அண்ணல் அம்பேத்கரை மறுக்கும் மரபு

 அண்ணல் அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிதான் கருத்து வேறுபாடு என்று தெளிவாகச் சொன்னதற்கு நன்றி. இந்தியாவின் சமூகப் புறநிலை எதார்த்தத்தை ஆய்வு செய்யாமல் வறட்டுத்தனமான ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று முன்னெடுக்கும் அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் மரபு இது.

இந்திய மக்கள் மீது இரண்டு பெரும் மலைகள் அழுத்திக் கொண்டிருந்தன (இன்றும் அழுத்திக் கொண்டுள்ளன). இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஒன்றைப் பயன்படுத்தி மற்றொன்று சுரண்டலை நடத்துகின்றது.

ஒன்று மூலதனத்தின் சுரண்டல், இன்னொன்று சனாதன இந்து மதத்தின் அடக்குமுறையும் சுரண்டலும். பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் ஏகாதிபத்திய மூலதனத்தின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் நிலவுடைமையாளர்கள், முதலாளிகளின் தரப்பு (திலகர், காந்தி, மாளவியா, இந்து மகா சபை) சனாதன இந்து மதத்தின் சுரண்டும் தரப்பின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தியது.

சனாதன இந்து மதம் இந்திய மக்களில் நான்கில் ஒரு பகுதியினரை தீண்டப்படாதோர் என்று ஒதுக்கி வைத்து வாழ்வுரிமைகளை மறுத்தது, இந்துக்களில் நான்கில் மூன்று பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரை சூத்திரர் என்று இழிவுபடுத்தி கல்வியையும் அரசியல் உரிமைகளையும் மறுத்தது. இந்தப் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சமூகரீதியாகச் சுரண்டியது/சுரண்டுகிறது. மேலும், இஸ்லாமியர்களை பகைவர்களாகக் கட்டமைத்து மதக் கலவரங்களை நடத்திக் கொண்டிருந்தது (நடத்திக் கொண்டிருக்கிறது).

சனாதன விடுதலைப் போராட்ட வீரர்கள், "ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றுவோம், அதே நேரம் சனாதன இந்து மதத்தை காத்து நிற்போம், அதன் மூலம் தமது சமூகப் படிநிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்" என்ற கொள்கை நிலைப்பாட்டை வைத்திருந்தார்கள்.

"ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற வேண்டும், ஆனால் அதிகாரம் சனாதனிகளின் கையில் போகக் கூடாது, சுதந்திர இந்தியாவில் தீண்டப்படாதோராக சுரண்டப்படும் மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் சட்டப் பாதுகாப்புகள் வேண்டும்" என்று போராடியது உழைக்கும் மக்களின் தரப்பு. அந்தத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர். சுதந்திரம் (ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமில்லை, பார்ப்பன பனியாக்களிடமிருந்தும்) சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படைகளைக் கொண்ட ஜனநாயகத்தை சனாதனத்துக்கு எதிரான ஆயுதமாக, இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவையாக வைத்து அண்ணல் அம்பேத்கர் போராடினார். 

ஆங்கிலேய அரசு அதிகாரத்திலும் கல்வி வேலை வாய்ப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் பார்ப்பன பனியா சாதியினர். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் அவர்களது தலைமை ஆதிக்கம் செலுத்தியது. அதை எதிர்த்த அண்ணல் அம்பேத்கரின் போராட்டம், முதலாளித்துவத்துக்கு முந்தைய அவர்களது சுரண்டல் அமைப்புகளை முறியடிக்க ஆங்கிலேய சட்ட வாய்ப்புகளைக் கூட பயன்படுத்திக் கொண்டது. அது மட்டுமின்றி களத்திலும் கருத்தியல் தளத்திலும் ஆய்வுகள் மூலமாகவும் நீண்ட போராட்டத்தை நடத்தினார், அண்ணல் அம்பேத்கர்.

அந்தப் போராட்டத்தின் விளைவே இந்திய அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டமாக மனு தரும சாஸ்திரத்தைக் கொண்டு வருவதுதான் சனாதனிகளின் உள்ளக் கிடக்கை என்பதை இந்து சட்டத் தொகுப்பு பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் பார்க்கலாம். அதை முறியடித்தது அண்ணல் அம்பேத்கரின் போராட்டம்.

அண்ணல் அம்பேத்கர் இந்தியாவில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் மகத்தான தலைவர், இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவை என்ற அடிப்படையில் அதை முன்னெடுத்த அரசியல் கோட்பாட்டுத் தலைவர். இதைப் புரிந்து கொள்ளாத அரசியல் மரபை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இன்றுவரை சமூகத்தில் நடக்கும் போராட்டங்களில் இருந்து துண்டித்துக் கொண்டு நிற்கும் அரசியல் மரபு அது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் - பௌத்தம்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்