வி.சி.க - தி.மு.க - த.வெ.க: விமர்சனங்கள்
இரண்டு கேள்விகள் உள்ளன.
ஒன்று தி.மு.கவை விமர்சிக்கக் கூடாதா என்பது
இரண்டாவது தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசி தி.மு.கவின் தலித் அணி போல வி.சி.க நடந்து கொள்ள வேண்டுமா என்பது?
தி.மு.கவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்காக அதைக் கண்டிப்பாக விமர்சிக்க வேண்டும், கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
1. முதலாவதாக, சமூகநீதி, சனாதன எதிர்ப்பு என்ற கொள்கைகளை வைத்துக் கொண்டு அதில் சமரசம் செய்து கொள்வது. பா.ஜ.கவுடன் பேரம் பேசுவது, சாதிய அரசியல் செய்வது, தீண்டாமை வன்கொடுமைகளை கண்டிக்கவோ தண்டிக்கவோ தவறுவது.
2. இரண்டாவதாக, கார்ப்பரேட் ஆதரவு, முதலாளித்துவ ஆதரவு என்ற கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தொழிலாளி வர்க்கத்தின் மீது அடக்குமுறைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுவது.
ஒன்று கொள்கையை மீறி சமரசம் செய்து கொள்வதற்காக, இரண்டாவது மக்கள் விரோத கொள்கைக்காக தி.மு.கவை தொடர்ந்து விமர்சிக்க வேண்டும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். சனாதன எதிர்ப்புக் கொள்கை மீறலுக்கும் முதலாளித்துவ ஆதரவு கொள்கை செயல்பாடுகளுக்கும் எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும்.
விஜய் இது போன்ற விமர்சனங்களை முன்வைத்தாரா? தி.மு.க இந்துத்துவ எதிர்ப்பில் ஊசலாடுகிறது, முதலாளிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கிறது என்று ஒரு சொல்லாவது அவர் பேசவில்லை. அவர் பேசியது குடும்ப அரசியல், ஊழல்.
இந்த இரண்டுமே, வெளிப்படையான சனாதனவாதிகளாக இல்லாமல் நட்டநடுநிலை அரசியல் வேடத்தில் சனாதனம் பேசுபவர்களுக்குப் பிடித்தமான பேசுபொருட்கள்.
எனவே,
- இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வரை
- கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரை
குடும்ப அரசியலை இவர்கள் எதிர்ப்பார்கள். இந்தக் குடும்ப அரசியலின் சமூக வேர்கள் என்ன? அல்லது இந்தக் குறிப்பிட்ட இரண்டு நேர்வுகளிலும் (காங்கிரஸ், தி.மு.க) ஏன் ஒரு குறிப்பிட்ட குடும்ப வாரிசுகள் தலைமைப் பொறுப்புக்கு வருகிறார்கள் என்று பகுப்பாய்வு இல்லாமல் பொத்தாம் பொதுவாக குடும்ப அரசியல் என்று பொங்குகிறார்கள். அதற்குள் விரிவாகப் போகாமல், இந்தக் குடும்ப அரசியல் என்பது சாதிய அரசியலுக்கு எதிரானது என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன்.
இரண்டாவது, ஊழல் எதிர்ப்பு. ஊழல் என்பதும் உயர்நிலை சாதி, இருபிறப்பாளர் வருணத்தினர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருந்து வரும் தலைவர்களை அடிப்பதற்குப் பயன்படுத்தும் பிடித்தமான குச்சி. இந்த இருபிறப்பாளர் சாதிகள் (பார்ப்பனர், பனியா) அவர்களது சமூக நிலையின் மூலம் தொடர்ந்து சமூகத்தின் வளங்களை இந்து சட்டத்துக்குட்பட்டே அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள், ஊழல்வாதிகள் என்றால் அவர்கள்தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.
வாஜ்பாயி, நரசிம்மராவ், ஜெயலலிதா, யோகி ஆதித்யநாத் வரைக்கும் அவர்களது செயல்கள் எதுவும் ஊழல் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு சொத்து சேர்க்கும் உரிமை பிறப்பிலேயே உண்டு. ஆனால், ஒரு கருணாநிதியோ ஆ ராசாவோ சொத்து சேர்த்தால் அது ஊழல், அது இந்து சமூக ஒழுங்குக்கு எதிரானது.
சுருக்கமாக, ஊழல் என்பது அவரவர் குடும்ப/சாதிய/வருண நிலையில் இருந்து கொண்டு, அதை மீறிச் செல்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, தி.மு.க ஊழல் கட்சி என்பதோ குடும்ப அரசியல் என்பதோ நால்வருண சனாதன கருத்தியலின் குற்றச்சாட்டுகள். தி.மு.க சனாதனத்துடன் சமரசம் செய்து கொள்கிறது, முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களைத் தாக்குகிறது என்பதுதான் ஜனநாயக அரசியலின் விமர்சனம். முன்னதை ஆளும் வருணங்கள் (சோ முதல் இன்றைக்கு பத்திரிகையாளர் மணி வரை) தொடர்ந்து செய்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது பிந்தையதை. அதைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.
வி.சி.க தி.மு.கவின் தலித் அணி என்று சொல்வது தி.மு.கவை மிகைமதிப்பிடுகிறது; வி.சி.கவின் அரசியலை குறைத்து மதிப்பிடுகிறது. வி.சி.க தலித் கட்சி இல்லை, அதன் கொள்கைகள் ஜனநாயகத்துக்கான கொள்கைகள், சனாதன எதிர்ப்புக் கொள்கைகள், உழைக்கும் மக்கள் ஆதரவுக் கொள்கைகள்.
கருத்தியல் தளத்தில் தி.மு.கவை விட வி.சி.க முன்னேறிய இடத்தில் உள்ளது. இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் கருத்தியல் உறுதியைக் கொடுத்ததில் வி.சி.கவின் பங்கு தி.மு.கவின் பங்கை விட பல மடங்கு அதிகம்.
எனவே, பாசிச எதிர்ப்பு அரசியலின் மீதோ, இந்தியா கூட்டணி மீதோ (தி.மு.க) சனாதன தாக்குதல் (ஊழல் எதிர்ப்பு, குடும்ப அரசியல் எதிர்ப்பு என்ற வடிவில்) நடக்கும் போது தி.மு.க பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. கருத்தியல் தலைமையாக வி.சி.க பதில் சொல்வது மிகச் சரியானது. அதை அறிவாலயத்தில் எழுதி வாங்க வேண்டிய நிலையில் வி.சி.க இல்லை. அப்படி எழுதிக் கொடுக்கும் நிலையில் தி.மு.கவும் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக