புறநிலை - கருத்து

 (1) திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் "நம்பிக்கை" "ஒளி" என்று கருத்துமுதல்வாதம். செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் "புறநிலை மட்டுமே, அகநிலையின் பங்களிப்பே இல்லை" என்ற இயக்க மறுப்பியல் இயந்திரகதியான பொருள்முதல்வாதம். 

இப்படி சிந்திப்பது போலத் தெரிகிறது. அதில் வியப்பில்லை.

உண்மையில் கருத்துமுதல்வாதமும் இயந்திரகதியான பொருள்முதல்வாதமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்கிறார் மார்க்ஸ் (ஃபாயர்பாஹ் பற்றிய முதல் ஆய்வுரையில், தேர்வுநூல்கள் தொகுதி 1, பக்கம் 7).

(2) . "ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும் [இப்போதும் தொடரும்] அனைத்துப் பொருள்முதல்வாதத்தின் குறைபாடு இதுதான்: பொருள் (Gegenstand) எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருள் (Object) அல்லது சிந்திப்பு (Anschanung) என்னும் வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், மனிதப் புலணுர்வுள்ள நடவடிக்கை என்று நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை, அகநிலையாகக் கொள்ளப்படவில்லை. [அகநிலையாக என்பதில் அழுத்தம் சேர்க்கப்பட்டது]

எனவே, பொருள்முதல்வாதத்துக்கு நேர் எதிரான நிலையில் கருத்து முதல்வாதம் செயலூக்கமுள்ள பகுதியை வளர்க்க நேர்ந்தது. ஆனால் கருத்தியலாக மட்டுமே இதைச் செய்தது. ஏனெனில் கருத்துமுதல்வாதம் எதார்த்தமான புலனுர்வுள்ள நடவடிக்கையை அறியாது."

(3). "ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே" என்று மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதியது ஒரு கருத்தியல். அதுவரை உலக வரலாற்றில் நடந்தவற்றுக்கெல்லாம் ஆளும் வர்க்கங்கள் தமது சுரண்டலை நீடித்து நடத்துவதற்காக அளித்த விளக்கத்தில் இருந்து மாறுபட்ட (அதே வரலாறுதான், அதே தரவுகள்தான்) உழைக்கும் வர்க்கக் கருத்தியலை முன் வைத்தது கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் எங்கெல்சின் மகத்தான பணி. 

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, வர்க்கப் போராட்டத்தை நடத்தியது தொழிலாளர்களும் அதற்கு முன்னர் பிற உழைக்கும் மக்களும்தான் மார்க்சும் எங்கெல்சும் எழுதியதால் என்ன ஆச்சு?"  என்று சொல்வது இயந்திரகதியான, இயக்கமறுப்பு பொருள்முதல்வாதம்.

மார்க்சும் எங்கெல்சும் முன்வைத்த கருத்தியல் உழைக்கும் வர்க்கத்துக்கான போராட்ட அரசியல் அடித்தளத்தை உருவாக்கி உலக வரலாற்றையே மாற்றியமைத்தது (போராட்டங்கள் அதற்கு முன்னும் நடந்து கொண்டிருந்தன).

லெனினின் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடு, மாவோவின் புதிய ஜனநாயகப் பற்றி என்ற கருத்தாக்கம் இவை அனைத்துமே புறநிலையைப் பற்றிய கருத்தியல் ஆக்கங்கள், அவை மக்களைப் பற்றிக் கொண்டு புரட்சிகரச் சக்தியாக மாறின. 

(4) இந்தியாவில் (இன்றைய பாகிஸ்தானில், வங்கதேசத்தில்) தொழிலாளர்கள் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அவற்றைப் பற்றி ஆளும் வர்க்கத்தின் சனாதன பார்வையில் கருத்தியலாக பரப்பிக் கொண்டிருந்தது, சுரண்டல் வர்க்கத் தரப்பு. "சுரண்டல் நியாயமானது, அது தலைவிதி" என்ற கருத்தியல் ஆதிக்கம் செலுத்தியது. 

அதை உடைப்பதற்கான ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக போராட்டக் களத்திலும் அரசியல் அரங்குகளிலும் கருத்தியல் தளத்திலும் 25 ஆண்டுகள் போராட்டத்தைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் உருவாக்கியது அரசியலமைப்புச் சட்டம்.

அந்த அரசியலமைப்புச் சட்டம் இந்திய உழைக்கும் மக்களை (தீண்டப்படாத மக்களை, பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரை) ஒடுக்கிச் சுரண்டும் சனாதன நால்வருணக் கட்டமைப்புக்கு எதிராக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விழுமியங்களை சட்டமாகச் செய்கிறது. அதில் முதன்மையான ஓர் உரிமை, சங்கம் வைக்கும் உரிமை.

இப்படி ஒரு அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் இராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்று வரலாற்றில் பயணித்த நாடுகளோடு (அங்கும் போராட்டங்கள் நடந்தன) ஒப்பிட்டால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, புறநிலைப் போராட்டம்தான் எல்லாமே (முதலும் முடிவும்)" என்று சொல்பவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை மறுக்கிறார்கள். அவர்கள், பொருள் என்பதை "மனிதப் புலணுர்வுள்ள நடவடிக்கை என்றும் நடைமுறை என்றும் கொள்வதில்லை, அகநிலையாகக் கொள்வதில்லை"

எனவே, கருத்தியல் போராட்டத்தை வெறும் கருத்தாகச் சுருக்குகிறார்கள். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கைவிடுகிறார்கள்.

வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் (உலகெங்கிலும்) சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு முன்தேவை ஜனநாயகம், அது முதலாளித்துவம் அல்லாத அதற்கு முந்தைய பழம் கருத்தியல்களுக்கு எதிரான அரசியல் அமைப்பை முன்வைக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்துக்குத் தேவையான நிபந்தனைகளை உருவாக்குகிறது. அதுதான் புதிய ஜனநாயகம் அல்லது மக்கள் ஜனநாயகம் அல்லது தேசிய ஜனநாயகம் என்று கம்யூனிஸ்ட் கட்சித் திட்டங்களில் குறிப்பிடப்படுகிறது. 

இந்த ஜனநாயக உரிமைகளில் ஒன்று சங்கம் வைக்கும் உரிமை, அதை முன்வைத்து சாம்சங் தொழிலாளர்கள் சரியாகப் போராடுகிறார்கள். அந்த உரிமையை உருவமற்றதாக, தெளிவற்றதாக சிதைத்து, போராட்டம்தான் எல்லாம் என்று சொல்பவர்கள் தொழிலாளி வர்க்க அரசியலில் உணர்வின் பாத்திரத்தை மறுக்கிறார்கள். தன்னெழுச்சிக்கு வால் பிடிக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்