வி.சி.க - இளம் கம்யூனிஸ்ட் கழகம்: பதில்
1. YCL குழுவா இல்லை புழுவா என்று கேட்டிருக்கிறீர்கள். YCL ஒரு குழு, இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சிக்காக பணியாற்ற விழையும் ஒரு குழு. அந்தப் பணி ஒரு புழுவின் பணியைப் போன்றது என்பது சரியான உவமானம் என்று தோன்றுகிறது. ஒரு மண்புழு எப்படி உழவருக்கு உதவுகிறதோ அதே போல இந்திய மண்ணில் புரட்சிப் பயிர் தளைத்து வளர மண்ணைக் கிளறும் மண்புழுவாக இருப்பதில் YCL-க்கு மறுப்பு இல்லை.
2. தோழர் திருமாவளவன் தன்னுடையை கட்சியை வளர்த்திருப்பதால் அவர் பின்னால் போய் வி.சி.கவின் கம்யூனிஸ்ட் அணியாகச் செயல்பட முயல்வதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மக்கள் மத்தியில் போய் வேலை செய்ய திராணியில்லை என்கிறீர்கள்.
முதலாவது பாதி உண்மை, இரண்டாவது முழுக்கப் பொய்.
இளம் கம்யூனிஸ்ட் கழகத்தில் உள்ள தோழர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வதில் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து செயல்பட்டவர்கள், செயல்படத் தயாராக இருப்பவர்கள். மக்களிடமிருந்து துண்டித்துக் கொண்டு பல்கலைக்கழக துறைகளிலோ சிந்தனைக் குழாம்களிலோ தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் கிடையாது. எனவே, இரண்டாவதாகச் சொன்னது முற்றிலும் தவறு.
வி.சி.கவுடன் கரம் கோர்ப்பது என்பது எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் வேலை செய்வதே. மக்களின் பெருந்திரள் இயக்கம் நடந்து கொண்டிருக்கும்போது விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பது அல்லது அதன் வால் பிடித்துக்கொண்டு செல்வது என்று இல்லாமல் அரசியல் கோட்பாட்டுப் புரிதலின் அடிப்படையில் அதனோடு இணைந்து அதிலிருந்து கற்றுக் கொண்டு அதற்குப் பணியாற்றுவது என்பது மார்க்சிய அரசியலின் அடிப்படை. "கூட்டத்தைக் கண்டு போய் நிற்கிறார்கள்" என்று இதைக் கொச்சைப்படுத்துவது தவறு. அதாவது, முதலாவது குற்றச் சாட்டு பாதி உண்மை, பாதி அவதூறு.
3. சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் மீதான YCLஇன் அரசியல் கோட்பாட்டு நிலைப்பாடு என்ன என்பதை ஆய்வுப்பணி என்ற செயல்தந்திரம் என்ற ஆவணத்திலும், வி.சி.கவுடன் கரம் கோர்க்கும் YCL என்ற ஆவணத்திலும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதில் கூடுதலாக ஒரு செய்தி:
முந்தைய ஆவணம் 2021 செப்டம்பர் 3 நாளிட்டது; இரண்டாவது ஆவணம் மார்ச் 31, 2024 நாளிட்டது. இரண்டுக்கும் இடையே கால இடைவெளி கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள். இதிலிருந்து வி.சி.கவை ஆதரிப்பது என்பதில் ycl கடந்து வந்த பாதையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
சாம்சங் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினோம் என்பது அப்பட்டமான பொய். எங்கு, எப்போது எப்படி என்று தெளிவுபடுத்துங்கள். சாம்சங் போராட்டத்தின் அரசியல் தலைமை பற்றிய பல விவாதங்கள் நடந்தன. 21ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் போராட்டத்தின் தன்மை எப்படி மாறியிருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம். அவ்வளவே.
4. நூலிபான்
இந்தச் சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்தினேன் என்று ஏற்கனவே நான் குழுவில் விளக்கம் சொல்லியிருந்தேன். ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற குழுவினர் 1978ஆம் ஆண்டு சோவியத் ஆதரவில் அமைக்கப்பட்ட ஜனநாயக முற்போக்கு அரசைக் கவிழ்க்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிதி அளித்து உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆப்கானின் பழங்குடிகளைத் திரட்டி நஜிபுல்லா ஆட்சியை வீழ்த்தினர். பின்னர், அமெரிக்காவுக்கே எதிராகத் திரும்பி இறுதியில் இப்போது மீண்டும் ஆட்சியில் உள்ளார்கள்
அவர்கள் ஆப்கானிஸ்தானை மத்தியகாலத்துக்கு பின்னுக்கு இழுக்கிறார்கள். பெண்களுக்கு கல்வி மறுப்பு, ஆண்களைச் சாராமல் வெளியில் போகக் கூட மறுப்பு என்று இஸ்லாமின் ஆகப் பிற்போக்கான போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள், பிரதிநிதித்துப்படுத்துகிறார்கள்.
அதேபோல, இந்தியாவில் இந்துத்துவா என்ற பெயரில் இந்திய சமூகத்தை பழங்காலத்துக்கு இழுக்க முயலும் நூல் அணிந்த பார்ப்பன பயங்கரவாதிகளைக் குறிப்பதாக அந்தச் சொல்லை நான் பயன்படுத்தினேன். அது எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிரான சொல் என்று விளக்குமாறு கேட்டிருந்தேன். யாரும் விளக்கவில்லை. இப்போது கூட விளக்கினால் புரிந்து கொள்கிறேன்.
5. தலித் உள்-ஒதுக்கீடு (sub-quota) - தலித் உள்-பிரிவினை (sub-categorization)
இந்திய மக்களை தனித்தனி சாதிகளாகப் பிரித்து ஆள விரும்பும் சனாதன சக்திகளின் செயல்திட்டம் சாதிவாரியாக இட ஒதுக்கீடு வழங்குவது. பட்டியல் சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர், மூவருண சாதியினர் என்ற வகுப்புகளாக இந்தியச் சமூகம் பிரிந்துள்ளது. இது அண்ணல் அம்பேத்கர் கண்டறிந்த வரையறை. அதாவது மூவருணத்தினரின் மேலாதிக்கத்துக்கு எதிராக தலித்துகளும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் (பகுஜன்) ஒன்றிணைந்து போராட வேண்டும்.
சாதி அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்துக்களால் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுபவர்கள் என்ற ஒற்றுமையின் அடிப்படையில் தலித்துகள் இணைந்து போராட வேண்டும் என்பது வி.சி.கவின் கொள்கை. அது சரியானது.
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை வி.சி.க தொடக்கம் முதலே ஆதரித்து வந்துள்ளது, இப்போதும் ஆதரிக்கிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையை ஒழித்துக் கட்ட முயலும் நூலிபான்கள் 10% EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். அவர்கள்தான் இப்போது பட்டியல் சாதியினர் உள்-பிரிவினையையும் செயல்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் அரியானாவின் பார்ப்பன பா.ஜ.க முதல்வர் உள்-பிரிவினையை செயல்படுத்துவதை ஆதரித்து நீங்கள் கொண்டாடியதை விமர்சித்தது சரியானது. EWSஐ ஆதரிப்போம், உள்பிரிவினையை ஆதரிப்போம் என்று உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்துவதை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது என்று தெரியவில்லை.
6. தீண்டாமை - பௌத்தம் - இஸ்லாம்
ஒரு சமூக நிறுவனத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள அதன் வரலாற்று வேர்களைபப் பற்றிக் கற்க வேண்டும் என்பது மார்க்சிய பால பாடம். இந்தியாவில் தீண்டாமையின் தோற்றுவாய் பௌத்தத்தின் வீழ்ச்சியில் இருந்து பார்ப்பனியத்தின் மீள்-எழுச்சியில் இருந்து தோன்றியது என்பதை அண்ணல் அம்பேத்கர் நிறுவியுள்ளார்.
தீண்டாமையிலிருந்து விடுதலை என்பது இந்து மத வெளியேற்றத்தில் உள்ளது. எந்த மதத்துக்கு மாறினாலும் அது பொருத்தமானதுதான். பௌத்தத்துக்கு மாறுவது இந்திய தலித் மக்களின் பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்துக்குப் பொருத்தமானது. அதே நேரம், இஸ்லாமுக்கு மாறுவதை யாரும் எதிர்க்கவில்லை, மறுக்கவில்லை.
இஸ்லாம் மீது வன்மம் எதுவும் இங்கு பேசப்பட்டதாக எனக்கு நினைவில்லை. வேறு எங்கோ கேட்டதை இங்கு கேட்டதாக நினைத்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது பௌத்தத்தின் மீது நீங்கள் பொழிந்த அவதூறுகளையும் வன்மத்தையும் இஸ்லாமோடு நீங்களே பொருத்திக் கொண்டீர்களோ?
7. இந்திய அரசு
இந்தியாவில் அரசுக் கட்டமைப்புக்கு அடித்தளமாக இருக்க வேண்டியது சமூகத்தை இயக்கும் மனு தருமமா அல்லது தொழிலாளர்கள், விவசாயிகள் ஆன பெரும்பான்மை தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு விடுதலை வழங்கும் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படையிலான ஜனநாயகமா என்ற நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் அண்ணல் அம்பேத்கரின் கடும் உழைப்பின் மூலம் உருவானது ஜனநாயகத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
சோசலிச அரசமைப்பு இந்த அரசியலமைப்புச் சட்டத்தை விட மிகவும் உயர்ந்ததாக இருக்கும். ஆனால், இந்த ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம் சோசலிசத்துக்கான முன்தேவைகளை நிறைவேற்ற வழி செய்கிறது. மனுதருமத்தை விட பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது.
இந்திய அரசு இயங்கும் அடித்தளமான அரசியலமைப்புச் சட்டத்தின் உட்பொருளான ஜனநாயகக் கூறுகளை வலுப்படுத்தி, அதில் திணிக்கப்பட்டுள்ள அதை செயல்படுத்தும் சனாதனக் கூறுகளை முறியடித்து உண்மையான ஜனநாயகத்தையும் அதிலிருந்து சோசலிசத்தையும் நோக்கி பயணிக்க வேண்டும் என்று இயங்கியல் கற்பிக்கிறது.
இந்திய அரசு என்பது இன்றைக்கு சனாதன பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. சிபிஎம், சிபிஎ, லிபரேஷன் போன்ற கட்சிகள் அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு கேரளா, மேற்கு வங்கம், திரிபுராவில் ஆட்சி செய்தார்கள்/செய்கிறார்கள். தொழிற்சங்கங்கள் அதன் அடிப்படையில் இயங்குகின்றன. ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி இல்லை என்று இடதுதீவிர அமைப்புகளும் உயர்நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
இதைப் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசு வர்க்க எதிரி என்று பேசுபவர்கள் இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு என்ற இடத்தில் இருக்கிறார்கள்.
8. அண்ணல் அம்பேத்கர் கடவுளா?
அண்ணல் அம்பேத்கரை யாரும் கடவுள் ஆக்கவில்லை. அவர் இந்திய சமூகத்தைப் புரட்சிகரமான முறையில் ஆய்வு செய்து புரட்சிகரமான முறையில் அதை ஜனநாயகமயமாக்க வாழ்நாள் முழுவதும் உழைத்த மகத்தான தலைவர். எப்படி உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு மூலதனத்துக்கு எதிரான போராட்ட சக்தியாக மார்க்சின் மூலதனம் நூல் உள்ளதோ அதே போல இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு சனாதனத்துக்கு எதிரான போராட்ட சக்தியாக அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளும் அரசியலும் உள்ளன என்று கருதுகிறோம். மார்க்சும் கடவுள் இல்லை, அண்ணல் அம்பேத்கரும் கடவுள் இல்லை.
அவர்கள் செயலுக்கு வழிகாட்டும் கோட்பாட்டு ஆசிரியர்கள், தமது செயலின் மூலம் நமக்கெல்லாம் வழிகாட்டும் வரலாற்று ஆளுமைகள். இந்தத் தன்மைகளை வேண்டுமென்றே கொச்சைப் படுத்துபவர்கள் மீது விமர்சனங்கள் வருவது இயல்பே.
பின் குறிப்பு: தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள்
மூலதனம் வாசிப்பைத் தொடர்கிறீர்களா? தொடரவில்லை என்றால் மீண்டும் ஏதாவது ஒரு குழுவில் இணைந்து மார்க்சின் கைப்பிடித்து அரசியல் பயணத்தைத் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக