலும் காதலாலும் நிரம்பி வழிகிறது. இது மாரி செல்வராஜின் ஆளுமையின் ஒரு கூறு. அதோடு இணைந்துள்ள அதிலிருந்து பிரிக்க முடியாத இன்னொரு கூறு. சமூகப் பாகுபாடும் உழைப்புச் சுரண்டலும்.

சிவனணைஞ்சானின் அக்காவும் அம்மாவும் தினக்கூலிக்குப் போகிறவர்கள். அவனது அப்பா கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஈடுபட்டு இளம் வயதில் இறந்து போனவர். சிவனணைஞ்சானுக்கு அம்மாவின் மீதான பாசம் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் உழைப்புச் சுரண்டலுக்கு ஈடுபடுத்தப்படுவதன் மீதான வெறுப்புடன் கலந்திருக்கிறது. வாழைத்தார் சுமப்பது என்பது அவனுக்குக் கொடுங்கனவுகளைக் கொடுக்கிறது. தூக்கத்தில் மூத்திரம் போக வைத்து விடுகிறது.

பசுவை மேய்க்கச் செல்லும்போது தனது நேசத்துக்குரிய ஆசிரியையுடன் செல்வதற்காக பசுவை விட்டுச் செல்ல அது வயலில் புகந்து விட அதன்பேரில் சிவனணைஞ்சான் வீட்டின் முன் ரகளை செய்யும் புரோக்கர். அவன் வாயை அடைக்க காதில் அணிந்திருந்த கம்மல்களைக் கழற்றிக் கொடுக்கும் அம்மா.

வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக புரோக்கரிடம் இருந்து முன்பணம் வாங்கிக் கொண்டு அதற்காகவே சின்னப் பையனையும் வேலைக்குப் போகும்படி கட்டாயப்படுத்தும் அம்மா. அவனுக்கு உழைக்கச் சொல்லித் தருகிறேன் என்று சப்பைக் கட்டுகிறார். சாப்பிடுவதற்குக் கூட நேரம் இல்லாமல் லாரி கிளம்புவதற்கு முன்னர் புறப்பட்டுப் போகும்படி துரத்துகிறார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குழந்தையை கோபத்தோடு அடித்துத் துரத்துகிறார்.

என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டியே என்று இறந்துபோன கணவனின் முன்னால் அழுது புலம்புகிறார்.

பசியில் ஓடிப் போய் வாழைத்தோட்டத்தில் குலை தள்ளிய வாழை ஒன்றைச் சாய்ந்து அதில் பழுத்த பழத்தைச் சாப்பிடும் சிவனணைஞ்சானை எதிர்கொள்ளும் மீசைக்காரர், அவனது ஊர் பெயரைத் தெரிந்து கொண்டதும் இன்னும் தீவிரமாக மொத்துகிறார்.

எ. மாரி செல்வராஜின் சாரம்

அன்பும் நேசமும் காதலும் ஒரு கூறாகவும் தன்மீது சுமத்தப்பட்ட வெறுப்பையும் உழைப்புச் சுரண்டலையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற கோபமும் சமூக அக்கறையும் மறு கூறாகவும் இருப்பவர் மாரி செல்வராஜ்.

அவரது முந்தைய படங்கள் "பரியேறும் பெருமாள்", “கர்ணன்", “மாமன்னன்" ஆகியவை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை வாழ்வியலுடன் இணைத்துக் காட்டின. பிடித்த பெண்ணைக் காதலிக்கும் உரிமை, ஊரில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்று கோரும் உரிமை, நாற்காலியில் உட்காரும் உரிமை என்று இந்து சமூகத்தில் மேல்தட்டினர் நினைத்துக் கூடப் பார்க்கத் தேவையில்லாத அடிப்படை மனித உரிமைகளுக்காக போராட வேண்டியிருந்த நிலைமையை படம் பிடித்துக் காட்டினார்.

வாழை திரைப்படம் அவரது சொந்த அனுபவம். அவரும் அவரது மனைவியும் படத்தைத் தயாரித்திருக்கின்றனர். இது அவரது குழந்தைப் பருவ வலியையும் குற்றவுணர்வையும் பாசத்தையும் கொண்டாட்டத்தையும் நேசத்தையும் காட்டுகிறது.

இதில் ஒரு முதன்மையான கூறு மூலதனத்தின் சுரண்டல்.

ஐ. வாழை படத்தில் மூலதனத்தின் சுரண்டல்

மாரி செல்வராஜ், இல்லை சிவனணைஞ்சான் எதிர்கொள்ளும் சுரண்டல் பொருள் உற்பத்தியின் நீட்சியான போக்குவரத்துத் துறை கூலி உழைப்பில் நிகழும் உழைப்புச் சுரண்டல் தொடர்பானது. வாழை விவசாயத்தின் நெருக்கடிகள், வியாபார ஏற்றத்தாழ்வுகள், வாழை விவசாயத்தின் தன்மை இவற்றில் இருந்து சூக்குமப்படுத்திக் கொண்டு இந்த உழைப்புச் சுரண்டல் மீது கவனத்தைக் குவிப்போம்.

1990களில் இறுதியில் ஒரு வாழைத்தார் சராசரியாக ரூ 6 விலைக்குச் சந்தையில் விற்றது என்று ஒரு தோழர் தரவு சொன்னார். 6 ரூபாய்க்கு விற்கும் ஒரு சரக்குக்கான சுமட்டுக் கூலியாக 1 ரூபாய் கொடுப்பதே நடக்காத ஒன்று. அதற்கு மேல் அதை 2 ரூபாயாக ஏற்றிக் கொடுப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. எனவே, எண் அனுமானங்களை சற்றே மாற்றிக் கொள்ளலாம். இதனை இரண்டு வழிகளில் செய்யலாம்.

மாரி செல்வராஜின் கூலி விவரத்தை உண்மையாக வைத்துக் கொண்டு வாழைத்தாரின் விலையை (மதிப்பை) அனுமானிக்கலாம். அல்லது தோழர் சொன்ன விலையை (மதிப்பை) அடிப்படையாகக் கொண்டு கூலி விவரத்தை மாற்றிக் கொள்ளலாம். முதலில் சொன்னதை முதலில் கணக்கிடுவோம்.

A. 

1. ஒரு வாழைத்தாரின் சந்தை விலை (சராசரி விலை அதாவது அதன் மதிப்பு) - ரூ 25

2. ஒரு லாரி சுமையில் ஏற்றப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை - 300

3. ஒரு தொழிலாளி ஒரு நாளில் சுமந்து செல்லும் வாழைத்தார்களின் எண்ணிக்கை - 30. 10 தொழிலாளிகள் 300 தார்களைச் சுமந்து சென்று ஏற்றுகின்றனர்.

4. ஒரு தாரைச் சுமந்து செல்வதற்கான கூலி ரூ 1. இது பின்னர் ரூ 2 ஆக உயர்த்தப்படுகிறது. (இங்கு கூலி பலன்வீதக் கூலி என்ற வடிவத்தில் தரப்படுகிறது - மூலதனம் நூல், தொகுதி 1, இயல் 20 “கூலி")

வாழைத் தோட்ட விவசாயிக்கு சராசரியாக கூலி உயர்வுக்கு முன்னர் ஒரு தாருக்கு ரூ 16 என்றும் கூலி உயர்வுக்குப் பின்னர் ஒரு தாருக்கு ரூ 14 என்றும் கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.  (கணக்கை எளிமைப்படுத்துவதற்காக கூலி உயர்வு விவசாயிக்குக் கடத்தப்படுவதாக வைத்துக் கொள்கிறோம். அதனை வியாபாரியை எடுத்துக் கொண்டதாக வைத்துக் கொண்டாலும் பெரிய வேறுபாடு இல்லை. அது விவசாயிக்கும் வியாபாரிக்கும் இடையேயான போராட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கூலித் தொழிலாளியின் மீதான சுரண்டலைப் பற்றிப் பரிசீலிக்கும்போது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை).

300 தாரை விற்பதன் மூலம் கிடைக்கும் மொத்த மதிப்பு (சராசரி விலை) - ரூ 7,500/-. 

வாழைத்தாரின் விலை சராசரியைக் குறிக்கிறது. அது சில நேரங்களில் சராசரியை விட (தாருக்கு ரூ 30 அல்லது ரூ 35 வரை போகலாம்) அல்லது சில நேரங்களில் சராசரியை விடக் குறைவாக (தாருக்கு ரூ 15 அல்லது ரூ 20 வரை போகலாம்). இந்த விலை ஏற்றங்கள் ஒன்றையொன்று சரிக்கட்டிக் கொள்கின்றன. எனவே, வாழைத்தாரின் மதிப்பு சராசரியாக ரூ 25 என்று எடுத்துக் கொள்கிறோம்.

ஒரு லாரி நிறைய 300 வாழைத் தார்களை எடுத்துச் சென்று விற்பதற்கான வணிக மூலதனத்தின் செலவுக் கணக்கு

1. வாழை விவசாயிக்குக் கொடுத்தது 

கூலி உயர்வுக்கு முன்னர் = 300 x 16 = ரூ 4,800
கூலி உயர்வுக்குப் பின்னர் = 300 x 15 = ரூ 4,500

2. வாழைத்தாரை சுமந்து சென்று லாரியில் ஏற்றுவதற்கான கூலி 

கூலி உயர்வுக்கு முன்னர் = 300 x 1 = ரூ 300
கூலி உயர்வுக்குப் பின்னர் = 300 x 2 = ரூ 600

3. லாரி வாடகை (ஓட்டுநரின் கூலி, எரிபொருள், தேய்மானம் முதலியன)
ரூ 300 என்று வைத்துக் கொள்வோம்

மொத்த முன்னீடு
கூலி உயர்வுக்கு முன்னர் = ரூ 5,300
வாழை விவசாயிக்கு = ரூ 4,800
சுமை கூலிக்கு = ரூ 300
போக்குவரத்து செலவினம் = ரூ 300 

 கூலி உயர்வுக்குப் பின்னர் = ரூ 5,300
வாழை விவசாயிக்கு = ரூ 4,500
சுமை கூலிக்கு = ரூ 600
போக்குவரத்து செலவினம் = ரூ 300 

வாழைத்தாரை விற்றுக் கிடைக்கும் தொகை = ரூ 7,500
உபரி-மதிப்பு அல்லது இலாபம் = ரூ 2,200/-

இந்த உபரி-மதிப்பு வாழை விவசாயத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் உபரி-உழைப்பாலும், வாழைத்தாரை சுமந்து சென்ற தொழிலாளர்களி்ன உபரி-உழைப்பாலும் ஆனது. இந்த உபரி-மதிப்பை வாழை வியாபாரி வட்டி மூலதனத்துடனும் பிற முதலாளிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம். அது எப்படியிருந்தாலும் தொழிலாளி வர்க்கம் மூலதனத்துக்குக் கொடுத்திருக்கும் உபரித் தொகை ரூ 2,200/-

இதில் ரூ 1,500 வியாபாரி ஈட்டுவதாக வைத்துக் கொள்வோம். இது கூடுவது குறைவது என்பது வியாபாரிக்கும் அவரிடமிருந்து வாழைத் தார்களை வாங்கும் வணிக முதலாளிக்கும் இடையிலான போட்டி தொடர்பானது. கூலித் தொழிலாளி மீதான சுரண்டலைப் பரிசீலிக்கும்போது இதை ஒதுக்கி வைத்து விடலாம்.

வாழைத்தாரைச் சுமந்து சென்ற 10 தொழிலாளிகளும் ஈட்டும் மொத்த வருமானம் - கூலி உயர்வுக்கு முன்னர் ரூ 300 (உழைக்காமல் பேரம் பேசிச் செல்லும் வியாபாரி வைத்துக் கொள்ளும் உபரித் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு 10 தொழிலாளிகளுக்குக் கிடைக்கிறது), கூலி உயர்வுக்குப் பின்னர் ரூ 600 (உழைக்காமல் பேரம் பேசிச் செயல்படும் மூலதனத்தை முன்னீடு செய்யும் வியாபாரி ஈட்டும் உபரித் தொகையில் இரண்டரையில் ஒரு பங்கு 10 தொழிலாளிகளுக்குக் கிடைக்கிறது.) 

ஒரு சுமைத் தொழிலாளி (சிவனணைஞ்சான், வேம்பு, அவர்களது அம்மா போன்றவர்கள்) ஒரு நாளைக்கு ஈட்டும் வருமானம் கூலியுயர்வுக்கு முன்பு ரூ 30, கூலியுயர்வுக்குப் பின்னர் ரூ 60.  இது புல்லட் பைக்கில் வந்து சில்க் சட்டை போட்டுக் கொண்டு பணத்தை முன்னீடு செய்யும் (விசிறியடிக்கும்) வியாபாரி ஈட்டும் வருமானத்தை விட 25 மடங்கு குறைவு (கூலி உயர்வுக்குப் பின்னர், அதற்கு முன்னர் 50 மடங்கு குறைவு).

இது சுரண்டலின், உழைப்பின் சமூக உற்பத்திப் பொருள்கள் உழைக்காத சுரண்டும் வர்க்கத்தினரால் கைப்பற்றப்படுவது பற்றிய ஒரு கணக்கு.

B.  இப்போது இரண்டாவதாக சொன்ன அனுமானம், அதாவது தோழரின் வாழைத்தார் விலை விவரத்தை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் கூலியை அனுமானித்துக் கொள்வோம்.

1. ஒரு வாழைத்தாரின் சந்தை விலை (சராசரி விலை அதாவது அதன் மதிப்பு) - ரூ 6

2. ஒரு லாரி சுமையில் ஏற்றப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை - 300

3. ஒரு தொழிலாளி ஒரு நாளில் சுமந்து செல்லும் வாழைத்தார்களின் எண்ணிக்கை - 30. 300 தார்களை 10 தொழிலாளிகள் சுமந்து செல்கின்றனர்.

4. ஒரு தாரைச் சுமந்து செல்வதற்கான கூலி ரூ 0.25 (25 பைசா). இது பின்னர் ரூ 0.50 (50 பைசா) ஆக உயர்த்தப்படுகிறது.

300 தாரை விற்பதன் மூலம் கிடைக்கும் மொத்த மதிப்பு (சராசரி விலை) - ரூ 1,800/-. வாழைத்தாரின் விலை சராசரியைக் குறிக்கிறது. அது சில நேரங்களில் சராசரியை விட (தாருக்கு ரூ 8 அல்லது ரூ 9 வரை போகலாம்) அல்லது சில நேரங்களில் சராசரியை விடக் குறைவாக (தாருக்கு ரூ 1 அல்லது ரூ 2 வரை போகலாம்). இந்த விலை ஏற்றங்கள் ஒன்றையொன்று சரிக்கட்டிக் கொள்கின்றன. 

வாழைத் தோட்ட விவசாயிக்கு சராசரியாக கூலி உயர்வுக்கு முன்னர் ஒரு தாருக்கு ரூ 3.75 என்றும் கூலி உயர்வுக்குப் பின்னர் ஒரு தாருக்கு ரூ 3.50 என்றும் கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.  

(கணக்கை எளிமைப்படுத்துவதற்காக கூலி உயர்வு விவசாயிக்குக் கடத்தப்படுவதாக வைத்துக் கொள்கிறோம். அதனை வியாபாரியை எடுத்துக் கொண்டதாக வைத்துக் கொண்டாலும் பெரிய வேறுபாடு இல்லை. அது விவசாயிக்கும் வியாபாரிக்கும் இடையேயான போராட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கூலித் தொழிலாளியின் மீதான சுரண்டலைப் பற்றிப் பரிசீலிக்கும்போது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை).

ஒரு லாரி நிறைய 300 வாழைத் தார்களை எடுத்துச் சென்று விற்பதற்கான வணிக மூலதனத்தின் செலவுக் கணக்கு

1. வாழை விவசாயிக்குக் கொடுத்தது 

கூலி உயர்வுக்கு முன்னர் = 300 x 3.75 = ரூ 1,125
கூலி உயர்வுக்குப் பின்னர் = 300 x 3.5 = ரூ 1,050

2. வாழைத்தாரை சுமந்து சென்று லாரியில் ஏற்றுவதற்கான கூலி 

கூலி உயர்வுக்கு முன்னர் = 300 x 0.25 = ரூ 75
கூலி உயர்வுக்குப் பின்னர் = 300 x 0.50 = ரூ 150

3. லாரி வாடகை (ஓட்டுநரின் கூலி, எரிபொருள், தேய்மானம் முதலியன)
ரூ 50 என்று வைத்துக் கொள்வோம்

மொத்த முன்னீடு 

கூலி உயர்வுக்கு முன்னர் = ரூ 1,250
வாழை விவசாயிக்கு = ரூ 1,125
சுமை கூலிக்கு = ரூ 75
போக்குவரத்து செலவினம் = ரூ 50 

கூலி உயர்வுக்குப் பின்னர் = ரூ 1,250
வாழை விவசாயிக்கு = ரூ 1,075
சுமை கூலிக்கு = ரூ 150
போக்குவரத்துச் செலவினம் = ரூ 50 

வாழைத்தாரை விற்றுக் கிடைக்கும் தொகை = ரூ 1,800
உபரி-மதிப்பு அல்லது இலாபம் = ரூ 550/-

இந்த உபரி-மதிப்பு வாழை விவசாயத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் உபரி-உழைப்பாலும், வாழைத்தாரை சுமந்து சென்ற தொழிலாளர்களி்ன உபரி-உழைப்பாலும் ஆனது. இந்த உபரி-மதிப்பை வாழை வியாபாரி வட்டி மூலதனத்துடனும் பிற முதலாளிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம். அது எப்படியிருந்தாலும் தொழிலாளி வர்க்கம் மூலதனத்துக்குக் கொடுத்திருக்கும் உபரித் தொகை ரூ 550/-

இதில் ரூ 300 வியாபாரி ஈட்டுவதாக வைத்துக் கொள்வோம். இது கூடுவது குறைவது என்பது வியாபாரிக்கும் அவரிடமிருந்து வாழைத் தார்களை வாங்கும் வணிக முதலாளிக்கும் இடையிலான போட்டி தொடர்பானது. கூலித் தொழிலாளி மீதான சுரண்டலைப் பரிசீலிக்கும்போது இதை ஒதுக்கி வைத்து விடலாம்.

வாழைத்தாரைச் சுமந்து சென்ற 10 தொழிலாளிகளும் ஈட்டும் மொத்த வருமானம் - கூலி உயர்வுக்கு முன்னர் ரூ 75 (உழைக்காமல் பேரம் பேசிச் செல்லும் வியாபாரி வைத்துக் கொள்ளும் உபரித் தொகையில் நான்கில் ஒரு பங்கு 10 தொழிலாளிகளுக்குக் கிடைக்கிறது), கூலி உயர்வுக்குப் பின்னர் ரூ 150 (உழைக்காமல் பேரம் பேசிச் செயல்படும் மூலதனத்தை முன்னீடு செய்யும் வியாபாரி ஈட்டும் உபரித் தொகையில் பாதி 10 தொழிலாளிகளுக்குக் கிடைக்கிறது.) 

ஒரு சுமைத் தொழிலாளி (சிவனணைஞ்சான், வேம்பு, அவர்களது அம்மா போன்றவர்கள்) ஒரு நாளைக்கு ஈட்டும் வருமானம் கூலியுயர்வுக்கு முன்பு ரூ 7.50, கூலியுயர்வுக்குப் பின்னர் ரூ 15.  இது புல்லட் பைக்கில் வந்து சில்க் சட்டை போட்டுக் கொண்டு பணத்தை முன்னீடு செய்யும் (விசிறியடிக்கும்) வியாபாரி ஈட்டும் வருமானத்தை (ரூ 300) விட 20 மடங்கு குறைவு (கூலி உயர்வுக்குப் பின்னர் - அதற்கு முன்னர் 40 மடங்கு குறைவு).

இது சுரண்டலின், உழைப்பின் சமூக உற்பத்திப் பொருள்கள் உழைக்காத சுரண்டும் வர்க்கத்தினரால் கைப்பற்றப்படுவது பற்றிய இன்னொரு கணக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

21ஆம் நூற்றாண்டு சீனா - ஒரு மார்க்சியப் பார்வை