லெனினை வாசித்தல்
மாவோ தனது புதிய ஜனநாயகம் என்ற நூலில் இருபதாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சகாப்தத்தை லெனினிய சகாப்தம் என்று குறிப்பிடுவார். ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளும் என்பது அதன் உள்ளடக்கம்.
இந்த லெனினிய சகாப்தத்தில் லெனினின் பெயர் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? கம்யூனிஸ்ட் கட்சிகளில் அல்லது அதற்கு எதிரான அரசியலில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு லெனின் என்பது ஒரு பெயர் என்பதைத் தாண்டி பெரிதாகத் தெரிவதில்லை. இதற்கு முந்தைய தலைமுறையில் 1960-களில் தொடங்கி 1990-கள் வரை தமிழ்நாட்டில் வளர்ந்தவர்களுக்கு லெனினும் சோவியத் ஒன்றியமும் தவிர்க்க முடியாத பெயர்கள். அரசியல் கல்வியும் அறிவியல் கல்வியும் கொடுத்த வற்றாத அறிவுக் களஞ்சியங்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது அப்போது இருந்த சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த இலக்கியங்கள் பொதுவெளியில் இருந்து மறைந்து போயிருக்கின்றன. பழைய சோவியத் நூல்களில் எஞ்சியவை அல்லது அவ்வப்போது சில பதிப்பகங்கள் வெளியிடும் தனிநூல்கள் இவற்றைத் தாண்டி லெனினின் ஆக்கங்களுக்கு ஒரு பதிப்புத் துறை சந்தை இல்லாமல் போயிருந்தது.
இந்த ஆண்டு, லெனின் தேர்வுநூல்கள் 12 தொகுதிகளை வெளியிடப் போவதாக அடுத்தடுத்து மூன்று அறிவுப்புகள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பதிப்பு செப்டம்பர் மாதம் 12ஆம் நாள் வெளியாகி விட்டது. அடுத்த பதிப்பை என்.சி.பி.எச் நவம்பம் மாதம் 7ஆம் நாள் ரசியப் புரட்சி நாள் அன்று வெளியிடவுள்ளது. மூன்றாவது பதிப்பை பாரதி புத்தகாலயம் ஜனவரி மாதம் வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளது.
இப்போது எதற்கு இந்த வேலை? கெடக்கிறது கெடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில வைய்யிங்கிறது போல உள்ளதே? லெனினுக்கு இந்த ஆண்டு 154ஆவது பிறந்தநாள். 100ஆவது நினைவு நாள். அவர் வாழ்ந்தது நம் நாட்டில் இருந்து 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நாட்டில். அவர் அரசியல் செய்தது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில்.
அவரது எழுத்துகளை இன்று 2024இல் தமிழ்நாட்டில் தமிழில் ஏன் மறுபடியும் பதிப்பிக்க வேண்டும்? சோவியத் ஒன்றியம் இருந்த போது 50 ஆண்டுகளுக்கு முன்னர் லெனின் தேர்வுநூல்கள் 12 தொகுதிகளில் பதிப்பித்தார்கள் என்றால் அதற்குக் காரணம் இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு பற்றி பிற நாடுகளில் பரப்புரை செய்வது என்ற நோக்கம் இருந்தது. இப்போது லெனின் தேர்வு நூல்களை வெளியிடுவதற்கு என்ன நோக்கம் உள்ளது?
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் உள்ளது என்பது மார்க்சியத்தின் ஒரு முதுமொழி. அத்தகைய பொன்னுலகைப் படைத்த நாடுதான் சோவியத் ஒன்றியம். அந்தப் பொன்னுலகத்தை ரசிய உழைக்கும் மக்கள் மத்தியில் கருத்தரிக்க வைத்து அவர்கள் பெற்றெடுப்பதற்கான மருத்துவராக செயல்பட்டவர்தான் லெனின்.
எனவே, லெனினை ஏன் வாசிக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள 150 ஆண்டுகளுக்கு முன்னர் ரசியாவில் இருந்த நிலைமைகளையும் அவை இப்போதைய நம் நாட்டு நிலைமைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். லெனின் தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வின் இறுதியில் விட்டுச் சென்ற ரசியாவின் இல்லை இல்லை சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் என்ன என்பதையும் அது நமக்குத் தேவைப்படுவது பற்றியும் பார்க்க வேண்டும்.
லெனின் பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரசியாவில் பண்ணையடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டது. பெரிய நிலப்பிரபுக்களுடன் அவர்களது நிலங்களுடன் பிணைக்கப்பட்ட ரசிய கிராம சமுதாயத்தின் அடிமைத்தளைகளுக்கான சட்ட ஒப்புதல் நீக்கப்பட்டு விட்டது. அது நீக்கப்பட்ட முறை நிலப்பிரபுக்களுக்கு சாதகமாகவும் நிலப்பிரபுக்களின் ஆட்சியாளனாகிய ஜார் மன்னனின் ஆட்சியை நீட்டுவதாகவும் இருந்தது. நிலப்பிரபுக்களிடமிருந்து விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட விவசாயிகள் தாம் பயிரிட்டு வந்த நிலத்தை தமக்குச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நிலப்பிரபுக்களுக்கு ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டியிருந்தது. மேலும், புராதன ரசிய கிராமச் சமுதாய முறைகளில் இருந்து விடுபட முடியாத தளைகளும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
மறுபக்கம் இந்த மாற்றங்களைத் தூண்டிய நவீன ஆலைகள், வங்கிகள், வணிக நிறுவனங்களின் வளர்ச்சி. இவற்றில் நகர்ப்புறத் தொழிலாளர்கள் நவீன முறையில் கடுமையாக சுரண்டப்பட்டனர். நேரவரம்பின்றி வேலை வாங்கப்பட்டனர். முறையான ஊதியம் மறுக்கப்பட்டனர். அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டனர். கிராமப் புறங்களின் மூடத்தனங்களில் இருந்து தப்பி நகரங்களுக்கு வரும் உழைப்பாளர்கள் உலக்கைக்குப் பயந்து உரலில் விழுந்த கதையாகத்தான் இருந்தது.
லெனின் பிறந்த ரசியா என்பது இவ்வாறு பழைமையின் தளைகளில் சிக்கிக் கொண்டிருந்த அதே நேரம் புதியவற்றின் தாக்குதல்களையும் எதிர்கொண்டிருந்தது. பழமையின் தளை என்பது காலத்துக்கு ஒவ்வாத வழக்கொழிந்து போக வேண்டிய பழக்க வழக்கங்களும் மதச் சடங்குகளும் சமூக அடிமைத்தனங்களும். புதியவற்றின் தாக்குதல் என்பது மூலதனத்தின் உழைப்புச் சுரண்டல்.
இவ்வாறு பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்தது ரசியா.
லெனின் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது அண்ணன் ஜார் மன்னனை எதிர்த்த கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்து செயல்பட்டார். கைது செய்யப்பட்டு மரண தண்டை விதிக்கப்பட்டு ஜார் அரசால் கொல்லப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் லெனினின் தந்தை காலமாகியிருந்தார். இந்நிலையில் இளம் லெனின் கல்லூரியில் புரட்சிகர படிப்பு வட்டங்களில் இணைந்தார். மார்க்சின் மூலதனம் நூலைக் கற்றார். ரசியாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஜாராட்சி ஆதரவு முதலாளிகள், தாராளவாத முதலாளிகள், கிராமப் புறங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அரசியலை முன்னெடுத்த நரோத்னிக்குகள், தொழிலாளர் போராட்டத்தை வழிநடத்த வேண்டும் என்ற சமூக ஜனநாயக வாதிகள் ஆகிய தரப்பினரிடையே மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.
அதில் லெனின் தீவிரமாகப் பங்கேற்றார். அவரது பங்கேற்பின் உச்சக்கட்டமாக 1917ஆம் ஆண்டு ரசியாவின் தொழிலாளர்களும் விவசாயிகளும் படைவீரர்களும் சோவியத்துகள் என்ற தமது அமைப்புகள் மூலமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். அந்த ஆண்டு மார்ச் மாதம் ஜார் மன்னராட்சியைத் தூக்கி எறிந்த கிளர்ச்சிகள், ஒன்பது மாதங்களில் உலகம் இதுவரை கண்டிராத ஒரு புதிய வகை அரசாங்கத்தை நிறுவி விட்டன.
இந்த அரசாங்கம் சோவியத்துகளின் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம். இது நிலத்தில் தனியார் சொத்துடைமையை ஒழித்தது. தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்கியது. வங்கிகளையும் பொதுப் போக்குவரத்தையும் அரசு டைமையாக்கியது. அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவம் ஆகியவற்றை உறுதி செய்தது. உழைக்காமல் உண்ணும் மதவாதிகளையும் மத நிறுவனங்களையும் இழுத்து மூடியது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் படைவீரர்களையும் அதிகாரத்தில் வைத்தது.
சமூகத்தில் சரிநிகர் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் சம உரிமை அளித்ததோடு மட்டுமின்றி மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் ஆகியவற்றில் பெண்களுக்குத் தேவையான வசதிகளை உரிமைகளாக வழங்கியது.
காலங்கடந்து பழசாகிப் போன பழக்கங்களை தூக்கி எறிந்து சமூகத்தை நவீனப்படுத்தியது. ரசியாவிலும் ரசியாவின் அண்டை நாடுகளிலும் வாழும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டது. அனைத்து தேசிய இனங்களும் தமது வளர்ச்சிப் போக்கில் வளர்வதற்கான சுதந்திரங்களை உறுதி செய்தது.
இப்போது சொல்லுங்கள். 1950இல் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பெற்ற நாம், ஆண்டவன் குடியிருப்பதற்காக ஒரு கோயிலைக் கட்டிய பிறகு அதில் பேய் குடிபுகுந்து விட்ட நிலையில் நாமும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த ரசியாவின் நிலையில் இல்லையா? தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்று சட்டத்திலும் பாடப் புத்தகங்களிலும் பொறித்த பிறகும் தீண்டாமை நடைமுறையில் தொடர்வதை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறோம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடும் அதே நேரம் மக்களை படிநிலையாகப் பிரித்து வைத்து தேக்கத்தில் தள்ளியிருக்கும் சாதியக் கட்டமைப்பை எவ்வாறு தகர்க்கப் போகிறோம்?
இவை வழக்கிழந்து போயிருக்க வேண்டிய பழங்காலத்தின் மீத மிச்சங்கள். இதனிடத்தில் வந்திருக்கும் நவீன பொருளாதாரமோ இன்னும் கொடுமையை சுமத்துகின்றன. ஒரு பக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருமணங்கள் நடத்தும் பெருமுதலாளிகள், இன்னொரு புறம் மாதம் 20,000 ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்தி எதிர்காலத்துக்கும் திட்டமிடும் பெரும்பான்மை மக்கள்.
வயதுக்கேற்ற எடை இல்லாத, வயதுக்கேற்ப வளராத குழந்தைகள், இரத்த சோகை பீடித்த குழந்தைகள். கல்வியும் மருத்துவமும் பொதுச் சுகாதரமும் மறுக்கப்படும் பெருவாரியான மக்கள்தொகை.
வேலை கிடைத்து ஒரு நிறுவனத்தின் சேர்ந்தாலும் அங்கு வரம்பில்லாத வேலை நாள், சங்கமாக ஒன்றிணையும் ஜனநாயக உரிமை மறுப்பு, செய்த வேலைக்கு நியாயமான ஊதியம் மறுப்பு என்று ஒரு புறம், மறுபுறமோ வேலை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்று வேலையின்மையின் கொடுமை.
இத்தகைய ஒரு கொடும் நரகத்தில் இருந்து இழப்பதற்கு ஏதுமில்லாத உழைப்பாளி மக்கள் எப்படி தமது வாழ்வை தாமே ஆட்சி செய்யும் பொன்னுலகத்தை எவ்வாறு படைக்க முடியும்?
இதற்கு லெனினின் எழுத்துக்கள் எப்படி உதவ முடியும்?
பெரும்பான்மை உழைக்கும் மக்களான விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த உரிமைகளும் இல்லாத எந்த நம்பிக்கையும் இல்லாத ஆட்சியாளரை எதிர்த்தால் மரண தண்டனையை எதிர்கொள்கிற ஒரு நாட்டில் தனது வாழ்வைத் தொடங்கி பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு ஆட்சியதிகார உரிமையை வென்றெடுத்த நாட்டில் தனது வாழ்வை இறுதி செய்த லெனினின் வாழ்வும் பணியும் அதைப் பதிவு செய்யும் அவரது ஆக்கங்களும் நமக்கான வழிகாட்டிகளாக உள்ளன.
லெனினின் நூல்களைப் படித்தால் நமது கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்து விடுமா? நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்து விடுமா? என்றால் இல்லை. சமூகத்தை மாற்றியமைப்பது, சமூகத்தின் நோய்களுக்கு தீர்வு காண்பது என்பது ஒரு மருத்துவரின் வேலையைப் போன்றது. அந்த வேலைக்கான கல்வி சமூகத்தைப் பற்றிய பொதுவான புரிதலைத் தரும், பல்வேறு வகை நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்ற வழிகாட்டல்களைத் தரும். அது பல்வேறு நாடுகளில் திரட்டிய அறிவுச் செல்வங்களையும் கற்றுக் கொள்ளத் தரும். ஆனால், அதைக் கற்ற பிறகு நாம் செயல்படும் நாட்டின் குறிப்பான நிலைமைகள் என்ன, அங்குள்ள தட்பவெப்பநிலை என்ன, மக்களின் உணவுப் பழக்கங்கள் என்ன, அவர்களது மரபுவழி நோய்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது மருத்துவரின் பணி. அமெரிக்காவில் அமெரிக்கருக்கு பரிந்துரைத்த அதே நோய்த்தீர்ப்பு முறையை அப்படியே இங்கு பயன்படுத்த முடியாது.
ஆனால், அமெரிக்காவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி மனித உடற்கூறியலும் உடலின் இயக்கமும் வளர்சிதை மாற்றமும் ஒன்றுதான். சுற்றுச் சூழல் சிறிதளவு வேறுபடலாம் சமூக நிலைமைகள் பெருமளவு வேறுபடலாம்.
எனவே, அமெரிக்காவில் வெற்றிகரமான ஒரு மருத்துவரின் ஆய்வுகளையும் எழுத்துகளையும் செயல்பாடுகளையும் கற்றுக் கொண்டால் அவர் எப்படி ஒரு குறிப்பிட்ட நிலைமையில் குறிப்பிட்ட சிக்கலுக்கு மருத்துவவியலின் பொதுவான கோட்பாடுகளை பயன்படுத்தி நோயைத் தீர்த்து வைத்தார் என்ற அணுகுமுறையைக் கற்றுக் கொள்ள முடியும். அதே அணுகுமுறையை தமது மருத்துவப் பணியிலும் பயன்படுத்தி மக்களுக்கு நோய்களிலிருந்து நிவாரணம் வழங்க முடியும்.
அதே போல, ரசியா என்ற பெரிய நாட்டில் (நிலப்பரப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடு) அதன் பழங்கால நோய்களுக்கு மருத்துவம் பார்த்து நவீன கால கேடுகளுக்கும் தீர்வுகளைக் கண்டறிந்து முன்வைத்து அவற்றை சமூகத்தின் போராட்ட நடைமுறையுடன் இணைத்து புதிய பொன்னுலகத்தைப் படைக்க ரசிய சமூகத்துக்கு மருத்துவச்சியாக இருந்த லெனினின் செயல்பாடுகளில் இருந்தும் அவரது எழுத்துகளில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு நாடு மற்றொரு நாட்டிடமிருந்து பாடம் கற்க முடியும், கற்க வேண்டும் என்கிறார் கார்ல் மார்க்ஸ்.
லெனின் தலைமை வகித்து கட்டமைத்தை சோவியத் ஒன்றியம் லெனினின் எழுத்துக்களை தொகுத்து தொகுதி நூல்களாக வெளியிட்டது. அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 33+12 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இவை இப்போது இணையத்தில் மின்நூல்களாகக் கிடைக்கின்றன.
நான் ஒரு மார்க்சிய லெனினியக் குழுவில் மார்க்சியத்தைக் கற்றுக் கொண்டு அரசியல் பயின்று கொண்டிருந்தபோது, லெனினின் எழுத்துக்களை ஒரு குறிப்பு நூலாகப் பயன்படுத்தினேன். லெனினின் 33 தொகுதிகளின் உள்ளடக்கப் பக்கங்களை மட்டும் தொகுத்து ஒரு நூலாக ஒரு தோழர் தயாரித்திருந்தார். அதை எடுத்தால் எந்தத் தலைப்பு எந்தத் தொகுதியில் உள்ளது என்று அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆடு புல் மேய்வதைப் போல நுனிப்போல் மேய்ச்சலாக லெனினின் தொகுதி நூல்களின் அனைத்து தொகுதிகளையும் படித்துக் கொண்டிருந்தேன். அவற்றின் குறிப்புகளையும் பதிவு செய்து வைத்திருந்தேன்.
பின்னர் லெனினின் தனிநூல்களாக வந்த பின்வரும் நூல்களை படித்து குறிப்பெடுத்து விவாதித்து தோழர்களுடன் குழுவாகக் கற்றேன். குறிப்பாக, லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும் என்ற நூல் மிகவும் நெருக்கமான நூலாக மாறி விட்டது.
பறக்கை என்ற ஊரில் ஒரு வில்லுப்பாட்டு நடப்பதுண்டு. அந்த ஊரில் ஏழு தலைக்கட்டுகள். ஒரு தலைக்கட்டு முதலில் வருவார். அவரை காத்திருக்க வைக்கமுடியாது, எனவே வில்லுப்பாட்டு உடனே தொடங்கி விடும். அதன்பிறகு பல நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தலைக்கட்டு வருவார். அவருக்கு நடுவில் இருந்து கதை கேட்க முடியாது, எனவே வில்லுப்பாட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்கும். (முதலாமவர் கோபித்துக் கொள்ள மாட்டாரா என்று கேட்காதீர்கள், இதுதான் கதை). அடுத்து மூன்றாமவர் வருவார், வில்லுப்பாட்டு மீண்டும் தொடங்கும். இப்படியே ஏழாவது தலைக்கட்டு வரும் போது ஏழாவது முறையாக வில்லுப்பாட்டை முதல்ல இருந்தே தொடங்குவார்கள். அதற்குள் இரவு முடிந்து போயிருக்கும். வில்லுப்பாட்டும் தொடக்கத்திலேயே முடிந்து போகும்.
அப்படித்தான் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நூலைப் படித்தோம். அந்த நூலைப் படித்து விவாதிப்பது என்று எந்த நேரத்தில் முடிவு செய்தோமோ, முதல் இரண்டு இயல்களை வாசித்து விவாதிக்க ஒரு நாளில் திட்டமிடுவோம். அன்றைக்கு குழுவில் உள்ள நான்கு பேரில் ஒருவர் வந்திருக்க மாட்டார், அல்லது இன்னொருவர் படித்துக் கொண்டு வந்திருக்க மாட்டார். இன்னொரு நாள் தள்ளி வைப்போம். ஒரு வழியாக ஒரு அமர்வு நடந்து முடிந்து விடும். அடுத்த அமர்வுக்குள் குழுவில் புதிதாக ஒருவர் இணைக்கப்படுகிறார். அவர் மூன்றாவது இயலில் இருந்து வாசிக்க முடியுமா? எனவே, மீண்டும் முகவுரையில் இருந்து வாசிப்பைத் தொடங்கத் திட்டமிடுவோம். இதற்கிடையில் இந்தக் குழுவில் இருந்த ஒருவர் வேறொரு குழுவுக்கு மாறிச் சென்றிருப்பார். ஓரிரு மாதங்களில் நான்காவது அத்தியாயத்துக்கு வந்திருப்போம். அப்போது குழுவுக்கு புதிதாக இரண்டு பேர் வந்து சேருவார்கள், ஏற்கனவே இருந்தவர்களில் ஒருவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பார்.
இப்படியே பல மாதங்களாக முதல் இயல்களையே வாசித்துக் கொண்டிருந்தோம்.
அந்த நூலில் பல ஆளுமைகளின் பெயர்கள் – அதில் லெனின் தரப்பு லெனினின் எதிர்த்தரப்பு – லெனினின் தரப்பிலேயே அவரிடமிருந்து சிறிதளவு முரண்படுபவர்கள்
பல பத்திரிகைகளின் பெயர்கள் – அதிலும் மேலே சொன்னது போல பல தரப்புகள்
வரலாற்று நிகழ்வுகள்
இடம் பெற்றிருக்கும். இவை எல்லாவற்றையும் தாண்டிப் போனால்தான் அது பேசும் அரசியலின் ஆழத்தைக் கற்றுக் கொள்ள முடியும். இப்படி பறக்கை வில்லுப்பாட்டு போல படித்து படித்து அந்த நூலை கிட்டத்தட்ட மனப்பாடம் செய்யும் நிலைக்கு நான் வந்து விட்டேன்.
முன்னதாக, லெனினின் நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என்ற நூலை படித்து விவாதித்தோம், அது நான் வாசித்த முதல் மார்க்சிய நூல். அதிலும் ரசிய அளவைகளும் ரசியப் நிறுவனங்களின் பெயர்களும் வந்தாலும் அவற்றை மொழிமாற்றி இடம் மாற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்தத் தொடக்க ஆண்டுகளிலேயே லெனினின் நான்கு முதன்மையான ஆக்கங்களை Peoples Publishing House தனி நூல்களாக ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்ததை வாங்கிக் கொடுத்தார் ஒரு தோழர். அவற்றின் தமிழ் பெயர்கள்
1. என்ன செய்ய வேண்டும்? What is to be done?
2. ஓரடி முன்னே, ஈரடி பின்னே! One Step Forward, Two Steps Back
3. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் Imperialism – the Highest Stage of Imperialism
4. அரசும் புரட்சியும் – State and Revolution
மூன்றாவது நான்காவது நூல்களையும் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு என்ற நூலைப் போலவே திட்டமிட்டு படித்து குறிப்பெடுத்து குழுவாக விவாதித்துக் கற்றுக் கொண்டோம். இரண்டாவது நூல் ஒரு தனிப்பிறவி. அதைப் படிப்பவர்கள் தனி அறிவைப் பெறுவார்கள், ஆனால் அதற்கான தனி முயற்சி தேவை.
ஏனென்றால், அது வரலாற்றில் மிக முதன்மையான நிகழ்வை அது நிகழ்ந்த ஒரு சில மாதங்களுக்குள் அது தொடர்பான பதிவுகளின் அடிப்படையில் நுணுக்கமாக ஆய்வு செய்து அதில் இருந்த அரசியல் வேறுபாடுகளை வெளிப்படுத்தும் நூல்.
ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (அப்போது அதன் பெயர் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) இரண்டாவது அகில ரசியக் காங்கிரஸ் 1903ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு ஓராண்டுக்கு முன்னர் லெனின் என்ன செய்ய வேண்டும்? என்ற நூலை எழுதியிருந்தார். இஸ்க்ரா என்ற அரசியல் பத்திரிகையை தொடங்கி நடத்தும் குழுவில் முன்னணி பங்கு வகித்திருந்தார். எனவே, இஸ்க்ரா போக்கு என்பது அன்றைய கம்யூனிஸ்ட் வட்டங்களில் நிலைபெற்று விட்டிருந்தது.
இரண்டாவது காங்கிரசைப் பற்றிச் சொல்கிறீர்களே, முதல் காங்கிரசில் என்ன நடந்தது என்று கேட்டால். முதல் காங்கிரஸ் நடந்து கட்சிக்கான தலைமைக் குழுவைத் தேர்ந்தெடுத்தவுடனேயே ஜார் மன்னனின் அரசு கூண்டோடு அனைவரையும் கைது செய்து விட்டது. அந்த முயற்சி கருவிலேயே கலைந்து போனது.
எனவே, இரண்டாவது காங்கிரசை போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் வெளிநாட்டில் நடத்தினார்கள். பெல்ஜியத்தில் பிரஸ்சல்சில் தொடங்கிய காங்கிரஸ் ஒரு வாரத்துக்குப் பிறகு போலீஸ் உளவாளிகளின் தொந்தரவால் இலண்டனுக்கு மாற்றப்பட்டு அங்கு இன்னும் பத்து நாட்கள் நடந்து முடிந்தது.
இந்தக் காங்கிரசில் அரசியல் வேறுபாடுகள் கட்சியின் விதிகளை வகுப்பதில், ஒரு குறிப்பிட்ட பத்திரிகை பற்றி முடிவெடுப்பது, தலைமைக் குழுவைத் தேர்ந்தெடுப்பது என்ற அமைப்புசார் வடிவங்களில் வெளிப்பட்டது. இறுதியில் ஒட்டுமொத்தக் கட்சியும் இரண்டு பிரிவுகளாக பிளவுண்டது. அவற்றில் பெரும்பான்மை பிரிவினர் (போல்ஷ்விக் என்றும், சிறுபான்மை பிரிவினர் மென்ஷ்விக் என்றும் அழைக்கப்படலாயினர். இந்தப் பிளவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீடித்தது. 1917 புரட்சி தொடர்பான கேள்விகளில் பிரதிபலித்தது. தொழிலாளர் விவசாயி படைவீரர் சோவியத்துகளின் ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்பட்ட பிறகும் தீவிரமான எதிர்ப்புப் போர்களாக வெடித்தது.
இந்தப் பிளவைப் பற்றிய நுணுக்கமான ஆய்வுதான் இந்த நூல். இந்த நூல் லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 ஆக இடம் பெறுகிறது.
இந்த நூலை படிக்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துப் படித்து முடித்தேன்.
குறிப்பிட வேண்டிய இன்னொரு நூல்,
Materialism and Empirio Criticism – பொருள்முதல்வாதம் – அனுபவவாத விமர்சனம் என்பது. இது லெனினின் தத்துவ நூல்களில் தலையாயது. மார்க்சியத்தின் இயக்கியவில்பொருள்முதல்வாதத் தத்துவம் நவீன இயற்பியல் கண்டுபிடிப்புகளுடன் முரண்படவில்லை என்பதை வாதப் பிரதிவாதங்கள் மூலம் நிறுவும் நூல். இந்த நூலும் லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் இடம் பெறவில்லை.
இந்த இரண்டு விதிவிலக்குகளைத் தவிர லெனினின் படிக்க வேண்டிய முதன்மையான ஆக்கங்கள் அனைத்தும் லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் இடம் பெற்று விட்டன. பொருள்முதல்வாதம் – அனுபவவாத விமர்சனம் என்ற நூலை அலைகள் பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது.
நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என்ற நூலை என்.சி.பி.எச் தமிழில் வெளியிட்டுள்ளது.
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் – மூன்று உள்ளடக்கக் கூறுகள், கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்துடன் அவரது கருத்துநிலைகள் என்ற கட்டுரைகளை மூலதனம் நூலை வாசிப்பதற்கான தயாரிப்பாக பல குழுக்களில் வாசித்து விவாதித்திருக்கிறோம்.
தொகுப்பாகச் சொன்னால், லெனின் தேர்வு நூல்களை தொகுக்கத் தொடங்குவதற்கு முன்னர் அவரது முதன்மையான படைப்புகளை
1. அரசும் புரட்சியும்
2. ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்
3. என்ன செய்ய வேண்டும்?
4. நாட்டுப்புற ஏழை மக்களுக்கு
5. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் – மூன்று உள்ளடக்கக் கூறுகள்
6. கார்ல் மார்க்ஸ்
ஆகியவற்றை குழுவாக வாசித்து விவாதித்து கற்றுக் கொண்டிருக்கிறேன். மற்ற ஆக்கங்களான
1. ஓரடி முன்னே ஈரடி பின்னே
2. பொருள்முதல்வாதம் – அனுபவவாத விமர்சனம்
ஆகியவற்றைத் தனி நூல்களாக வாசித்திருக்கிறேன்.
ரசிய சமூகஜனநாயகவாதிகளின் இரு பணிகள், எங்கிருந்து தொடங்குவது, ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு செயலுத்திகள், பண்டவரி குறித்து, சொற்பமாயினும் சிறந்ததே நன்று ஆகியவற்றையும் படித்திருக்கிறேன். குறிப்பாக, பணவரி குறித்து என்ற கட்டுரையை சீனா பற்றிய ஆய்வுக்காக வரிக்கு வரி படித்து குறிப்பெடுத்திருக்கிறேன்.
அதன் பிறகு லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் என்பதை தொகுக்கத் தொடங்கினேன். அவற்றில் 7ஆவது தொகுதியை பாரதி புத்தகாலயத்தில் பி.டி.எஃப் ஆகப் பெற்று திருத்தங்களைச் செய்து அனுப்பினேன். அது ரசியாவில் நவம்பர் புரட்சி நடந்த நாளில் இருந்து அடுத்த 4 மாதங்களில் எழுதிய கட்டுரைகள், அறிக்கைகள், உரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக இருந்தது. அதை முடித்து அனுப்பியது 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள். அதற்குமேல் அச்சுப் படியில் திருத்தம் போடுவதற்கு எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. மேலும் தொகுதி 7 புரட்சி நடந்த பிறகான பணியைப் பற்றியது. எனக்குப் புரட்சிக்கு முந்தைய நிகழ்வுகள்தான் அக்கறைக்குரியனவாக இருந்தன, இருக்கின்றன. ஏதோ ஒரு விந்தையான காரணத்துக்காக லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் 6 தொகுதிகள் (50%), லெனினின் இறுதி ஆறு ஆண்டுகள் (மொத்த அரசியல் வாழ்வில் 20%) பணியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் 5, 6 1917 ஆம் ஆண்டில் மட்டும் ஜனநாயகப் புரட்சிக்குப் பிந்தைய கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக்கான தயாரிப்பு பற்றிப் பேசுகின்றன. தொகுதி 4 கூட முதல் உலகப் போருக்குப் பிந்தைய ரசியா பற்றிப் பேசுகின்றன.
கறாராகப் பேசுவதானால், இன்னும் ஜனநாயகப் புரட்சியே நடந்திராத நமது நாட்டுக்கு 1905 ரசிய ஜனநாயகப் புரட்சிக்கு முந்தைய லெனினின் செயல்பாடுகள் அக்கறைக்குரியனவாக உள்ளன. அது அவரது அரசியல் வாழ்வில் 12 ஆண்டுகளைக் (40%) கொண்டது. அதனை இரண்டே தொகுதிகளில் (16.7%) முடித்துக் கொள்கிறது இந்தத் தேர்வு. இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து ஜனநாயகப் புரட்சியில் செயலுத்திகள், கட்சி ஒற்றுமை, தேசிய இனச் சிக்கல் ஆகியவற்றைப் பேசும் தொகுதி 3ஐயும் இணைத்துக் கொண்டால் அது 1914க்கு வந்து விடுகிறது. அதாவது லெனினின் 20 ஆண்டு அரசியல் வாழ்வை (மொத்தத்தில் 66.67%) மூன்று தொகுதிகளில் (25%) அடைத்து விடுகிறது.
தொகுதி நூல்களை எடுத்துக் கொண்டால் இந்தக் காலகட்டத்தில் 33 தொகுதிகளில் 20 தொகுதிகள் உள்ளன (அதாவது 66% அரசியல் வாழ்வு பற்றி 60% தொகுதிகளில் – நியாயம்தானே).
தேர்வு நூல்களை இவ்வாறு தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அந்த ஆசிரியர்கள்தான் சொல்ல வேண்டும். நாம் ஊகிக்கத்தான் முடியும்.
என்னைக் கேட்டால் பின்வரும் ஆக்கங்களை தேர்வு நூல்களில் சேர்ப்பேன்.
1. தொகுதி 1
மக்களின் நண்பர்கள் யார்? சமூக-ஜனநாயக வாதிகளை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்? - 1894 – தொகுதி 1 129 – 326 (200 பக்கங்கள்)
2. தொகுதி 2
a. பிரெடரிக் எங்கெல்ஸ் – 1895 – தொகுதி 2 15–28 (14 பக்கங்கள்)
b. ஆலைத் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் அபராதங்கள் தொடர்பான சட்டத்துக்கான விளக்கம் – 1895 – தொகுதி 2 29–73 (44 பக்கங்கள்)
c. தோர்ன்டன் தொழிற்சாலையின் உழைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் – 1895 – தொகுதி 2 – 81 – 86 (5 பக்கங்கள்)
d. சமூக ஜனநாயகக் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி)க்கான ஒரு திட்டம் – வரைவு, விளக்கம் – தொகுதி 2 – 93-121 (28 பக்கங்கள்)
e. புதிய தொழிற்சாலைச் சட்டம் – தொகுதி 2 – 267-315 (48 பக்கங்கள்)
f. ரசிய சமூக ஜனநாயகவாதிகளின் பணிகள் – தொகுதி 2 – 323-354 (30 பக்கங்கள்)
g. ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி – இயல் 1 – தொகுதி 3, 36–69 (33 பக்கங்கள்)
கருத்துகள்
கருத்துரையிடுக