போட்டி போட்டு வேலை செய்தல்
பல நாட்களுக்குப் பிறகு, பல வாரங்களுக்குப் பிறகு இல்லையில்லை பல மாதங்களுக்குப் பிறகு என்று சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் வேலை செய்யத் தொடங்கியது முதல் அந்த வேலைக்கு வெளியே தன்னிச்சையாக, கட்டாயம் இல்லாமல் எழுதுவதும் தட்டச்சு செய்வதும் அரிதாகிப் போயுள்ளது. ஏதாவது விவாதங்கள் தொடங்கி அதற்குப் பதிலளிக்கும் வகையில் அல்லது ஏதாவது அறிக்கை எழுதுவது என்ற வகையில் எழுதியிருக்கிறேன். நீண்ட கால நோக்கில் அல்லது உடனடியாக தேவையான ஆனால் அவசரம் இல்லாத எதையும் எழுதுவது என்பது நின்று போயிருக்கிறது.
அப்படிப்பட்ட வரிசையில் சீனாவைப் பற்றி எழுதுவது உள்ளது. இந்திய சமூகம் பற்றிய மார்க்சின் பார்வையையும் அம்பேத்கரின் ஆய்வுகளையும் பற்றி எழுத வேண்டியுள்ளது. இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றி எழுத வேண்டியுள்ளது. மூலதனத்தை காத்து நிற்றல் என்ற கட்டுரையை எழுத வேண்டியுள்ளது. லெனினை வாசித்தல் என்ற கட்டுரையை எழுத வேண்டியுள்ளது. இவ்வளவுதானா? இதற்குமேல் நிறைய தொகுக்க வேண்டிய வேலைகள் உள்ளன.
திறந்தநிலை மார்க்சியம் என்ற நூலை மொழிபெயர்ப்பதில்தான் வாழ்வின் இந்தக் காலகட்டம் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நூல்கள் பதிப்பித்து வெளியாகி விட்டன
1. ஜான் ஸ்மித்தின் 21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
2. அதற்கு முன்னதாக முதல் மூன்று நிமிடங்கள்
3. திறந்தநிலை மார்க்சியம் 4 தொகுதிகள்
4. திறந்தநிலை மார்க்சியம் பற்றிய அறிமுகக் கட்டுரை
5. லெனின் பற்றிய ஜினோவீவ் உரை
6. மூலதனம் கற்க முடியுமா? என்ற நூல்
7. Capital in the east நூல் அறிமுகக் கட்டுரை
8. மூலதனத்தை பெயர்த்தல் என்ற கட்டுரை
இவற்றைத் தவிர தொகுப்புப் பணியில்
1. மேற்கத்திய பயங்கரவாதம் குறித்து
2. தாரிக் அலியின் நூல்
3. பிளாஸ்டிக் பற்றிய சிறுநூல்
மொழிபெயர்ப்பில்
1. அம்பேத்கரின் வரலாற்றியல் பற்றிய கட்டுரை
சிறப்புத் தொகுப்புப் பணியில்
1. அம்பேத்கர் நூல் தொகுதிகள்- முதலில் வாழ்க்கை வரலாறு 3 தொகுதிகள், சாதியம் 3 தொகுதிகள், இந்து மதம் 3 தொகுதிகள்
2. அம்பேத்கர் நூல் தொகுதிகள் – சாதியம் 7 தொகுதிகள், இந்து மதம் 3 தொகுதிகள்
3. லெனின் தேர்வு நூல்கள் – 12 தொகுதிகளில்
4. அம்பேத்கர் நூல் தொகுதிகளுக்கு முன்னட்டை பின்னட்டை ஒவ்வொரு தொகுதி பற்றியும் குறிப்பு
5. முன்னர் எழுதிய பதிப்புரை, உருவாக்கக் குறிப்புகள்
இந்த வகையில் பேராசிரியரின் அணுகுமுறை மிகவும் வியப்பாகவும் போற்றத்தக்கதாகவும் உள்ளது. ஒரு வேலையைச் செய்யச் சொல்கிறார். அது சரியாக வந்து விட்டால் அதை ஊக்குவிக்கிறார். அது சொதப்பலாக இருந்தால், அதைத் தானே எடுத்து செய்து விடுகிறார்.
அப்படித்தான் சாதியம் பற்றிய கட்டுரையை எழுதினார். அது என்னிடமிருந்து அவருக்குத் திரும்பிப் போகவில்லை, அவரே அந்த வேலையை எடுத்துக் கொண்டார்.
நபர்களின் உளவியல் பற்றி ***** பேசினார். தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகம் வெளியிட்ட எட்டுத் துறையிலான உளவியல் நூல்களைப் படித்தாராம். கல்வியல் உளவியல், கட்சியில் உளவியல், சமூக உளவியல், திருமண உளவியல், தனிமனிதர் உளவியல், தொழிற்சாலை உளவியல் என்று பல்வேறு துறைகளையும் அதில் பேசியிருக்கிறார்களாம்.
அதுபோல ஒவ்வொருவரையும் தனித்துவமான மனிதராக புரிந்து கொள்ள வேண்டியது தேவையாக உள்ளது. *** என்னைப் போலவே சிந்திக்கவில்லை, அவளது மனக் கட்டமைப்பு என்னுடையது போல இருக்கவில்லை என்பதை முதலில் ஏற்க வேண்டும். உதட்டளவில் இவ்வாறு ஏற்றுக் கொண்டாலும் அதை ஆழமாக உள்ளத்தில் பதிந்து கொள்வதற்கு இன்னும் இடர்நிறைந்த முயற்சிகள் தேவைப்படும்.
எப்படியானாலும், ஒவ்வொரு தனிமனிதரும் தமக்கே உரிய எண்ணப் போக்கைக் கொண்டுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மிகவும் தன்னலமாக இருக்கிறேன் என்று தோன்றுகிறது. விமர்சனமாக, அகப்பட்டு விடாதவரை அனுபவிப்போம் என்ற போக்கு இருந்திருக்கிறது, நெருக்கடி ஏற்படாதவரை வேலை செய்யத் தேவையில்லை என்ற போக்கு வலுவாக இருக்கிறது.
நெருக்கடி என்பது உடனடி நெருக்கடி. அதே போல சொன்ன சொல்லுக்கும் செய்த செயலுக்கும் பொறுப்பேற்பதில் தயக்கம் உள்ளது. முதன்முதலில் ஜெ.தீபா பற்றிய ஒரு மதிப்பீட்டைச் சொன்னேன். அதற்கு என்னை நானே பரிசீலித்துக் கொண்டேனா என்று நினைவில்லை. அரைகுறை விவரங்களில் இருந்து நானே ஒரு முடிவுக்கு வந்து விடுவது என்ற இன்னல் என்னிடம் உள்ளது. இது தொலைநோக்குடையதாக இருக்கும்போது அதை மக்கள் அறிந்து விடுவதற்கு கணிசமான காலம் பிடிக்கிறது. அதற்குள் சேதங்கள் விளைக்கப்பட்டு விடுகின்றன.
சென்ற வார இறுதியில் சாம்சங் தொழிலாளர் போராட்டம் பற்றி. போராட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள் என்ற செய்தியை சொன்னபோது எரிச்சலடைந்தேன். அவரது அப்பா மீது உள்ளுக்குள் கோபமும் பட்டேன். அதன்பிறகு தொலைபேசியபோது அவர் சோம்பலின் காரணமாக சொல்கிறார் என்று கற்பித்துக் கொண்டேன். என்னுடைய விருப்பத்துக்கு அல்லது எதிர்பார்ப்புக்கு மாறாக நடைமுறை இருக்கும் போது அதை மறுத்துக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு, போராட்டக் களத்தை கலைத்து விட்டார்கள், போராட்டத்துக்கு விடுப்பு விட்டார்கள் இனிமேல் போராட்டம் தொடங்காது என்று கதறினேன். அது கூட என்னுடைய முந்தைய நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், நேற்று மறுபடியும் போராட்டம் தொடங்கி விட்டது. இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஏன்? தொழிலாளர்களின் போராட்ட உணர்வைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறேன். இவ்வளவுதூரம் தீவிரமாக போராடிய பிறகு பணிந்து பணிக்குத் திரும்பினால் பணிச்சூழல் படுமோசமாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதற்கு எதிராக சொந்தக்காரர்களும் நண்பர்களும் சொல்வதற்கு எப்படி செவிகொடுப்பார்கள். தொழிலாளி என்ற பந்தத்தை விட பிற சமூக பந்தங்கள் வலுவானவை என்ற என்னுடைய ஆழ்நம்பிக்கையில் இருந்து அந்தக் கருத்து வந்தது.
தொழிலாளி என்ற பந்தத்தின் வலுவை மார்க்சியம் பேசுகிறது. இப்போது மார்க்சியம் உலகைப் பற்றிச் சொன்ன பொதுமைப்படுத்தல்களை நிராகரித்து அம்பேத்கரின் குறிப்பான ஆய்வுகளைத் தூக்கிப் பிடிப்பதும் இதுபோன்ற முக்கியமான கூறுகளை கவனிக்கத் தவறியிருப்பதுதானா? இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதையும் மறுபரிசீலனை செய்து நிராகரித்து விடுவேனா?
லெனின் போன்ற ஒருவருக்கு எப்படி அந்தத் தீர்மானமான உறுதிப்பாடு கிடைத்தது? மார்க்சியத்தின் அடிப்படைக் கருதுகோள்கள் – ஐவகை சமூக அமைப்புகள், அதற்கு இந்தியாவும் விதிவிலக்கில்லை என்பதுதான் பொதுவான போக்கு. அதிலும் குறிப்பாக மதத்தின் பாத்திரம் பற்றிய பார்வை அங்கு தெளிவானது. மதம் என்பது மக்களை அடிமைப்படுத்துவதற்கு ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் பயன்படுத்தும் கருவியே. எனவே, மதத்தை மறுப்பது கம்யூனிஸ்டின் கடமையாக உள்ளது. லெனின் சோசலிசமும் மதமும் என்ற கட்டுரையில் இதைப் பற்றிப் பேசுகிறார்.
சரியான பாதையில்தான் போகிறோம் என்பது தோழர் பேசியது, தோழர் பேசியது, இன்றைக்கு தோழர் பேசியது ஆகியவை உறுதி தருகின்றன. பாராட்டிப் பேசினார், நிறைய வேலைகளைச் செய்கிறேன் என்று அவருடைய பாராட்டைச் சொன்னார். அதை அவருடைய பாணியில் குறைசொல்லும் போக்கில்தான் சொன்னார் என்றாலும் அதுதான் நிலைமை.
ஆனைமலை ஐயா எப்படி சிந்தனையாளன் இதழுக்கான அனைத்துப் பக்கங்களையும் இரவில் கண்தூங்காமல் எழுதி முடிப்பார் என்று மதிவாணன் சொன்னார். அது போன்ற கடப்பாடும் பற்றுறுதியும் கொண்டு எழுதி முடிப்பது எனக்கு ஏன் வர மாட்டேன் என்கிறது?
நிறைய படிக்கிறேன், நிறைய எண்ணிப் பார்க்கிறேன், நிறைய பேசுகிறேன், அவற்றைத் தொகுத்து எழுத வேண்டியது என்ற அளவில் உள்ளடக்கம் போதுமான அளவு உள்ளது. ஆனால், நம்முடைய கருத்துக்களின் குவியலாக ஆகிவிடுமோ போதுமான தகவல்களும் தரவுகளும் இருக்காதோ, அதை கற்றறிந்த சான்றோர் மதிக்க மாட்டார்களோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே, எழுதிக் கொண்டிருக்கும் போதே திசைமாறி தரவுகளை தகவல்களை மேற்கோள்களை தேடும் போக்கு உள்ளது. அங்கு போனால் அத்தோடு கவனம் திசை திரும்பி விடுகிறது.
மூலதனத்தைப் பெயர்த்தல் என்ற கட்டுரைக்கு பல மாதங்களாக விவரங்களைத் திரட்டி வைத்திருந்தேன். கிழக்கில் மூலதனம் என்ற நூலுக்கு மதிப்புரை எழுதியபோதே இதையும் எழுதி முடித்திருந்தேன். அப்போது செய்த வேலைகள் வெளியிடுவதற்கு நிலுவையில் இருப்பவை என்று கொடுத்ததில் அந்தக் கட்டுரை வெளியானது. இது இருந்து விட்டது.
இங்கு முன்முயற்சிகள் எடுப்பது தேவையாக உள்ளது. அதுவும் இப்போது நான் இருக்கும் இடத்தில் நிறைய முன்முயற்சிகள் எடுக்கலாம். அதன்மூலம் நிறைய நூல்களைக் கொண்டு வரலாம். குறிப்பாக மார்க்சிய நூல்களைக் கொண்டு வரலாம். அதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போதும் போய் அந்தக் கோப்பைத் திறந்து பார்க்க வேண்டிய தேவை இல்லை. முக்கியமான தன்னெழுச்சியாக எழுதுவதற்கும் தரவுகள் சார்ந்து எழுதுவதற்கும் உள்ள முரண்பாட்டைத் தீர்க்க வேண்டும்.
லெனின் கட்டுரையைப் பொறுத்தவரையில் தன்னெழுச்சியாக எழுதி விட வேண்டும். அதன் பிறகு விவரங்களைச் சேர்க்கலாம். விவர ஆதாரங்களைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை வரலாற்றில் முதன்மை நாட்கள் என்ற பட்டியலை எடுத்துக் கொள்ளலாம். ஜினோவீவின் உரையை எடுத்துக் கொள்ளலாம். அதே போல டிராட்ஸ்கியின் நினைவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றை எல்லாம் மொழிபெயர்க்கத் தேவையில்லை.
லெனினை ஏன் வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்ற கட்டமைப்புக்குள் சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சொல்லி விட்டு அவற்றை தாங்கிப் பிடிக்கும் வகையில் லெனினின் சொந்த மேற்கோள்களையும் ஜினோவீவ், டிராட்ஸ்கி, வாழ்க்கை வரலாற்று விவரங்களை இணைக்கலாம்.
சொல்லப் போனால் லெனினின் வாழ்க்கைக் குறிப்புகளை மொழிபெயர்ப்பதற்குக் கூட ஏற்பாடு செய்யலாம். அதையும் ஒரு தனிநூலாக வெளியிடலாம். அது ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் இருக்கும். தமிழில் 300 பக்க நூலாக வரலாம். அதை விவரித்து விரித்து எழுதலாம். 200 பக்கங்களை எழுதுவதற்கு 10 நாட்கள் இருந்தால் போதும்தான். முன்மொழிவுகளில் அதையும் சேர்க்கலாம்.
லெனின் கட்டுரையைப் பொறுத்தவரை இதுதான். அதே போல மூலதனத்தை காத்து நிற்றல் என்ற கட்டுரைக்கும் இதே போன்ற அணுகுமுறையைக் கையாள வேண்டும். குழந்தைக்கு நடைவண்டி என்பதையே கொள்கையளவில் எதிர்த்திருக்கிறேன். நடைவண்டி கூடாது என்பதே கசப்பாகத்தான் இருந்தது. எனக்கு அந்தத் தர்க்கம் சரியாகப் பட்டது. தனது வயதுக்கு அப்பாற்பட்ட ஒரு கருவியை கையாளும் பக்குவம் இல்லாத குழந்தைக்கு விபத்துகளும் காயங்களும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் அந்தத் தர்க்கம்.
நடைவண்டியைப் போலவே சைக்கிளை எதிர்க்கலாம், மோட்டார் வண்டியை எதிர்க்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும்போது அவற்றின் ஆற்றலையும் அதனால் ஏற்படக் கூடிய இடர்களையும் பற்றிய புரிதலைப் பெறும் பக்குவம் வந்திருக்கும். இரண்டு மூன்று வயது குழந்தைக்கு அப்படிப்பட்ட தெளிவும் அறிவும் இருப்பதில்லை என்பதால் அது சரிதான்.
என்னைப் பொறுத்தவரை எழுத்து என்பது தமிழ்ப்படம் சிவா நாட்டியம் ஆடி குரங்கு பிடிப்பதைப் போலத்தான். எனக்கு அந்த ஒழுங்கு வரவில்லை. அதை மிகவும் வதையுடன்தான் செய்கிறேன். எல்லோருக்கும் அந்த நிலைமைதான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எதுவும் கவனக்குவிப்பு இல்லாமல் மூளையை வருத்தாமல் வந்து விடுவதில்லை. அதற்கு குறிப்பிட்ட நேரம் உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது.
தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரையில் தொலைபேசி அண்ணனைப் போய் பார்த்து விடு என்கிறான். தனிப்பட்ட கசப்புகளை அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் என்ன வந்து பார்த்தவர்கள் எத்தனை பேர்? ஒரு முறை வந்திருக்கிறார், ஜாஃபர்கான் பேட்டை வீட்டுக்கு. வேலூரில் ஒருமுறை வந்திருக்கிறான். வேறு யாரும் எட்டிக்கூடப் பார்த்ததில்லை.
எல்லோரும் தொலைபேசியில் முடித்துக் கொள்கிறார்கள். நான் அவர்களது வீட்டில் உறவுக்கும் சோத்துக்கும் ஏங்கி நிற்கும்படி அழைக்கிறார்கள். வாழாவெட்டியான ஒரு உறவைப் பராமரிப்பது என்ற கண்ணோட்டத்தில்தான் நடத்துகிறார்கள். நான் ஏன் அங்கு போக வேண்டும்.
ஒருமுறை 2019இல் தனியாக இருக்கிறாள் என்று அவர்களது அய்யப்பன்தாங்கல் வீட்டுக்குப் போய் தங்கும்படி அம்மா அனுப்பி வைத்தாள். அதற்குப் பிறகுதான் அம்மாவின் இறப்பு ஏற்பட்டதா என்ன? அப்படித்தான் தெரிகிறது. இல்லையே அம்மா இறந்தபோது மா.அ.கவில்தானே இருந்தேன். அப்போது காலையில் மூலதனம் வாசிப்புக்குப் போவது தொடங்கியிருக்கவில்லையே.
எனவே, இவர்களது பாசமெல்லாம் மேல்பூச்சுக்குத்தான். அதற்காக என்னால் உழைக்க முடியவில்லை. அல்லது நான் உழைப்பதை அவர்கள் taken for granted ஆகக் கொள்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதை நான் செய்வதில்லை, நான் எதிர்பார்ப்பதை அவர்களால் செய்ய முடியவில்லை.
இரண்டாவதாக, கொள்கை சார்ந்தது. கொள்கை சார்ந்து என்றால் எனது பணி தொடர்பானது. எனது எண்ணங்களை எதனோடு பிணைத்துக் கொள்வது எனது எண்ண ஆற்றலை எதற்காக செலவிடுவது என்ற அடிப்படையும் அதில் இருக்கிறது. மிகவும் உறுத்துவது நடத்தியதுதான். அந்தப் பையன் அறையை சமைத்து சாப்பிட்டு தூங்கி இருப்பதற்கான சொர்க்கமாக எடுத்துக் கொண்டு விட்டான். எனக்கு அவன் தங்குவதற்கு மட்டும் இதைப் பயன்படுத்திக் கொண்டு படிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் வெளியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து. இதற்கு இடையே மோதல். மேலும் எனக்கான இடத்தை நான் பெறமுடியவில்லை.
எனக்கு யாராவது ஒருவர் நடமாடுவதே எரிச்சலூட்டுவதாக ஆகிறது. அது ஆகவில்லையே! ஏன் ஆனது? தெரியவில்லை. அவர்களது முதிர்ச்சியின்மையா? தெரியவில்லை.
இப்போது என்னைப் புண்படுத்தினார். அதற்காக அவர் வருந்தியதாகவும் சொல்லி விட்டார். அவருக்குச் சிக்கல் அல்லது சிக்கல் நான் அளவுக்கு மீறி அக்கறை எடுப்பதுதான். அப்படி என்றால் நான் அக்கறை எடுக்காமலேயே இருந்து விடுகிறேன் என்று இருக்கிறேன். ஆனால் மனம் கேட்க மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறது, திசை திருப்பிப் போய் விடுகிறது.
நூல்களை அனுப்புவது, அம்பேத்கர் வேலை, அணிந்துரைகள் எழுதுவது, pod எடுக்க அனுப்புவது, இந்து மதத்தின் புதிர்களை படித்து சரிபார்ப்பது எல்லாம் காத்திருக்கட்டும்.
ஓய்வுநாள் என்ற ஒன்றே தேவையில்லாத ஓர் ஆணி. டாடா தேவாசில் வேலை செய்தபோது விடுப்பு எடுத்ததே இல்லை. காலை முதல் இரவு வரை வேலை செய்துகொண்டே இருக்கத் தயாராக இருந்தேன். குறிப்பாக ஐ.எஸ்.ஓ ஆவணப்படுத்தல் வேலைகளின் போது அது நடந்தது. அந்தக் கணினியும் இழுத்து இழுத்து வேலை செய்துகொண்டிருந்தது.
ஒருவகையில் இந்த core dump முறையும் கூட எழுதுவதற்கு வசதியில்லாமல்தான் செய்கிறது. சிந்தனை சிதறடிப்பதை முறைப்படுத்தி கெட்டிப்படுத்தி விடுகிறது. எழுதுவது என்றால் முறையாக ஒழுங்காக எழுத வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைக்கிறது. ஏற்கனவே இல்லாத ஒன்றை எப்படி உடைக்க முடியும். அந்தக் கட்டுப்பாடே இல்லாத எழுத்தாளன் நான். இதுவரை அப்படி எழுதியிருக்கிறேனா என்றால் அதை மனப்பாடம் செய்து எழுதிய போதும், மொழிபெயர்ப்புகளின் போதும் செய்திருக்கலாம். ஒரு படைப்பூக்க செயல்பாட்டில் அத்தகைய ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பின்பற்றியதில்லை, வெளிப்படுத்தியதில்லை.
ஒரு கட்டுரை என்றால் அதற்கான தொடக்கம், அதற்கான முடிவு, அதற்கான உள்ளடக்கம் என்று பிரித்துக் கொள்வோம். அந்த உருவரையை முதலில் எழுதிக் கொள்ளலாம். அதன்பிறகு நேர்கோட்டில்தான் எழுத வேண்டும். இறுதிவரை எழுதி முடிக்க வேண்டும் தொடக்கத்தில் தொடங்கி உள்ளடக்கத்தை முடித்து விட்டு இறுதியை வந்தடைய வேண்டும். முன்னும் பின்னும் போவது ஒழுங்கின்றி எழுதுவது எதையும் அனுமதிக்கக் கூடாது. நாம் எழுதும் இந்த வாக்கியம் அப்படியே அச்சுக்குப் போகிறது, அது முந்தைய வாக்கியத்துடன் பிணைய வேண்டும். ஒவ்வொரு பத்தியும் முந்தை பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் அடுத்தப் பத்திக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். வாக்கியங்களின் நீளத்தை ஏற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பொருத்தமான திசைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். முதுமொழிகள், மேற்கோள்கள், சிறு கதைகள், நினவுப் பதிவுகள், செய்திகள் இவற்றை ஆங்காங்கே சொல்ல வேண்டும். வாசகரை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
தலைப்பு
தொடக்கம் – 2 பத்தி
உடல் – 10 பத்திகள்
முடிவு – 2 பத்திகள்
என்று திட்டமிடலாம்.
தலைப்பு : லெனினை வாசித்தல்
தொடக்கம் : இந்தக் கட்டுரையை இப்போது ஏன் எழுதுகிறேன், யாருக்காக எழுதுகிறேன், இதைப் படிப்பதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கும்
உடல் : லெனினை ஏன் வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றி 4 பத்திகள். லெனினை எப்படி வாசிக்க வேண்டும் என்பதில் அவரது ஆங்கில தொகுதி நூல்களைப் பற்றி 4 பத்திகள், தமிழ் தேர்வு நூல்களைப் பற்றி 4 பத்திகள், நூல் திரட்டு பற்றி 4 பத்திகள், தனிநூல்கள் பற்றி 4 பத்திகள். மொத்தம் 16 பத்திகள் என்று வைத்துக் கொள்ளலாம்.
முடிவு: இந்தக் கட்டுரை தனக்கு விதித்துக் கொண்ட நோக்கத்தை நிறைவேற்றியுள்ளதா? இதை வாசகர் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம். இது போன்ற இன்னும் பல அறிமுகங்களை செய்யவிருக்கிறேன்.
உலகைக் குலுக்கிய 10 நாட்கள் என்ற நூலில் காவல் நிற்கும் காவலர் லெனினைப் பற்றிச் சொன்னதை குறிப்பிடலாம். லெனினின் அறிவுப்புலமை குறித்த ஜினோவீவின் இரண்டு குறிப்புகளையும் சேர்க்கலாம்.
100 சொற்கள் அறிமுகம். 200 சொற்கள் முடிவு. மீதி 4,700 சொற்கள் உள்ளடக்கம்தான். அதில் லெனினின் சாதனைகள் பற்றியும் சோவியத் ஒன்றியம் என்ற விந்தையைப் பற்றியும் எழுத வேண்டும். மேலும், லெனினின் எழுத்துக்கள் பற்றிய அறிமுகத்தில் சொந்த அனுபவத்தையும் அணுகுமுறையையும் குறிப்பிட வேண்டும். மார்க்சின் மூலதனத்தோடு ஒப்பிட வேண்டும்.
மாணவனுக்கு எழுதுவது போல இதை எழுத வேண்டும். இப்போதைக்கு இதுதான். இன்றைக்கு மாலை வரையில் இதுதான் நோக்கம். இதில் இலக்கியத் தரம் இருக்கிறதா, தரவுகள் இருக்கிறதா, சான்றோர் போற்றுவார்களா இதையெல்லாம் பற்றிக் கவலையில்லை. 5,000 சொற்கள் எழுத வேண்டும். அது ஒரு கட்டுரைக்கான வடிவத்தைப் பெற வேண்டும். அதை ஒழுங்குடனும் கட்டுப்பாடுடனும் எழுத வேண்டும். அதுதான் வேலை.
இன்னும் நேரம் இருக்கிறது என்றால் எழுதிக் கொண்டே போக வேண்டியதுதான். அதே போல மார்க்சின் மூலதனத்தை காத்து நிற்றல் பற்றியும் எழுதி விட வேண்டும். 3 மணி நேரத்தில் 5,000 சொற்கள் என்றால் புதன், வெள்ளி, சனி மாலை நேரங்களில் 7 மணி முதல் 10 மணி வரையிலும், திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் எழுதலாம். கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக் குவித்து விடலாம்.
அதை உருப்படியாகச் செய்வதுதான் உன் வேலை. cpclஇல் இரவுப் பணியில் பராமரிப்பு வேலை செய்து வருபவருடன் போட்டிபோட வேண்டாமா? அதைச் செய்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக